செவ்வாய், 31 மே, 2011

மருத்துவ காப்பீட்டுத்திட்டமும் முடக்கம் : மாற்றம் கொண்டு வர அரசு ஆலோசனை

தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில், உறுப்பினர்கள் சேர்க்கும் பணி, மார்ச் முதல், முடக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில், புதிய காப்பீட்டுத் திட்டத்தை கொண்டுவர, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த தி.மு.க., ஆட்சியில், 2009 ஜூலையில், கருணாநிதி பெயரில் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாய் வருமானத்துக்கு குறைவான குடும்பத்தினர் உறுப்பினர்களாக சேரலாம். இவர்களுக்கான மருத்துவ காப்பீடு, மாதாந்திர பிரிமியம் தொகையை அரசே செலுத்தும். காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினராக சேருவோர், உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அதிக செலவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென்றால், தனியார் மருத்துவமனையில் தரமான சிகிச்சை பெறலாம். சிகிச்சைக்கான கட்டணத்தில், ஒரு லட்சம் ரூபாயை அரசே செலுத்தும். மீதி தொகையை, சிகிச்சை பெறுபவர் கட்ட வேண்டும். தமிழகத்தில், 16 பெரிய அரசு மருத்துவமனைகளில், நான்கு மருத்துவமனைகளில் மட்டுமே நவீன சிகிச்சை கருவிகள் உள்ளன. இதனால், அனைத்து நோய்களுக்கும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாது என்பதால், தனியார் பங்களிப்புடன் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து, உயிர் காக்கும் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும், நவீன வசதிகள் கொண்ட, ஆறு தனியார் மருத்துவமனைகளில், அரசு காப்பீட்டுத் திட்ட சிகிச்சைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மாநகரங்களில், 15 மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, "ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. ஆண்டுக்கு, 600 கோடி ரூபாய், அரசின் சார்பில் ஸ்டார் ஹெல்த் நிறுவனத்திற்கு செலுத்தப்படுகிறது. தற்போதைய நிலையில், 1.34 கோடி குடும்பத்தினர் உறுப்பினர்களாக பதிந்து, ஸ்மார்ட் அட்டை பெற்றுள்ளனர். இவர்களுக்கு, 2012 வரை காப்பீடு உள்ளது. சென்னையில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், மற்ற மாவட்டங்களில் மாவட்ட கலெக்டரின் அதிகாரத்திற்கு உட்பட்டும், மாவட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன. இவற்றில், உரிய சான்றுகள் பெற்று, நிபந்தனைகள் அடிப்படையில் அரசு வேலை நாட்களில் உறுப்பினர்கள் சேர்க்கப்படுவர். இந்நிலையில், சட்டசபைத் தேர்தலில் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், மார்ச் 1 முதல், புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படவில்லை. "மீண்டும் மே 16 முதல் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுவர்' என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மே 16க்கு பிறகு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடக்கவில்லை. மாவட்ட அலுவலகங்கள் எந்த உத்தரவுமின்றி மூடிக்கிடக்கின்றன. இதனால், தி.மு.க., அரசு கொண்டுவந்த காப்பீட்டுத் திட்டம் முடக்கப்பட்டதா அல்லது மீண்டும் செயல்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து, ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவன மண்டல அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:சட்டசபைத் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததையொட்டி, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பை நிறுத்த சுற்றறிக்கை வந்ததால், அலுவலகங்களை மூடினோம். பின், புதிய அரசு வந்தபின் எங்களுக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. அதனால், உறுப்பினர் சேர்ப்பு அலுவலகங்களை திறக்கவில்லை. ஏற்கனவே உறுப்பினர்களாக சேர்ந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும். திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை தொடர்கிறது. அதற்கு நாங்கள் பணம் செலுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார். மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்கு, "புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.,' என பெயர் மாற்றி, அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. திட்டத்தில் பல மாற்றங்கள் செய்யவும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தற்போதைய ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மீண்டும் நீடிப்பதா அல்லது வேறு நிறுவனங்களையும் இணைப்பதா என சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசீலனை செய்கின்றனர்.

- நமது சிறப்பு நிருபர் -
kunjumani - Chennai ,இந்தியா
2011-05-31 03:19:13 IST Report Abuse
உப்பு தின்னவன் தண்ணி குடித்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்கள் தமிழக வாக்காளர்கள். தமிழகத்தில் ஜனநாயகம் மிஸ்கேரேஜ் ஆகிவிட்டது

மருத்துவ காப்பீட்டுத்திட்டமும்  முடக்கம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக