வியாழன், 19 மே, 2011

முழுக்க, முழுக்க காரணம் காங்கிரஸின் பேர அரசியல்தான்.

மிழக தேர்தல் களத்தில் மிக வலிமையான கூட்டணி என வர்ணிக்கப்பட்ட தி.மு.க. கூட்டணிக்கு ஆரோக்கிய மான வெற்றியை மக்கள் தரவில்லை. இது எதனால் ஏற்பட்டது என தி.மு.க. கூட்டணியில் 10 இடங்களைப் பெற்று போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

தி.மு.க. கூட்டணிக்கு மிகப்பெரிய தோல்வியை தந்துள்ளார்கள் தமிழக மக்கள். இந்த தேர்தல் முடிவு எதனால் ஏற்பட்டது என கருதுகிறீர்கள்?

திருமா: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதை மக்கள் விரும்பாமல்தான் இப்படி ஒரு முடிவை தந்துள்ளதாக நான் கருதுகிறேன். தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு என்பது, ஒரு கூட்டணி அரசு அமைவதற்கான அடிப்படையிலேயே அமைந்தது. அதாவது கூட்டணிக்கு தலைமைத் தாங்கிய தி.மு.க., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கத் தேவை யான 119 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. மிகக் குறைந்த எண்ணிக்கையில் தி.மு.க. போட்டியிட்டால் தான், கூட்டணி ஆட்சி அமையும் என கணக்கிட்டே தனது பேர அரசியலையும் மிரட்டல் அரசியலையும் தொகுதிப் பங்கீட்டில் நடத்தி அதற்கேற்ப 63 இடங்களை தனது தகுதிக்கும் மீறிப் பெற்றது காங்கிரஸ். இது, அரசியல் ஆர்வலர் கள் மத்தியில் மட்டுமல்லாது, பொது மக்க ளிடையேயும் தி.மு.க. கூட் டணி மீதான அவநம்பிக் கையை ஏற் படுத்தியது. தி.மு.க. கூட் டணி வெற்றிப் பெற்றால் தமி ழகத்தில் ஒரு குழப்பமான நிலை உருவாகும். இது நாட்டுக்கு நல்ல தல்ல என்று உணர்ந்து தான் இந்த மாறுபட்ட முடிவை மக்கள் வழங்கி விட்டனர். இதற்கு முழுக்க, முழுக்க காரணம் காங்கிரஸின் பேர அரசியல்தான்.


ஏற்கனவே 2006 தேர்தலின் போது, பெரும்பான்மை இடங்கள் கிடைக்கப் பெறாத நிலையில் காங்கிரஸின் தயவில் தான் தி.மு.க. ஆட்சி நடத்த வேண் டியதிருந்தது. அதனைப் பயன்படுத்தி நேரடியாகவும் மறைமுகமாகவும் தி.மு.க.வுக்கு எண்ணற்ற நெருக்கடி களை தந்தது காங்கிரஸ். காங்கிரஸின் இந்த நெருக்கடிகள் மக்களிடம் ஒரு அருவருப்பான மன நிலையையே உருவாக்கியது. இந்த சூழலில் மீண்டும் அப்படி ஒரு முடிவை வழங்கிடக் கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருந் திருக்கிறார்கள் என்றே நான் உணர்கிறேன். ஆக, ஒரு புறம் ஊழல் புகார் களைக் கூறிக் கொண்டே, மறுபுறம் தங்களுக் கான பேர அரசியலை காங்கிரஸ் நடத்தியதை மக்கள் ரசிக்கவில்லை. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் செய்தது வெளிப்படையான பிளாக் மெயில் அரசியல். பிளாக் மெயில் அரசியல் மூலம், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி யை நிலைநிறுத்தி தமிழகத்தை கைப்பற்றிடலாமென கனவு கண்ட காங்கிரஸுக்கு சம்மட்டி அடி கொடுத்து பாடம் புகட்டியுள்ளனர் மக்கள். காங்கிரஸின் கனவை தகர்க்க வேண்டி... ஒட்டுமொத்தமாக தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க தவறிவிட்டனர் மக்கள். ஆக, காங்கிரஸால் ஏற்பட்ட தோல்வி இது.

குடும்ப அரசியல், அலைக்கற்றை ஊழல், மின் வெட்டு, விலைவாசி உள்ளிட்ட பல பிரச்சினைகள்தான் இந்த தோல்விக்கு காரணம் என்கிறார்களே?


திருமா: இந்த வாதம் அவ்வளவு பொருத்த மானதாக இல்லை. கலைஞரின் குடும்ப உறுப்பினர்கள் இன்று நேற்று அரசியலுக்கு வந்தவர்கள் அல்ல. கலைஞரின் குடும்பமே அர்ப்பணிப்புடன் அரசிய லுக்கு வந்துள்ளது. உழைக்காமலும், போராடாமலும் அரசியல் பலனை அவர்கள் அடைந்து விடவில்லை. இது மக்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் குடும்ப அரசியல் என்பது காரணமாக இருக்க முடியாது. அப்படி கூறுவது சொத்தை வாதம். குடும்ப அரசியலால் ஒரு கட்சியை மக்கள் வெறுப்பார்கள் என்றால் நேரு குடும்பத்தைத்தான் முதலில் மக்கள் வெறுத்திருக்க வேண்டும். ஆனால், 60 வருடங்களாக நேரு குடும்பத்தை, அவர்களது குடும்ப அரசியலை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்களே...! வெறுக்க வில்லையே! அரசியலில் தொடர்ந்து அந்த குடும்பத் திற்குதான் மக்கள் வெற்றியை தந்து கொண்டுமிருக் கிறார்கள். அதனால், குடும்ப அரசியலை எல்லாம் தங்களின் முடிவுகளுக்கு ஒரு அளவுகோலாக மக்கள் வைப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால், 2006 தேர்தலிலும் குடும்ப அரசியலை பற்றித்தான் செல்வி ஜெயலலிதா பேசினார். ஆனால், தி.மு.க.விற்குத்தானே வெற்றியை தந்தனர் மக்கள். அதேபோலத்தான், எல்லா தேர்தல்களிலும் ஊழல் குற்றச்சாட்டு, விலைவாசி, மின்வெட்டு எதிரொலிக்கத்தான் செய்திருக்கிறது. எந்த தேர்தலில் இந்த பிரச்சினைகளெல்லாம் இல்லாமல் இருந்திருக்கின்றன. ஊழல் குற்றச்சாட்டுதான் தி.மு.க. கூட்டணியின் வெற்றியை பாதித்தது என்றால்... செல்வி ஜெயலலிதா மீதும் இன்றும் ஊழல் வழக்கு நடந்து வருகிறது. ஆக, மேற்சொன்ன பிரச்சினைகள் எல்லாம் தோல்விக்கு காரணங்கள் அல்ல. காங்கிரஸின் பிளாக்மெயில் அரசியல், புதிய தலைமுறையினரிடம் மிகுந்துள்ள சினிமா மோகம், சாய்ந்தால் ஒரே பக்கம் சாய வேண்டும் என்கிற மக்களின் மனநிலை... ஆகியவையே தி.மு.க. கூட்டணியின் தோல்வி.


அப்படியானால் காங்கிரஸை உதறி எறிந்திருந்தால் இந்த தோல்வி தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்கிறீர்களா?


திருமா: உண்மைதான்! காங்கிரஸை தூக்கி எறிந்து விட்டு... அ.தி.மு.க.வைப் போல 160, 170 இடங்களில் தி.மு.க. போட்டியிட்டிருந்தால், அதன் மீது மிகுந்த நம்பிக்கை மக்களுக்கு ஏற் பட்டிருக்கும். அப்போது கலைஞர் செய்துள்ள மக்கள் நலத்திட்டங்களே தி.மு.க.வை ஆட்சியில் மீண்டும் அமர்த்தியிருக்கும். காங்கிரஸின் பேரத்தால் உருவான கூட்டணி ஆட்சி என்கிற தோற்றத்தால் மக்கள் நலத்திட்டங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டன. அதனால், காங்கிரஸால் ஏற்பட்டுள்ள விளைவுகளால் தானே தவிர... செல்வி ஜெயலலிதாவை காமராஜரின் வாரிசு என்று நம்பி அ.தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை.


காங்கிரஸின் மிரட்டல், உருட்டல் அரசியலால் விளைந்த தோல்வி என்கிறீர்கள். சரி! ஆனால், அரித்மேடிக் கால்குலேஷன்படி பார்த்தால் தி.மு.க. கூட்டணி தானே வலிமையாக இருந்தது. அந்த வலிமை எங்கே சென்றது?


திருமா: காங்கிரஸ் நடத்திய மிரட்டல் அரசியலால், தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் தொண்டர்களிடையே நம்பகத்தன்மை சீர் குலைந்து போனது. பரஸ்பரம் கூட்டணி கட்சிகள் அனைத்தும் வெற்றிபெற யாரும் தீவிரமாக களப்பணியாற்றவில்லை. இதனை தேர்தல் நேரத்தில் உணர்ந்தோம். ஆனாலும் அதனை சரிசெய்ய முடியவில்லை. இப்படி நம்பகத்தன்மை சீர்குலைந்து போனதால், அரித்மேடிக் கால்குலேஷன் தவறிப் போனது.


பா.ம.க.வும் விடுதலை சிறுத்தைகளும் ஓரணியில் இருப்பதை மக்கள் விரும்பாததால்தான், இரு சமூகத்தின் வாக்குகளும் மாற்று சமூகத்தின் வாக்குகளும் சிதறிப் போய் தி.மு.க. கூட்டணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தன என்கிறார்களே?


திருமா: இது ஏற்புடையதல்ல. இதுதான் உண்மையென்றால் தென்மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றிருக்க வேண்டுமே! ஆக, இது காரணமல்ல! மேலும் பா.ம.க.வும், வி.சி.யும் ஓரணியில் இருந்ததால்தான் வடமாவட்டங்களில் தி.மு.க. கூட்டணி இந்தளவுக்காவது வெற்றிபெற முடிந்தது.


தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி இனியும் தொடரும் என கருதுகிறீர்களா?


திருமா: இனியும் தொடர வேண்டுமா என்பதே என் கேள்வி. இதனை தி.மு.க.தான் முடிவு செய்ய வேண்டும்.


பத்து இடங்களில் சிறுத்தைகள் போட்டி யிட்டு அனைத்திலும் தோல்வியடைந்திருப்பதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

திருமா: அரசியல் அதிகாரமில்லாமலே மக்களுக்கு உழையுங்கள், போராடுங்கள் என்று எங்களுக்கு மக்கள் ஆணையிட்டிருப்பதாகவே கருதுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக