வெள்ளி, 8 ஏப்ரல், 2011

Khushboo பட்டினியையே சாகடித்தவர் கருணாநிதி: கோட்டக்குப்பத்தில் குஷ்பு பிரசாரம்

:""அ.தி.மு.க., ஆட்சியில் பட்டினிச் சாவுகள்தான் நடந்தது. கருணாநிதி ஆட்சிக்கு வந்தபிறகு, பட்டினியையே சாகடித்தார்,'' என, நடிகை குஷ்பு பேசினார்.வானூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் புஷ்பராஜை ஆதரித்து, நடிகை குஷ்பூ நேற்று வேன் மூலம் பிரசாரம் செய்தார். கோட்டக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் அருகில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் குஷ்பு பேசியதாவது:
சிறுபான்மை மக்களுக்காக உழைப்பவர் முதல்வர் கருணாநிதி. இஸ்லாமியர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு கொடுத்துள்ளார். அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 5 சதவீதமாக உயர்த்திக் கொடுப்பார். அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் பல தொழிற்சாலைகள் மூடிக் கிடந்தன. தி.மு.க., ஆட்சியில் முதல்வர் கருணாநிதி எத்தனையோ புதிய தொழிற்சாலைகளை திறந்துள்ளார். ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். விவசாயிகளுக்கு 7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளார். மேலும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மின் மோட்டார் கொடுத்துள்ளார். கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அவர் செய்துவரும் நல்ல திட்டங்கள் தொடரும்.அ.தி.மு.க., ஆட்சியில் பட்டினிச் சாவுகள்தான் நடந்தன. கருணாநிதி ஆட்சிக்கு வந்தபிறகு, பட்டினியையே சாகடித்தார். அவர், மக்களைப் பற்றி மட்டுமே யோசிக்கிறார். விழுப்புரத்தில் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.இப் பகுதியில் சரியான மருத்துவமனை வசதி இல்லை. இங்குள்ளவர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்குதான் செல்ல வேண்டி உள்ளது. அங்கு, புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கிறார்கள். தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றால், இப்பகுதியில் படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்படும். தொகுதியில் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்படும். ஆறாவது முறையாக கருணாநிதி முதல்வராக தேர்வு செய்யப்பட, தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தமிழகத்தின் எதிர்காலமும், உங்கள் எதிர்காலமும் நன்றாக இருக்க வேண்டுமானால், கருணாநிதி தலைமையில் மீண்டும் தி.மு.க., ஆட்சி வரவேண்டும்.இவ்வாறு குஷ்பு பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக