வெள்ளி, 8 ஏப்ரல், 2011

திராவிட இயக்கங்கள் ஒன்றுபடுகின்ற சூழல் விரைவில் வரும்

மதுரை, ஏப்.7: திராவிட இயக்கங்கள் ஒன்றுபடுகின்ற சூழல் விரைவில் வரும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.  மதுரையில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:  தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக நான் சொல்லவில்லை. தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது பாரபட்சமில்லாமல், நீதிமன்றம்போல் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். நீதிமன்றங்களேகூட சில சமயங்களில் தடுமாறும் நிலையில், தேர்தல் கமிஷன் தன் மீது எந்தவிதமான விமர்சனமும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு அமோக வெற்றி வாய்ப்பு உள்ளது. திமுக ஆட்சியின் சாதனைகளை மக்கள் அறிந்து கொண்டுள்ளனர். உதாரணமாக கலைஞர் வீடு வழங்கும் திட்டம் மூலம் இதுவரை 1.10 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மீதமுள்ள வீடுகளைக் கட்டித் தருவார்கள் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளதை இங்கு சுட்டிக்காட்டியுள்ளீர்கள். அவருக்கு கிடைத்த தகவல்படி அவர் அதைச் சொல்லியிருக்கலாம். அது துல்லியமாகவும் இருக்கலாம்.  மதிமுகவில் உள்ள இரண்டாம் நிலைத் தலைவர்கள் திமுகவுக்கு ஆதரவாகப் பேசி வருகிறார்களே என்று கேட்கிறீர்கள். இந்தத் தேர்தலில் பல இடங்களில் மதிமுக தொண்டர்கள் நேரடியாகவும், மானசீகமாகவும் திமுகவுக்கு ஆதரவு தருகின்றனர். திராவிட இயக்கங்கள் ஒன்றுபடுகின்ற சூழல் விரைவில் வரும் என்பதற்கான அடையாளம்தான் இது.  தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவுவது பற்றி எதிர்க்கட்சிகள் குறைகூறி விமர்சித்து வருகின்றன. மின்பற்றாக்குறை என்பது ஒரு தொடர் நிகழ்வு. வீடுகள், தொழிற்சாலைகளுக்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தேவையைவிட உற்பத்தி குறைவாக இருப்பதால் பற்றாக்குறை ஏற்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் மின்னுற்பத்தியை அதிகரிக்க ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் செய்த தவறு எங்கள் தலையில் விழுந்திருக்கிறது.  மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மின்திட்டங்கள் வரிசையாக நிறைவேற்றப்பட்டு மின்பற்றாக்குறை அகற்றப்படும்.  தமிழகத்தை மீட்டெடுக்கப் போவதாக ஜெயலலிதா பிரசாரம் செய்து வருகிறார். முதலில் அவர் பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கிலிருந்து தன்னுடைய நகைகளை மீட்கட்டும்.  மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி செல்வாக்கு மிகுந்தவராக இருக்கிறார். மதுரை மக்களுக்குத் தேவையான நன்மைகளை அவர் செய்து வருகிறார். இதைக் கண்டு பொறுக்காமல் ஜெயலலிதாவும் அவரது அணியினரும் அவர் மீது தேவையில்லாமல் புகார்களைக் கூறிவருகின்றனர்.  தேர்தல் ஆணையத்தில் ஏற்கெனவே அதிகாரியாக பணி செய்து ஓய்வு பெற்றுள்ள சிலரின் உதவியைக் கொண்டு தேர்தல் ஆணையம் இப்போது செயல்பட்டு வருவதாக பேச்சு அடிபடுகிறது. அது உண்மையாக இருக்கக் கூடாது.  அரசு அதிகாரிகள் சிலர் அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக சொல்லப்படுகிறதே என்று கேட்கிறீர்கள். அரசியலில் மட்டுமல்ல; அதிகாரிகள் மத்தியிலும் எட்டப்பர்கள் உண்டு.  கோவையில் அதிமுக கூட்டணித் தலைவர்கள் பங்கேற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, திமுக குடும்பக் கட்சி என்று பேசியிருக்கிறார். குடும்பக் கட்சியாக இருக்கலாம். ஆனால், சந்திரபாபு நாயுடு போல குடும்பத்தை குலைத்த கட்சி திமுக அல்ல.  இந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா முதல்வராகவும், விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்பார் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியுள்ளார். பண்ருட்டி ராமச்சந்திரன் பெயரை குறிப்பிடும்போது மறைந்த அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் ஞாபகம்தான் எனக்கு வருகிறது. அவர் மறையும்போது என்னை அழைத்து, எனக்குப் பதிலாக எங்கள் சமூகத்திலிருந்து ஓர் அமைச்சரை நியமிக்க வேண்டுமென்றால் பண்ருட்டி ராமச்சந்திரனைப் போன்ற துரோகிகளை போட்டு விடாதீர். எனக்கு விரோதியாக இருந்தாலும் கடலூர் இளம்வழுதி போன்றவர்களை நியமியுங்கள் என்று சொன்னார். நான் அவருடைய பேச்சைக் கேட்காததால் அனுபவிக்கிறேன்.  தமிழகத் தேர்தல் முடிவுகள் மத்தியில் எதிரொலிக்குமா? எப்போது என்று கேட்கிறீர்கள். நிச்சயம் எதிரொலிக்கும். எப்போது எனில் எதிரொலிக்கும்போது தெரியும் என்றார்.  பேட்டியின்போது மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, கனிமொழி எம்.பி., கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக