வெள்ளி, 8 ஏப்ரல், 2011

Jaffna Municipal ஊழல் எதுவும் இல்லை – முதல்வர்

யாழ் மாநகரசபைக்குள் ஊழல் எதுவும் இல்லை – முதல்வர்

யாழ் மாநகரசபை ஊழல் நிறைந்ததாகக் காணப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நவீன வசதிகள் கொண்ட வர்த்தகக் கட்டடத் தொகுதியொன்று அமைக்கப்படுவதைப் பொறுக்காதவர்கள் வேண்டுமென்றே பொய்க்குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி பணிகளைக் குழப்பி வருவதாகவும் அவர் கூறினார்.
“யாழ்ப்பாணத்தில் வெளியாகும் ஒரு பத்திரிகை யாழ் மாநகரசபைக்குள் ஊழல் நிறைந்துள்ளதாக செய்திகளை வெளியிட்டு வருகிறது. இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை” என்று திட்டவட்டமாக மறுத்தார் அவர்.
“யாழ்ப்பாண வர்த்தகர்களின் கோரிக்கைக்கு அமையவே யாழ்ப்பாணத்தில் ஐந்து மாடிக் கட்டடம் அமைக்கப்படுகிறது. இதன்மூலம் மக்களும், வர்த்தகர்களும் பெரும் நன்மையடைவர்” என்று தெரிவித்த அவர், யாழ் மாநகர சபை யாழ்ப்பாண மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த கட்டடத்தை அமைத்துள்ளதாகவும், இது சில விசமிகளுக்குப் பிடிக்கவில்லை என்றும் கூறினார்.
“யாழ்ப்பாணத்தில் இவ்வாறான நவீன கட்டடத்தைக் கட்டி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வழிமுறைகளை ஏற்படுத்தும் யாழ் மாநகரசபையின் நடவடிக்கையைப் பிடிக்காத சிலர் யாழ் மாநகர சபைக்குள் ஊழல் நிறைந்துள்ளதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பொய் வதந்திகளைப் பரப்பி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“ஐந்து மாடி நவீனக் கட்டடத் தொகுதியை அமைப்பது தொடர்பாக அனைவரிடம் வெளிப்படையாகக் கேட்டோம். அப்போது ஒரு தமிழ் முதலீட்டாளர் முன்வந்து யாழ் மாநகரசபைக்கு எந்தவித செலவும் இல்லாமல் அந்த கட்டத்தைக் கட்ட முன்வந்தார்” என்று தெரிவித்தார்.
இந்த நவீன சந்தைக் கட்டடத் தொகுதி மக்களுக்குப் பயன்பெறும் விதத்தில் அமைவதை விரும்பாத சிலர் மாநகர சபை ஊழல் செய்வதாகவும், இதற்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் கூறிவருவதாகவும் தெரிவித்த அவர்,
“உண்மை எனது பக்கம் உள்ளது. எந்த விசாரணையையும் எதிர்கொள்ள நான் தயார்” என்றார் ஆணித்தரமாக.
யாழ் மாநகர சபையைத் தாம் பொறுப்பேற்கும்போது 2 உழவியந்திரங்கள் மட்டுமே இருந்ததாகவும், தற்போது வாகனப் பிரிவு சீர்செய்யப்பட்டு 22 உழவியந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறிய அவர், நல்லதொரு நிலைக்கு மாநகர சபையைக் கட்டியெழுப்பிச் செல்லும்போது அதனைப் பொறுத்துக்கொள்ளாத சில விஸமிகள் ஊழல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி பணிகளுக்கு தடையேற்படுத்துவதாகவும், யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக