ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

கலைஞர்: அம்மையார் அவர்களே என்னை நன்றாக திட்டுங்கள். வசைபாடி பொழியுங்கள்.

என்னை திட்டியவர்கள், என்னை வசைபொழிந்தவர்கள் யாராக இருந்தாலும் இன்று இல்லாவிட்டாலும் நாளை எனக்கு பிறகு என்னை வாழ்த்தத்தான் போகிறார்கள் என, கலைஞர் பேசினார்.
விழுப்புரத்தில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் கலைஞர்,
எத்தனை எத்தனை தோழர்கள், எத்தனை எத்தனை இளைஞர்கள், எத்தனை எத்தனை முதியவர்கள் வளர்த்த இயக்கம் இந்த இயக்கம். என்னுடைய அருமை நண்பர் திருமாவளவன் இங்கே பேசும்போது, எதிர்க்கட்சித் தலைவரைப் பற்றி உங்களுக்கு அது தெரியுமா. இது தெரியுமா என்று கேட்டார். சரித்திரம் தெரியுமா என்று கேட்டார். திராவிடர் இயக்கத்தினுடைய மூலம் தெரியுமா என்று கேட்டார். திராவிடர் இயக்கத்தை வளர்த்தவர்கள் யார் யார் என்று தெரியுமா என்று கேட்டார். இதெற்கெல்லாம் ஒரே பதில் வந்திருக்கும். கேள்வி வடிவத்தில். திராவிடர் இயக்கம் என்றால் என்ன என்று யார் இடத்திலே இவர் கேட்டாரோ அவரிடத்திலே இந்த கேள்வி வந்திருந்தால் யாரும் ஆச்சரியப்பட தேவையில்லை.
திராவிடர் இயக்கத்தை அழிக்க இன்றைக்கு புறப்பட்டிருக்கிற ஒரு அம்மையார், திராவிடர் இயக்கத்தை அழித்தே தீருவேன். பெரியார் உருவாக்கிய சுயமரியாதையை, அண்ணா உருவாக்கிய லட்சிய தாகத்தை, இவைகளையெல்லாம் அப்படியே புரட்டி போட்டு இந்த இயக்கத்தை அழிப்பதற்கு புறப்பட்டிருக்கிற ஒரு அம்மையார், உங்களிடத்திலே ஆதரவு கேட்கிறார் என்றால் எதற்கு,. ஆட்சி செலுத்துவதற்காக அல்ல. இந்த ராஜ்யத்தை தான் பிடிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. அவருடைய மூல நோக்கம். திராவிட இயக்கத்தை வீழ்த்த வேண்டும். அந்த நோக்கத்துக்கு ஆதரவாக பெரும்படை. பத்திரிகை படை. அவரிடத்திலே இருக்கிறது. அந்த படையை நாம் ஒன்றும் செய்வதற்கு இல்லை. காரணம். ஜனநாயகத்தில் பத்திரிகை சுதந்திரத்தை என்றைக்கும் நாம் கட்டுப்படுத்துவது இல்லை. பத்திரிகை சுதந்திரத்தை நாம் வளர்த்தோமே தவிர, அதை வதைத்தவர்கள் அல்ல. அந்த சுதந்திரம் இருக்கிறது என்ற ஒரே காரத்தினால் எதை வேண்டுமானாலும் எழுதுகிறார்கள். எந்த செய்தியை வேண்டுமானாலும் போடுகிறார்கள்.
இங்கே தம்பி திருமா கேட்டதைப்போல், என்னைப் பற்றி அவர்கள் எழுதுகின்ற செய்திகள், எழுதுகின்ற கதைகள், என்னைப்பற்றி செய்கின்ற பிரச்சாரங்கள் இவைகள் எல்லாம் என்னை எதுவும் செய்து விடவில்லை. நான் அதற்கு மாறாக வளர்ந்து கொண்டே இருக்கிறேன். அவர்கள் வசைபாடட்டும். வசைபாடட்டும்.
அண்ணா ஒருமுறை கேட்டார் சட்டமன்றத்தில், எதிர்க்கட்சிக்காரர்கள் அண்ணாவை தாக்கிப் பேசும்போது, அண்ணா சொன்னார். முதல் அமைச்சராக பொறுப்பேற்ற அண்ணா சொன்னார். என்னை இவ்வளவு காலம் திட்டி திட்டித்தான், இங்கே வந்து உட்கார வைத்திருக்கிறீர்கள். இன்னும் திட்டுகிறீர்கள் என்னை எங்கே உட்கார வைக்க உத்தேசம் என்று கேட்டார். அதைத்தான் நான் கேட்க விரும்புகிறேன். இவர்கள் திட்டாவிட்டால், இவர்கள் வசைபாடாவிட்டால், நம்முடைய டாக்டர் ராமதாஸ் வாயால் இவ்வளவு வாழ்த்து கிடைத்திருக்குமா. இவர்கள் என்னை இவ்வளவு கேவலமாக பேசாவிட்டால், நம்முடைய திருமாவளவன் வாயால் இவ்வளவு பாராட்டுகள் கிடைத்திருக்குமா. நம்முடைய காதர் மொய்தீன் அவர்கள் இவ்வளவு போற்றி புகழ்ந்திருப்பாரா.
அம்மையார் அவர்களே என்னை நன்றாக திட்டுங்கள். வசைபாடி பொழியுங்கள். நீங்கள் திட்ட திட்ட, நீங்கள் வசைபாடி பொழிய பொழிய எனக்கு அன்பால், பாசத்தால், பூரிப்பால், உறவால், உண்மையான இதயத்தால் புகழ்பாட, புகழ்பாடி பொழிய டாக்டர் அவர்களும், திருமா போன்றவர்களும்
இருக்கிறார்கள். எனவே நான் அவற்றையெல்லாம் பொருட்படுத்துவதில்லை.


இந்த அன்பு, இந்த உறவு இருந்தால் போதும். என்னை பாராட்டியவர்கள், என்னை திட்டியவர்கள், என்னை வசைபொழிந்தவர்கள் யாராக இருந்தாலும் இன்று இல்லாவிட்டாலும் நாளை எனக்கு பிறகு என்னை வாழ்த்தத்தான் போகிறார்கள். என்னை இழிவுப்படுத்தியவர்கள் எல்லாம், ஒரு காலத்திலே என்னை கேவலப்படுத்தியவர்கள் எல்லாம், அதற்காக கண்களிலே கண்ணீர் துளிகளை ஏந்தி கொண்டு வந்து, வருந்திய காலத்தை நான் பார்த்திருக்கின்றேன். நான் அதற்காக கவலைப்படவில்லை. அதனால்தான் வாழ்க வசவாளர்கள் என்று அண்ணா சொன்ன அந்த வைர வாக்கியத்தை திரும்ப திரும்ப சொல்ல விரும்புகின்றேன்.
எனக்கு இவர்கள் வாழ்த்தினாலும், வாழ்த்தாவிட்டாலும் இவர்கள் நம்மை தாக்கினாலும், தாக்காவிட்டாலும், என்னுடைய உற்றார், உறவு என்னுடைய பக்கத்திலே அமர்ந்து இருக்கிறது. என்னுடைய உற்றார் உறவினர்கள் என் எதிரே அமர்ந்திருக்கிறீர்கள். உங்களைவிடவா. உங்களை விட்டா அவர்களுடைய உறவை நாடப் போகிறேன். இல்லை.
இப்படிப்பட்ட நேரத்தில் நான் கேட்டுக்கொள்வது நமக்கு காரியம் பெரிது. வீரியம் பெரியதல்ல என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக