புதன், 27 ஏப்ரல், 2011

பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி

சென்னை: நாளை அமையப் போகும் ஆட்சி மீண்டும் கருணாநிதி ஆட்சியே. ஆறாவது முறை தமிழ் இன இராவணனின் ஆட்சிதான் அது! அதைச் சொன்னதற்காகவும், பரம்பரை யுத்தத்தை முடித்து வைத்ததற்காகவும் அம்மையாருக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! என்று தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.


இதுதொடர்பாக வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டின் எல்லா திசைகளுக்கும் சென்று தமிழ் மக்களிடையே உள்ள உணர்வுகளை நேரில் படித்தறியும் வாய்ப்பு கடந்த 19 நாள்கள் சூறாவளி தேர்தல் பிரச்சாரப் பயணத்தின்மூலம் நமக்குக் கிடைத்தது.

பெரும்பாலான மக்கள் குறிப்பாக ஏழை, எளிய, கிராம, நகர மக்கள், சிறுபான்மையினர் உள்பட கூடிய கூட்டத்தில் கண்ட அலை மீண்டும் கருணாநிதி ஆட்சியே என்ற சாதனைச் சரித்திரத்தின் தொடர்ச்சியை ஆதரித்தே பரவலாக இருக்கிறது என்பது அனைவருக்குமே புரிந்தது.

சென்ற சட்டமன்றத் தேர்தலில் கலைஞரின் தி.மு.க. கதாநாயகனான தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளால் இதையெல்லாம் கொடுக்க முடியுமா அதெல்லாம் நடவாது என்று பிரச்சாரம் செய்து தோல்வியுற்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா இத்தேர்தலில், அந்தச் சாதனைகளைக் கண்டு மிரண்டு போய், நாமும் அவ்வழியில் சென்றாவது

நடைபெற முடியாத வைகளைக்கூட இலவசங்களாகத் தருவோம் என்றார்; கலைஞரின் இப்போதைய கதாநாயகியான தேர்தல் அறிக்கையை காப்பியடித்தாவது வெற்றி பெற்றால் போதும் என நினைத்து, ஆடு களையும், மாடுகளையும், குடிநீரையும், அரிசியையும் இலவசமாகத் தருவோம் என்று கூறியாவது தாங்கள் மீண்டும் குறுக்கு வழியில் பொய்யுரை பரப்பியதன் மூலம் வில்லன் ஆட்சிக்கு வர முயற்சித்ததே அவரது முதல் (தார்மீக) தோல்வியாகும்!.

இரண்டாவது, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை அத்தனைப் பேருக்கும் கொடுக்க முடியுமா இவரால் என்று முன்பு கேட்ட அதே அம்மையார், இப்போது கருணாநிதி ஒரு கோடியே 62 லட்சம் இலவச தொலைக்காட்சிகளைக் கொடுத்ததாகக் கூறுகிறார்; அவற்றை இவர் மக்கள் வரிப் பணத்திலிருந்துதானே கொடுத்தார்? என்று கேட்டதே அவரது தோல்வி பயத்தின் வெளிப் பாடேயாகும்!.

10 ஆண்டுகள் இரு முறை முதல்வராக இருந்த அவர் இப்படி பேசியது அசல் கேலிக்குரிய ஒன்றல்லவா?.

எவர் ஆட்சிக்கு வந்தாலும், மக்களது வரிப் பணத்திலிருந்துதானே எந்த மக்கள் நலத் திட்டங் களையும் செய்ய முடியும்? எவரும் அவரது சொந்தப் பணத்திலிருந்து செய்வதில்லை; செய்யவும் முடியாது என்பது அரசியல் அரிச்சுவடி அல்லவா?

முதல்வர் கருணாநிதி தனது கதை, வசனம்மூலம் வரும் ஊதியத்தைக்கூட மக்களுக்கும், பொதுநலத் திற்கும்தானே தருகிறார்?.

முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா அம்மை யாரிடமே தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் மூலமாக தனது திரைப்பட வருமானத்தை சுனாமி உதவியாக அளித்தாரே, மறந்துவிட்டதா?.

அன்று முதல் அவர் தொடர்ந்து தனது வருவாயை அறக்கட்டளை மூலம் அறப்பணிகளுக்குத் தானே செலவழிக்கிறார்!.

தனது கோபாலபுரம் வீட்டினைக்கூட மருத்துவ மனைக்காக கொடையாகக் கொடுத்தவர் எப்படி ஒரு அரசுக்குரிய திட்டங்களை சொந்த பணம் மூலம் நடத்த முடியும்?.

அதே நேரத்தில், ஜெயலலிதா தனது கொடநாடு எஸ்டேட்டில் அங்கிருக்கும் ஏழை எளிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடந்துபோக ஓர் அவசரத்திற்குக்கூட பயன்படுத்த வழியைக்கூட விட மறுத்து உச்சநீதிமன்ற ஆணைக்குப் பிறகு அல்லவா அப்பிரச்சினைக்கு வழி பிறந்தது! (இன்னமும் கேட் திறக்கப்படாத நிலைதான்). மக்கள் வாக்காளர்கள் புரிந்துள்ளார்கள்.

எனவே, வேதனைகள் தொடரக் கூடாது; சாதனைகள் தொடரவேண்டும் என்றே நினைக்கிறார்கள்!.

முன்பு அம்மையார் ஆட்சி பற்றி பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்ற பாரதியார் பாட்டைப் பாடிய இடதுசாரி நண்பர்கள், அவற்றை ஒரு 10, 12 இடங்களுக்காக அதை வசதியாக மறந்துவிட்டு, இன்று அ.தி.மு.கவின் பக்கம் போய் அதற்கு ஆலவட்டம் சுற்றும் அவலம் உள்ளது!.

சகோதரர் மானமிகு வைகோவையும், அவரது கட்சியையும் அவமானப்படுத்திய ஆணவம் + அகம்பாவம் மீண்டும் அரியணை ஏறக்கூடாது என்பதில் சகோதரர்களின் கோபம் நியாயமான ஒன்றல்லவா?.

பொடா புண் ஆரும் முன்பே அம்மையாரை ஆதரித்து நின்றவரை இப்படி அசிங்கப்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றம் அல்லவா? இவரை மிஞ்சியதாகக் காட்டிக் கொள்ள ஈழத் தமிழர் விசுவாசிகள் சிலர், எரிந்த வீட்டில் பிடுங்கியது லாபம் என்று ஈழத் தமிழர் ஆதரவுப் போர்வையில் இரட்டை இலைக்கு ஆதரவு தேடி திடீர் அவதாரம் எடுத்துள்ளது வெட்கக்கேடு அல்லவா?.

இதனை நன்கு புரிந்துள்ளார்கள் தமிழர்கள்!.

நாளை அமையப் போகும் ஆட்சி மீண்டும் கருணாநிதி ஆட்சியே. ஆறாவது முறை தமிழ் இன இராவணனின் ஆட்சிதான் அது! அதைச் சொன்னதற்காகவும், பரம்பரை யுத்தத்தை முடித்து வைத்ததற்காகவும் அம்மையாருக்கு நன்றி! நன்றி!! நன்றி!! என்று கூறியுள்ளார் வீரமணி.
English summary
Dravida Kazhagam leader K.Veeramani has thanked Jayalalitha for paving way for DMK's win in Assembly polls. She has listed out the wrongdoings of Jaya and her past rules.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக