புதன், 27 ஏப்ரல், 2011

நெருப்பாறுகளையும் தாண்டி வாகை சூடும் திமுக-கி.வீரமணி நம்பிக்கை

உணர்ச்சி கொப்பளிக்கும் அநீதிகள் கண்டு, உணர்ச்சிவயப்படாமல், அறிவுபூர்வ, ஆக்க பூர்வ, சட்டரீதியான பரிகாரங்களை நோக்கிச் செல்லும் நல்ல முடிவுகளை திமுக தலைமையும், அதன் குழுவும் எடுத்து சோதனைகளை உரங்களாக்கி தனது வெற்றிப் பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்யும் என்று தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.


இதுதொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:

சாதனைகளைச் சரித்திரமாக்கிய தி.மு.க., தேர்தல் தொடங்கு முன்பே அரசியல் ரீதியாகச் சந்தித்த சோதனைகளும், வேதனைகளும் தொடரவே செய்கின்றன!

சோதனை, நெருப்பாறு, அடைமழை போன்ற அவதூறுகள், ஆதாரமில்லாத அரசியல் அபாண்டங்கள் அதன் பாதையில் அது பார்த்தவை; பழகியவைதான்!

எதையும் தாங்கும் இதயம் படைத்த தலைமை அதன் தலைமை அண்ணா காலம் முதற்கொண்டு.

மார்பில் பட்ட குத்துக் காயங்களைவிட, முதுகில் பின்னால் இருந்து குத்தியவர்களையும், புண்களையும், ரணங்களையும் கூட தாங்கி, மக்களின் பேராதரவு, மகத்தான நெஞ்சுரம், நீரோட்டத்துடன் எதிர்நீச்சல் போட்டே பழகிய தந்தை பெரியாரிடம் கற்ற வித்தை இவைகளால், நெருப்பாறுகளையும் தாண்டி வாகை சூடிடும் வன்மையுள்ள இயக்கம் தி.மு.க. அதன் தலைவர் மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர்.

அதற்கு மேலும் ஒரு சோதனைதான். 2ஜி அலைக்கற்றை என்ற நடக்காத கற்பனை இழப்புக்கள், ஒரு லட்சத்து 76 ஆயிரம், 2 லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்று கூறிய கோணிப் புளுகன் கோயபெல்ஸ் அவதாரங்கள், குற்றப் பத்திரிகை (சி.பி.ஐ.யினால் தாக்கல்) செய்ததிலே அனுமான, உத்தேச இழப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய் என்று குறிப்பிட்டுள்ள நிலையில், ஏற்கெனவே கூறப்பட்ட ஒரு கோடியே 56 ஆயிரம் கோடி ரூபாய் ஏன் காணாமற் போனது? மூச்சுவிட மாட்டார்கள் புளுகுணி சித்தர்கள்! இந்தத் தொகை குற்றச்சாற்றில்கூட அனுமான இழப்புதான்.

இதில் வலிந்து சேர்க்கப்பட்டுள்ள கலைஞர் டி.வி., அதன் பங்குதாரர்கள் என்றெல்லாம் பார்ப்பன ஊடகங்களும், அரசியல் எதிரிகளும் போட்ட கூச்சல், அதன் காரணமாக கலைஞரின் மகள் என்ற நிலையில் கனிமொழி, துணைவியார் என்பதால் தயாளு அம்மாள் மீது வழக்குப் பாயவேண்டும் என்று இடைவிடாத அரசியல் பிரச்சாரம்.

இதற்கிடையில் கனிமொழி அவர்களுக்கு சம்மன் என்றவுடன், நேற்று ஒரு ஆங்கில நாளேடு, ‘‘அவர்மீது போடப்பட்டுள்ள வழக்கு பலவீனமான வழக்கு’’ என்று தலைப்பிடுகிறது நியாய உணர்வினாலோ, சட்டப் பார்வையாலோ அல்ல.

மாறாக, ஏன் மேலும் பலமாக வழக்குப் போடவில்லை என்ற ஆதங்கத்தினை, அதன் ‘‘அக்கிரகாரக் கவலையை’’ அள்ளித் தெளித்துள்ளது!

வழக்குப் பலவீனமானதா? பலமானதா? அதனுள் நாம் போக விரும்பவில்லை.

ஒன்று நிச்சயம், இதனை தி.மு.க. எதிர்கொள்ளும் சக்தி, வென்று காட்டும் ஆற்றல் சட்ட ரீதியாகவும், நியாயத்தின் அடிப்படையிலும் உண்டு.

ஊடகங்களே, பிராசிக்கியூட்டர்களாக ஆகிடும் விசித்திர நிலையும், அதற்குத் தலைவணங்கும் தம்பிரான்களும் வேறு எங்கும் காணப்பட முடியாத விசித்திரங்கள் இங்கேதான்!

உடனே தி.மு.க. உயர்நிலைக் குழு கூடுவது, அது ஒரு ஜனநாயக அமைப்பு என்பதைக் காட்டுகிறது!

உணர்ச்சி கொப்பளிக்கும் அநீதிகள் கண்டு, உணர்ச்சிவயப்படாமல், அறிவுபூர்வ, ஆக்க பூர்வ, சட்டரீதியான பரிகாரங்களை நோக்கிச் செல்லும் நல்ல முடிவுகளை அதன் தலைமையும், குழுவும் எடுத்து சோதனைகளை உரங்களாக்கி தனது வெற்றிப் பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்யும் என்ற நம்பிக்கை, தாய்க்கழகமான திராவிடர் கழகத்திற்கு உண்டு.

‘‘தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து’’ (குறள் 828)

எனும் குறளை அறியாதவரல்ல குறளோவியக் கலைஞர். கொக்கொக்க கூம்பும் பருவத்தில் செயதக்க செய்வார் பெறத்தக்க வெற்றி பெற்று சோதனைகளை வெல்வார் என்பது உறுதி என்று அவர் கூறியுள்ளார்.
English summary
DK leader K.Veeramnai has said that DMK will defeat the challenges it is facing the last few months with legally. He also said, DMK has the strength and legal arms to overcome the spectrum issue.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக