வியாழன், 21 ஏப்ரல், 2011

பிரபாகரன் பிற்காலத்தில் மட்டும் கெட்டுப்போனவர் அல்ல.

நடேசன்
இலங்கை அரசியல்வாதிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்த புலம் பெயர்ந்த தமிழர்களும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான ஆனந்தசங்கரி மற்றும் புளட் அமைப்பினர் கூட கே. பத்மநாதனை எதிர்ப்பதில் தீவிரம் காட்டுகிறார்கள். இது ஏன் என்பது புரியவில்லை..
விடுதலைப்பலிகளையும் தனி ஈழக்கோட்பாட்டையும் கருத்தியல் ரீதியாக எதிர்த்த எனக்கு, வெறுப்புக்கலந்த பார்வையுடன் கே. பி. யை எதிர்ப்பதன் காரணம் புரியவில்லை. இந்த எதிர்பாளர்கள் எல்லோரும்
வேறு காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் அவரது கோட்பாட்டையும் எவ்வித விமர்சனமும் இன்றி ஏற்றுக்கொண்டவர்கள் தான். மேலும் பிரபாகரன் பிற்காலத்தில் மட்டும் கெட்டுப்போனவர் அல்ல. மற்றவரால் கெடுக்கப்பட்டு சொல்வார் சொல்லு கேட்டு அழிந்து போனவரும் அல்ல. ஒவ்வொரு தவறான விடயத்திலும் பிரபாகரனது தனி முத்திரைதான் வெளிப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்துடன் போர்புரிந்த போதும் சரி இந்தியப் பிதமர் ராஜிவ்காந்தியை கொன்ற போதும் சரி அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களை சங்காரம் செய்த போதும் அவரது செயல்பாடு மன்னிக்கமுடியாதது இவையாவும் இலங்கைத் தமிழ் மக்களை பாதாளம் நோக்கி பிரபாகரன் கைப்பிடித்து கொண்டுவந்த படிகள்.
இந்த விடயங்கள் நடக்கும்போது புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் பிரபாகரனை மேதாவி என போற்றியதுடன் மேதகு என்ற பட்டமும் கொடுத்தார்கள். வன்னிக்குச் சென்று சல்யூட் அடித்தார்கள்.
இந்த நிலையில்தான் கே.பி.யும் இருந்திருக்க வேண்டும். மேலும் கேபி இலங்கையில் இருக்காதது மட்டும் அல்ல நிச்சயமாக எனக்குத் தெரிந்தவரை ஒரு கொலைச் சம்பவத்திலும் அவர் ஈடுபடவில்லை. இந்த நிலையில் கே. பி. 2003 ஆண்டில் இருந்து புலி இயக்கத்தில் இருந்து விலக்கப்பட்டிருந்த தகவலை சகல புலம் பெயர்ந்த விடுதலைப்புலி ஆதரவாளர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த நிலையில் விடுதலைப்புலி இயக்கத்தில் இரத்தக்கறை குறைவாக படிந்த ஒரு மனிதனாக நான் அவரை கருதுகின்றேன்.
இதை விட இலங்கை – மலேசிய அரசாங்கத்தால் கைதியாக்கப்பட்ட ஒருவர் என்ன செய்யமுடியும்.? சயனைட்டை குடித்து இறந்து ஒரு மாவீரனாகி இருந்திருக்கலாம்! என்ன சமாதி இருக்காது. கே பி.யை . இலங்கை அரசாங்கம் சுட்டுத்தள்ளி இருக்கலாம் – அப்பொழுது அதற்காக மேற்கு நாடுகள் இலங்கை அரசை விசாரிக்கவேண்டும் என புலம் பெயர்ந்தவர்கள் ஆர்பாட்டம் செய்திருப்பார்கள். இதனால் யாருக்கு என்ன பயன்? ஓவ்வொரு உயிரும் விலைமதிக்க முடியாதது.
இலங்கை அரசாங்கம் கருணையால் கே.பியை உயிர் வாழ வைத்திருக்கிறது என்று நான் சொல்ல வரவில்லை உணர்வுகளுக்கு அப்பால் உயிரோடு வைத்திருப்புது அரசாங்கத்துக்கு நல்லது. அத்துடன் கே. பி.யின் அழிவுக்கு பயன்படுத்திய மூளையை ஆக்கத்துக்கு பயன்படுத்தலாம் என நினைத்து வைத்திருக்கிறது..
தத்தம் உயிருக்கு விலையதிகம் என்பது புலம் பெயர்ந்தவர்களுக்குப் புரியும் . இந்த உயிருக்காகத்தான் இவர்கள் பொய்களைச் சொல்லி மேற்கு நாடுகளில் தஞ்சம் புகுந்தார்கள். பலர் இலங்கைக்கு செல்லவிரும்பாமல், இன்னும் தங்களைத்தான் இலங்கை அரசாங்கம் தேடிக்கொண்டு இருக்கென்று சொல்லிச்சொல்லி தங்கள் முக்கியத்துவத்திற்கு எண்ணெய் தடவிக் கொண்டிருக்கிறர்கள். சிட்னி வானெலியில (ATBC) விழல் கதை பேசும் ஒருவர் போர்நிறுத்த காலத்தில் கிளிநொச்சியில் சர்வதேசிய விமான நிலையம் அமைந்தால்தான் போவேன் என்றார். போர் முடிந்தபின்பு இலங்கை அரசாங்கம் தன்னைத் தேடுவதாகக் கூறி அவுஸ்திரேலியாவை விட்டு வெளியே போகாமல் இருக்கிறார். இப்படிபட்ட பயந்த மனிதரகள் கே பி.யை விமர்சிப்பதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?
விடுதலைப்புலிகளுக்கு பயந்து தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வன்னியில் ஜிஞ்சா அடித்தார்கள். இந்த நிலையில் கே.பி. மட்டும் ஏன் பிரபாகரனுடன் உடன் கட்டை ஏறி தீக்குளிக்கவேண்டும்?
தமிழ் அரசியல்வாதிகள், கே.பி. அரசியலுக்கு வந்து விட்டால் என்ன செய்வது என்று பயப்படுவது தெரிகிறது.
வந்தால் என்ன?
கே.பி.க்கு வன்னியில் நிலம் கொடுத்தது கூட பலருக்கு உறுத்துகிறது. இந்த நிலங்கள் விடுதலைப் புலிகள் வைத்திருந்தவை. இதைவிட விடுதலைப்புலிகளில் இருந்த குடும்பங்களை கவனிக்கவே இந்த உதவிகள்தரப்படுகிறது. உதவிகள் செய்வதற்கே முன்வராத புலம் பெயரந்தவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் கே.பி.யை குறை சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?
என்னைப்பொறுத்தவரை விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்தி கொடுத்த பாவத்தில் ஒருபகுதியை கழுவுவதற்கு கே.பி. முன்வந்ததும் ஒரு நேர்மையான செயலாகவும் அதற்கு அரசாங்கத்தை சம்மதிக்க வைத்தது மிகத்திறமையான விடயமாகவும் பார்க்க முடிகிறது.
போர் நடக்கும் போது ஆயுதத்திற்கு காசு கொடுத்த புலம் பெயர்ந்த அமைப்புகளில் எத்தனைபேர் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார்கள்? நாடுகடந்த ஈழம் வட்டுக்கோட்டை தீர்மானம் மற்றும் ஆர்பாட்டம் இத்தியாதி இத்தியாதி என பணத்தை விரயமாக்கும் இவர்கள் கடந்த இரண்டுவருடத்தில் செய்தவற்றை பட்டியல் போடுவார்களா? அவுஸ்திரேலிய தமிழ்காங்கிரசின் பிரசார பீரங்கிகளாhன இரண்டு பெண்மணிகளிடம் நான் கேட்டேன் “அங்குள்ள தமிழ் மக்களுக்கு உதவுவது முக்கியமில்லையா” – என்று. அதற்கு அவர்கள் தந்த பதில் “அரசாங்கம் தான் இந்நிலையை உருவாக்கியது. எனவே அது அரசாங்கத்தின் கடமை.” இவ்வளவுக்கும் அவர்களில் ஓருவர் மருத்துவர்
எவ்வளவு பொறுப்பற்ற பதில்!
ஒருவர் அடித்து மற்றவர் காயமடைந்தால் அடித்தவனைத் துரத்துவதை விட காயமடைந்தவனுக்கு உதவுவதே மனித விழுமியம். இதைத்தான் பொலிஸ் கூட செய்யவேண்டும்.
தமிழர்கள் தங்களை ஆள முற்பட முன்பு பல விடயங்களில் மனிதத் தன்மை பெறவேண்டும்.
விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து இந்தியாவுக்குச் சென்ற கருணா என்ற முரளீதரனை இலங்கைக்கு கொண்டு வந்து ஸ்ரீ லங்க சுந்திர கட்சியின் பிரதித் தலைவாராக்கி மத்திரி பதவி கொடுத்தவர் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் . அதே போன்று கைதியாக பிடிக்கப்பட்ட கே. பி. க்கு மருத்துவ உதவி வழங்கி மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்பு நடத்த உதவி செய்ததும் அவரே. .இந்த விடயங்கள் ஒருவிதத்தில் இராஜதந்திரம் ஆக இருந்தாலும் மறுபுறத்தில் இப்படியான செயல் செய்வதற்கு பெருந்தன்மையும் வேண்டும்.. பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களை இப்படி நடத்திய உதாரணம் உலகில் வேறு எங்கும் காட்டமுடியுமா?
என்னைப்பொறுத்தவரையில் இந்த அரசாங்கத்துடன் ஒத்துழைத்து தமிழர்கள் பெறக் கூடியது ஏராளம். இருக்கிறது.
அரசியல் என்பது ஒரு செஸ் விளையாட்டு. இதில் ஓரளவுக்காவது தேர்ந்த ஒரு இலங்கைத்தமிழர் சௌமிய மூர்த்தி தொண்டமான் மட்டும்தான். வடமாகாணம் டொக்டர்களையும் இஞ்ஜினியர்களையும் கணக்கியலாளர்களையும் வக்கீல்களையும் மட்டுமல்ல பிரபாகரனைப்போல அசுரனையும் தந்துவிட்டு, அரசில்வாதிகளைப் பொறுத்தவரையில் மலடியாகிவிட்டது.
எனக்குத் தெரியும் இந்த கட்டுரையை படித்து விட்டு நான் ராஜபக்ஷவின் ஆதரவாளன் என சிம்பிளாக சொல்லிவிட்டு போய்விடுவார்கள் எமது கல்யாணராமன்கள்.
http://noelnadesan.wordpress.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக