வியாழன், 21 ஏப்ரல், 2011

101 தொகுதிகள் : பெண் வாக்காளர்கள் முன்னணி

எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு, இந்த தேர்தலில் ஆண்களும், பெண்களும் கூட்டம், கூட்டமாக திரண்டு வந்து ஓட்டு போட்டது; இளைஞர்கள் தங்கள் பங்குக்கு படையெடுத்து வந்தது; பார்வையாளராக மட்டுமே இருந்து வந்த மேல்தட்டு மக்களும், இந்த முறை ஓட்டுச்சாவடியில் குவிந்தது போன்ற காரணங்களால், ஒட்டுமொத்த ஓட்டு சதவீதம், "ஜிவ்'வென எகிறியது. அதேபோல், இந்த தேர்தலில், 101 தொகுதிகளில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக ஓட்டளித்து புதுமை படைத்துள்ளனர்.

வழக்கமாக, ஒவ்வொரு தேர்தலிலும், 60, 65 சதவீதம் வரை பதிவாகும் ஓட்டுப்பதிவு, இந்த முறை யாருமே எதிர்பார்க்காத வகையில், 77.8 சதவீதமாக உயர்ந்து விட்டது. அனைத்து மாவட்டங்களிலும், சராசரி ஓட்டுப்பதிவு சதவீதம், 70ஐ தாண்டியுள்ளது. இதனால், யாருக்கு வெற்றி என்பதை முடிவு செய்ய முடியாமல் அரசியல் கட்சிகள் திணறி வருகின்றன. தொகுதி வாரியாக பதிவான ஓட்டுகளை பார்த்தால், மொத்தமுள்ள, 32 மாவட்டங்களில், ஈரோடு, திருப்பூர், கோவை, திருவள்ளூர், தர்மபுரி, நீலகிரி, காஞ்சிபுரம் ஆகிய ஏழு மாவட்டங்களை தவிர, மீதியுள்ள 25 மாவட்டங்களில், 101 தொகுதிகளில், ஆண்களை விட, பெண்கள் அதிகளவில் ஓட்டு போட்டுள்ளனர்.சில தொகுதிகளில், 100 ஓட்டுகள் முதல், அதிகபட்சமாக, 12 ஆயிரத்து, 475 ஓட்டுகள் வரை, பெண்கள் அதிகளவில் ஓட்டு போட்டுள்ளனர். பெரும்பாலான தொகுதிகளில், 3,000 ஓட்டுகள் முதல், 4,000 ஓட்டுகள் வரை, ஆண்களை விட பெண்கள் கூடுதலாக ஓட்டு போட்டுள்ளனர்.

நாகை மாவட்டத்தில் உள்ள சீர்காழி (தனி), மயிலாடுதுறை, பூம்புகார், நாகப்பட்டினம், கீழ் வேளூர் (தனி), வேதாரண்யம் ஆகிய தொகுதிகளிலும், பெண்கள் கூடுதலாக ஓட்டு போட்டுள்ளனர். முதல்வரின் திருவாரூர் மாவட்டத்திலும், இதே சாதனை நடந்துள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி (தனி), மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய நான்கு தொகுதிகளிலும் பெண் வாக்காளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில், கந்தர்வகோட்டை தவிர, மீதமுள்ள ஐந்து தொகுதிகளிலும் பெண்கள் ஓட்டு தான் அதிகம். சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், பெண்கள் ஓட்டுகளே முன்னணி இடத்தை பிடிக்கின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தில், ஏழு தொகுதிகளில் பெண்களே அதிகளவில் ஓட்டு போட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் ஆறு தொகுதிகளிலும்; கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், கிருஷ்ணகிரி; திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலும் பெண்கள் அதிகளவில் ஓட்டு போட்டுள்ளனர்.இப்படி, 25 மாவட்டங்களில் பெண்கள் அதிகளவில் ஓட்டு போட்டிருப்பதன் மூலம், இம்மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக பெண்கள் உருவெடுத்துள்ளனர்.

என்ன காரணம்?ஓட்டு சதவீதம் அதிகரித்ததற்கும், குறிப்பாக பெண்கள் அதிகளவில் ஓட்டு போட்டதற்கும், தி.மு.க., கூட்டணி தரப்பில் சில கருத்துக்களை தெரிவிக்கின்றனர். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, ஊரக வேலைவாய்ப்பு திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம், பெண் வாக்காளர்களை, "கவனித்தது' ஆகியவை காரணமாக தான், பெண்கள் அதிகளவில் ஓட்டு போட்டனர் என்பது அவர்களின் வாதம்.அ.தி.மு.க., கூட்டணியோ, "விலைவாசி உயர்வு, மின்வெட்டு காரணமாக இந்த ஆட்சிக்கு எதிர்ப்பு ஓட்டுகள் அதிகமாக விழுந்துள்ளது' என கூறுகிறது. இரு அணியும், இருவேறு கருத்துக்களை கூறினாலும், பெண் வாக்காளர்கள் யார் பக்கம் என்பதை யாராலும் உறுதிப்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது.

ஜெ.,வுக்கு ஆண்கள் : கருணாநிதிக்கு பெண்கள் :ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு, ஆண்கள் அதிகளவில் ஓட்டு போட்டுள்ளனர். ஆண்கள் ஓட்டு, 89 ஆயிரத்து, 916; பெண்கள் ஓட்டு, 88 ஆயிரத்து, 951.திருவாரூர் தொகுதியில் கருணாநிதிக்கு, பெண்கள் அதிகளவில் ஓட்டு போட்டுள்ளனர். ஆண்கள் ஓட்டு, 83 ஆயிரத்து, 292; பெண்கள் ஓட்டு, 88 ஆயிரத்து, 633 ஆக பதிவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக