சனி, 23 ஏப்ரல், 2011

பாபாவின் தம்பி மகன் ரத்னாகர், அறக்கட்டளை முழுவதையும் தன்னுடை

ஆர்.ஜே. ரத்னாகர், பகவதி இந்துலால் ஷா கிரி வேணு சீனிவாசன் பிரசாந்தி நிலையம்

பாகவான் ஸ்ரீ சத்யசாய் பாபாவுக்கு 166 நாடுகளில் 3 கோடியே 70 லட்சம் பக்தர்கள் இருக்கின்றனர். பகவானுடைய அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்துகளின் மதிப்பு குறைந்தபட்சம் 35,000 கோடி ரூபாய் முதல் 40,000 கோடி ரூபாய் வரை என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது மட்டும் அன்றி கோடிக்கணக்கான ரூபாய்கள் அறக்கட்டளையின் வெவ்வேறு அமைப்புகளிடம் ரொக்கமாகவே கையிருப்பில் இருக்கின்றன.  பாபாவுக்குப் பிறகு தங்களுக்கு நல்ல வழிகாட்ட யார், அவர் தொடங்கி நடத்திவரும் அறப் பணிகளின் நிலை என்னவாகும் என்ற கவலையெல்லாம் அவருடைய பக்தர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. புட்டபர்த்தியிலேயே பாபாவின் உறவினர்கள் பலர் வசிக்கின்றனர். அவர்களுக்கும் அறக்கட்டளைகளின் நிர்வாகிகளுக்கும் இடையே பரஸ்பரம் அவநம்பிக்கையே நிலவுகிறது. 1964-ல் சத்யசாய் மைய அறக்கட்டளை நிறுவப்பட்டது. பாபாவே இதன் தலைவர். இதன் நிர்வாகக்குழு 2010-ல் தான் திருத்தியமைக்கப்பட்டது.  அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும் பாபாவின் உறவினர்களுக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு இல்லை. எனவே இந்த மிகப்பெரிய ஆன்மிக சாம்ராஜ்யத்தை அடுத்து ஆளப் போவது யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.  அறக்கட்டளையின் தலைவர் பகவான் ஸ்ரீ சத்யசாய் பாபா. ஏனைய உறுப்பினர்கள்: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி, மும்பைத் தொழிலதிபர் இந்துலால் ஷா, டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த வேணு சீனிவாசன், சத்யசாய் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் எஸ்.வி. கிரி, ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் தம்பி மகன் ஆர்.ஜே. ரத்னாகர் (39).  இவர்களைத் தவிர வேறு 4 பேரும் பாபாவிடம் நெருங்கி அவருக்குப் பணிவிடை செய்யும் இடத்தில் இருப்பதால் நிறைய உள்விவகாரங்களைத் தெரிந்துகொண்டு செல்வாக்குமிக்கவர்களாக இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் சத்யஜித். எம்.பி.ஏ. படித்துள்ள நிர்வாகி. அடுத்தவர் சக்ரவர்த்தி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. மூன்றாமவர் அறக்கட்டளையின் முன்னாள் உறுப்பினர் வெங்கட்ராமன், மற்றொருவர் எஸ்.வி. கிரி.  ஆஸ்ரம நிர்வாகத்தில் இந்த 4 பேருக்கும் இருக்கும் செல்வாக்கு குறித்து பாபாவின் உறவினர்களுக்கு தாள முடியாத கோபம்தான். இதை வெளிப்படையாக அவர்கள் தெரிவிக்காவிட்டாலும் தனிப்பட்ட முறையில் பேசும்போது கோபத்தை அடக்காமலேயே பேசிவிடுகின்றனர்.  ""2 மாதங்களாக பாபா சாப்பிடுவதே இல்லையாம்; இது உறவினர்களான எங்களுக்கே தெரியாது'' என்று கோபம் கொப்பளிக்க ஒருவர் தெரிவித்தார்.  தலைசுற்றுகிறது, இதயத்துடிப்பு குறைந்துவருகிறது என்று மார்ச் 28-ம் தேதி பாபா கூறியபிறகே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அப்போதுதான் பாபாவின் உறவினர்கள் அந்த 4 பேரிடம் வாக்குவாதம் செய்தனர்.  ""இப்போது நாங்கள் அமைதியாக இருக்கிறோம், பாபாவுக்கு ஏதேனும் நேர்ந்தால் அவர்களை நீதிமன்றத்துக்கு இழுக்கவும் தயங்கமாட்டோம்'' என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.  ""இப்போதே பிரச்னை கிளப்பினால் பாபாவின் சொத்துகளுக்காகத்தான் நாங்கள் பூசலை ஏற்படுத்துகிறோம் என்று குற்றம் சுமத்திவிடுவார்கள்'' என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.  அறக்கட்டளை உறுப்பினராக இருக்கும் பாபாவின் தம்பி மகன் ரத்னாகர், அறக்கட்டளை முழுவதையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரப் பார்க்கிறார் என்று ஒரு வட்டாரம் கூறுகிறது. ரத்னாகரின் தந்தை ஜானகிராமன் 2005-ல் இறக்கும்வரை அறக்கட்டளையை முழுக்க தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதன் பிறகு நிர்வாகம் மற்றவர்களின் கைகளுக்குப்போனது. ரத்னாகர் ஓராண்டுக்கு முன்னர்தான் அறக்கட்டளை நிர்வாகியானார். உள்ளூர் தொலைக்காட்சி கேபிள் அவர் வசம்தான் இருக்கிறது. இவர் இப்போதுள்ள ஆந்திரத் தொழில்துறை அமைச்சர் ஜே. கீதா ரெட்டியின் நண்பர்.  அறக்கட்டளையின் மற்றொரு நிர்வாகியான சக்ரவர்த்தியும் சக்திவாய்ந்தவர். அவர் சாய் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் அறக்கட்டளை செயலராகவும் இதற்கு முன்னர் பொறுப்பு வகித்திருக்கிறார். நிலைமை மோசமாகப் போனால் சத்ய சாய் அறக்கட்டளையை அரசே ஏற்றுக்கொண்டுவிடும் என்ற பேச்சும் பரவலாக இருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை என்று ஆந்திர அரசு மறுத்துள்ளது.  புட்டபர்த்தி என்ற எவருமே கேள்விப்படாத சிறு குக்கிராமத்தை இன்று உலக அளவில் முக்கியமான ஆன்மிகத் தலமாக மாற்றிய பெருமை பாபாவையை சேரும். புட்டபர்த்தி கிராமமாக இருந்து நகரமாக வளர்ந்து இன்று மிகப்பெரிய நகரங்களே பொறாமைப்படும் அளவுக்கு நவீன வசதிகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றிருக்கிறது. அதி நவீன மருத்துவமனை, கல்வி நிலையங்கள், மாடமாளிகைகள், கூட கோபுரங்கள், தியான மண்டபம், விருந்தினர் இல்லம் ஆகியவற்றுடன் நவீன ரயில் நிலையம், விமான நிலையம் என்று எல்லா வசதிகளும் கொண்டுதிகழ்கிறது. ஒரு காலத்தில் புட்டபர்த்திக்கு வர வேண்டும் என்றால் பிரமுகர்கள் அனைவரும் பெங்களூருக்கு விமானத்தில் வந்து பிறகு புட்டபர்த்திக்குக் காரில் வருவார்கள். இப்போது விமானம் நேரடியாக புட்டபர்த்திக்கே வர முடிகிறது.  பாபா ஏற்படுத்திய சொத்துகள்: சென்னையில் சுந்தரம் என்ற பெயரில் அழகிய வழிபாட்டிடம், தர்ம úக்ஷத்திரம் என்ற பெயரில் மும்பையில் வழிபாட்டிடம், பெங்களூரை அடுத்த ஒயிட்ஃபீல்ட் என்ற இடத்தில் பிருந்தாவனம் (அங்கு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை), கொடைக்கானலில் சாய் ஸ்மிருதி, கர்நாடகத்தின் சிக்கமகளூரில் கல்லூரி, ராஜஸ்தானின் ராஜ்கோட் என்ற இடத்தில் நவீன மருத்துவமனை ஆகியவை புட்டபர்த்திக்கு வெளியே உள்ளன. இவை போக 150 நாடுகளில் எண்ணிலடங்கா சொத்துகள் உள்ளன.  ஆரம்பகாலத்தில் பாபாவை அவமதித்தவர்கள் பலர். அவருடைய சித்துகளைக் குறைகூறியும் நம்பமறுத்தும் கடுமையாக நிந்தனை செய்தனர். ஆனால் அவற்றையெல்லாம் செவிமடுக்காமல் பாபா மீது பக்தி கொண்டவர்களே அனேகம்.  பாபா வெறும் ஆன்மிக போதனைகளோடு நிறுத்தாமல் மக்களுக்காக செய்துள்ள மருத்துவ, கல்வி, சாலை, சுகாதார வசதிகளும் குடிநீர் வசதிகளும் ஈடு இணையற்றவை என்பதால் தனிச்சிறப்போடு திகழ்கிறார். எனவேதான் பாபாவுக்குப் பிறகு யார் என்ற கேள்வி அனைவரின் நெஞ்சங்களிலும் பிறக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக