சனி, 23 ஏப்ரல், 2011

சாய்பாபா மிகவும் கவலைக்கிடம்

புட்டபர்த்தி, ஏப்.22: ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் உடல்நிலை வெள்ளிக்கிழமை மிகவும் கவலைக்கிடமானது.  86 வயதாகும் சத்ய சாய்பாபா உடல்நலக்குறைவு, மூச்சுத்திணறல் காரணமாக சத்ய சாய் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் கடந்த மாதம் 28-ம் தேதி சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.  ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் உடல்நிலை குறித்து ஆந்திர அரசின் மருத்துவக் கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர் ரவிராய் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:  சாய்பாபாவின் உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமான நிலையிலேயே உள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்று கணித்துக் கூற முடியாத நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவர்கள் என்ன சிகிச்சை அளித்தாலும் அது இயல்பான இயக்கத்துக்கு ஈடாகாது. உடல் உறுப்புகளின் இயக்கத்துக்கு கூடுதல் ஆதரவாக இருக்கும் அவ்வளவுதான். உடல்உறுப்புக்கள் முழுமையாக செயல் இழந்தால், மருத்துவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றார்.  முன்னதாக சாய்பாபாவின் உடல்நிலை குறித்து அவர் சிகிச்சை பெற்றுவரும் சத்ய சாய் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பாபாவின் உடல்நிலையில் வியாழக்கிழமை முதல் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அவருக்கு 24 மணி நேரமும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். கல்லீரல் முற்றிலும் செயல் இழந்துவிட்டது. செயற்கை சுவாசமே அளிக்கப்பட்டு வருகிறது. அவரது மற்ற உடல் உறுப்புக்களும் வழக்கம்போல செயல்படவில்லை என கூறப்பட்டுள்ளது.  மருத்துவமனை இயக்குநர் ஏ.என். சஃபயா கூறியதாவது:  பாபாவுக்கு அளிக்கும் சிகிச்சைக்கு அவரது உடல் உறுப்புகள் ஒத்துழைப்பது மிகவும் குறைவு. டயாலிஸிஸ் முறையிலேயே அவரது சிறுநீரகம் செயல்பட்டு வருகிறது, அவரது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் தொடர்ந்து குறைவாகவே உள்ளது என்றார்.  புட்டபர்த்தியில் தடை உத்தரவு தொடர்கிறது: இதற்கிடையே புட்டபர்த்தியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து வெள்ளிக்கிழமை 2-வது நாளாக கடைகள், ஹோட்டகள் மற்ற வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ஆந்திர மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்து கூடுதல் போலீஸ் படை புட்டபர்த்திக்கு அழைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மற்ற மாவட்டங்களில் இருந்து போலீஸ் படைகள் புட்டபர்த்திக்கு விரைந்துள்ளன. புட்டபர்த்திக்கு வரும் முக்கியப்பிரமுகர்கள் பாதுகாப்பு மற்றும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்க அனந்தபூர் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.  பக்தர்கள் கூட்டம்: அனந்தபூர் மாவட்டத்திலுள்ள 26 தாசில்தார்களையும் புட்டபர்த்திக்கு வரும்படி அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் முக்கியப் பிரமுகர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பார்கள். ராட்சத ஜெனரேட்டர்கள், எல்சிடி திரைகள் ஆகியவை ஹைதராபாதிலிருந்து புட்டபர்த்திக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. பக்தர்களால் நிறைந்துள்ள பிரசாந்தி நிலையத்தில் முழு அமைதி நிலவுகிறது. உணர்ச்சி வசப்பட்ட சில பக்தர்கள், அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனையின் பாதுகாப்பு வளையத்தை மீறி மருத்துவமனைக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீஸôர் தடுத்து நிறுத்தினர்.  மருத்துவமனை அருகே வெளிநாட்டு பக்தர்கள் உள்பட சிலரை மட்டும் நிற்க போலீஸôர் அனுமதித்தனர்.  எந்த நிலைமை ஏற்பட்டாலும் அதை சமாளிப்பது குறித்து சத்ய சாய் அறக்கட்டளை நிர்வாகிகள், பொதுமக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர். பாபா சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை மற்றும் பிரசாந்தி நிலையத்தைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான போலீஸôர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக