திங்கள், 4 ஏப்ரல், 2011

அரசியல் கட்சிகளின் "மாஸ்டர் பிளான்' அம்பலம்: சர்வே நடத்தி பணம் பட்டுவாடா?

தமிழக வாக்காளர்களுக்கு, அரசியல் கட்சியினர் பணம் வினியோகிக்கும் வழிமுறைகள் தொடர்பான புதிர், கோவையில் விலகியது. தொகுதி வாரியாக வீடு வீடாக தி.மு.க.,வினர் கணக்கெடுத்து, அரசின் நலத்திட்டங்கள் எதிலுமே பயனடையாத வாக்காளர்களுக்கு பணம் வினியோகிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், கணக்கெடுப்பில் ஈடுபட்டு சிக்கிய தி.மு.க.,வினரிடம், தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

கொள்கைகளை முன்வைத்தும், நாட்டின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களை வாக்குறுதியாக அளித்தும் அரசியல் கட்சியினர் தேர்தலை எதிர்கொண்ட காலம், மலையேறிவிட்டது. இலவச பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிறுவனங்களாக திராவிடக் கட்சிகள் மாறிவிட்டன. ஆளுங்கட்சியினர் பணப் பட்டுவாடா செய்து வருவதாக தேர்தல் அதிகாரிகளுக்கு புகார்கள் தொடர்ந்து வந்தபடி உள்ளன. பணம் வழங்கப்படுவது எங்கே, எப்படி என்ற விவரம் தெரியாமல் அதிகாரிகள் திக்குமுக்காடுகின்றனர். தேர்தல் கமிஷனின் கண்காணிப்பு கெடுபிடிகளை மீறி அரசியல் கட்சிகள், தமிழகத்தின், 234 தொகுதிகளின் வாக்காளர்களுக்கும் பணம் வழங்க சாத்தியக்கூறுகள் உள்ளனவா, அதற்கான பல நூறு கோடி ரூபாய் எங்கிருந்து, யாரால், எந்த வழிமுறைகளில் கடத்திச் செல்லப்படுகிறது, தொகுதி வாரியாக யாரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டு, எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் தேர்தல் அதிகாரிகள் திணறி வந்தனர்.

இதற்கான, விடை கோவையில் சமீபத்தில் வெளிப்பட்டது. கோவை, தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள தெலுங்குபாளையம்புதூர் பகுதியில், தி.மு.க., வினர், வீடு வீடாக வாக்காளர்களிடம் கணக்கெடுப்பு நடத்துவதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் வந்தது. விரைந்து சென்ற தேர்தல் அதிகாரி சிவஜோதி தலைமையிலான குழுவினர், கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்த தி.மு.க.,வைச் சேர்ந்த செந்தில்குமார் உள்ளிட்ட சிலரைப் பிடித்தனர். அவர்கள் வசம் இருந்த மாதிரி வாக்காளர் பட்டியலுடன் கூடிய, கணக்கெடுப்பு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களை அணுகியதாக செந்தில்குமார் உள்ளிட்டோர் மீது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பணம் வழங்க புதிய யுக்தி: தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட கையேட்டில், "தி.மு.க., - வாக்காளர் விவர கணக்கெடுப்பாளர் கையேடு' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அதில், கணக்கெடுப்பு நடத்தப்படும் தொகுதி, உள்ளாட்சி பாகம் எண், கணக்கெடுக்கப்பட வேண்டிய வாக்காளர்களின் பெயர், ஓட்டுச் சாவடி குழு உறுப்பினர் பெயர், கணக்கெடுப்பு களப்பணியாளர் பெயர், அவரது பேக்ஸ் நம்பர், மொபைல் போன் எண், போன் எண் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளன.கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய வார்டில் வசிக்கும் வாக்காளர்களின் விபரம் உள்ளிட்ட பல கேள்விகள் எழுப்பப்பட்டு, பதிலளிக்க ஏதுவாக இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இறுதியாக தரப்பட்டுள்ள இணைப்புச் சீட்டில், தி.மு.க.,வின் ஐந்தாண்டு கால ஆட்சியில் வாக்காளர் பயன் ஏதும் அடைந்துள்ளாரா என்ற கேள்வி தரப்பட்டுள்ளது. இதற்கான பதிலை, "டிக்' செய்ய ஏதுவாக கலைஞர் வீடு வழங்கும் திட்டம், விவசாய கடன் தள்ளுபடி, இலவச "டிவி', இலவச காஸ் அடுப்பு, கலைஞர் காப்பீடு திட்டம், திருமண உதவி, மகப்பேறு உதவித்தொகை, முதியோர் அல்லது விதவை அல்லது மாற்றுத் திறனாளி அல்லது அமைப்புசாரா உதவித் தொகை, அரசு பணி பெற்றவர், வேலை இல்லா பட்டதாரி உதவித் தொகை, கல்வி கட்டண சலுகை, 108 ஆம்புலன்ஸ் உதவி என்ற விவரங்கள் தரப்பட்டுள்ளன.

கணக்கெடுப்பு குழுவினர், வாக்காளரிடம் மேற்கண்ட கேள்விகளை எழுப்பி அதற்கான பதிலை, ஆவணத்தில் "டிக்' செய்ய வேண்டும் என, மேலிடம் உத்தரவிட்டிருக்கிறது.இதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. எனினும், கணக்கெடுப்பு எதற்காக நடத்தப்பட்டது என்ற விவரம், தங்களுக்கு தெரியாதென கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்ட நபர்கள் கைவிரித்துவிட்டனர். வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் திட்டத்துடன் ஆளுங்கட்சி சார்பில் கணக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது என அ.தி.மு.க., வினர் குற்றம்சாட்டியுள்ளனர். அது உண்மை தானா என தேர்தல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக