ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

காங்கிரசை தோற்கடிக்க தீவிர பிரச்சாரம் - சீமான்

சென்னை, மார்ச் 25 - தமிழர்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் கட்சியை அது போட்டியிடும் 63 தொகுதிகளிலும் தீவிரமாக பிரச்சாரம் செய்து தோற்கடிப்போம் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது:-
தமிழக தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் காங்கிரசை தோற்கடிக்க நாம் தமிழர் கட்சி தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளும். இதற்காக கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆலோசனைப்படி  பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.
காங்கிரஸ் 50 ஆண்டு காலமாக தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. தமிழர்களுக்கு எதிரான கட்சி காங்கிரஸ் கட்சி. காவிரி, முல்லை பெரியாறு, கட்சத் தீவு உள்ளிட்ட எந்த பிரச்சினையிலும் தமிழருக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்பட்டதில்லை. நமது எதிரி நாடு பாகிஸ்தான் என்கிறார்கள். எதிரி நாடு பாகிஸ்தான் கடல் எல்லை மீறும் மீனவர்களை இதுவரை சுட்டதில்லை. ஆனால் நமது நட்பு நாடு என்று கூறும் இலங்கை நம் மீனவர்களை கொன்று குவித்துள்ளது.
தொடர்ந்து நம் தமிழ் மக்கள் இலங்கையில் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்த தமிழின விரோத காங்கிரசை தமிழகம் முழுவதும் வேரறுப்போம். காங்கிரஸ் போட்டியிடும் இடங்களில் காங்கிரசை வீழ்த்தும் பிரதான கட்சி வெற்றி பெறும் வகையில் எங்கள் பிரச்சாரம் அமையும். இவ்வாறு சீமான் செய்தியாளர்களிடம் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக