செவ்வாய், 26 ஏப்ரல், 2011

இந்த ஊடகங்கள் பல ஒரு பக்கச் செய்தியை மட்டும் பிரசுரிக்கின்றனவே

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திற்கு ஒரு திறந்த மடல் !
ஓ ! நில்லுங்கள் ராஜாக்களே ! (சுஜாதாவுக்கு நன்றி)
uthayanஆயிரத்துத் தொழாயிரத்து தொன்னூற்றி ஏழில் இருந்து, சிங்கள சிறீலங்காவில் ‘சிறீ லங்கா தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்’ எனவும், தமிழீழத்தில் ‘தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்’ எனவும் ‘ஈர் பெயரும் ஓர் உடலுமாக’ உங்கள் ‘தொழிற்சங்கம்’ தெரியவரத் தொடங்கியபோது உங்களுக்கு எழுதவேண்டுமென்ற விருப்பம் எனக்கு இருந்தது.  தமிழரசுக் கட்சி தெற்கில் சமஸ்டிக் கட்சியெனவும், வடக்கில் தமிழரசுக் கட்சியெனவும் பலகாலம் இயங்கிவந்தது எனது பாழாய்ப்போன நினைவுக்கு வந்து, இது தமிழர்களின் ஒரு தந்திரோபாயமாக்கும் என பேசாமல் இருந்து விட்டேன். பின்னர், ஒருபுறத்தில் இலங்கை முழுவதிலுமுள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் அனைவரினதும் ஏக போக பிரதிநிதிகள் என நீங்கள் உங்களைப் பிரச்சாரப்படுத்திக்கொண்டு, இன்னொருபுறத்தில் உங்கள் சங்கத்தின் புலம்பெயர் பொறுப்பாளர் திருவாளர் நடராஜா சேதுரூபன் அவர்கள் (முன்னாள் ‘நிதர்சனம்’ இணையத்தள ஆசிரியர் எனவும், இந்நாள் Tamilnewsweb.com இணையத்தள ஆசிரியர் எனவும் பேசப்படுபவர்) ‘தினமுரசு மட்டும் எங்கள் சங்கத்தில் சேரமுடியாது’ என கொள்கை விளக்கம் செய்து கொக்கரித்து திரிந்தபோதும் உங்களுக்கு கடிதம் எழுதவேண்டுமென்ற எண்ணம் திரும்பவும் எழுந்திருந்தது. முடியவில்லை. இதன் பின்னர், பத்திரிகைச் சுதந்திரம், ஊடகவியலாளர்கள் உரிமைபற்றியெல்லாம் காலத்திற்குக் காலம் நீங்கள் தெரிவிக்கும் ‘கனதி’யான கண்டனங்களைப் படிக்கும்போதும், ‘கடிதம் எழுதமுடியவில்லையே’ என்ற கவலை வந்துபோவதுண்டு. ஆனால், அப்படித் திரும்ப திரும்ப நினைத்ததாலோ என்னவோ, இந்தக் கடிதம் இதற்குமுதல் எழுதப்பட்டிருக்கவில்லை. நீங்கள் இந்தத் தாமதத்திற்காக முதலில் என்னை மன்னித்துக் கொள்ள வேண்டும்.

இப்போது, யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அவர்கள் ‘உதயன்’ பத்திரிகையை யாழ் மாநகர எல்லைக்குள் தடைசெய்யும் அறிவிப்பைக் கண்டித்து, ‘உதயனுக்குத் தடையா ? ஊடக ஜனநாயகத்திற்கு விழுந்த பேரிடி’ என ஒப்பாரிவைத்து, ஊடகங்களின் உரிமையுடன் மட்டும் நிற்காது, ஒருபடி மேலே போய், ஊடக நிறுவனங்களின் உரிமைகளையும் உயர்த்திப் பிடித்து நீங்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை எனது கவனத்திற்கு வந்து, இந்த முறை, இந்தக் கடித ஆசை கைகூடியிருக்கிறது. அத்துடன் எல்லோரும் எப்போதும் காதில் பூவுடனேயே அலைவதாக நீங்கள் கருதக்கூடாது என்பதும் இந்தக் கடிதம் எழுதப்படுவதற்கு இன்னொரு காரணம். இதனைவிட, உதயனைத் தடைசெய்யும் முதல்வரின் முடிவுக்கும், எனக்கும் எந்தத் தொடர்புமில்லை என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தயவுசெய்து இரண்டையும் முடிச்சுப்போட்டு ‘இது ஈபிடிபி காரற்ரை வேலை’ என புலி எதிர்ப்பு முத்திரை குத்தி இந்தக் கடிதத்தையும் குப்பையில் போட்டு எல்லோரையும் ஏமாற்ற முயலாதீர்கள். இனி, உங்களுடைய இஸ்டம்.

முதல்வரின் இந்த உதயன் பத்திரிகைத் தடை முடிவுக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றாலும், ‘உதயன்’ பத்திரிகையை முதல்வர் தடைசெய்ய எடுத்திருந்த முடிவில் எனக்கும் உடன்பாடே. ஒரு ஊடகம், அரசியல் ஆதாயம் ஒன்றிற்காக, ‘ஊடக உரிமை’ என்ற போர்வையில் ஒரு நிறுவனத்தின் சகல செயற்பாடுகளுக்கும் தொடர்ந்து தடைக்கல்லாக இருந்து உருப்படியாக எதனையும் செய்து முடிப்பதை திரும்பத் திரும்பத் தடுக்க முயலும்போது, அந்த ஊடகத்தை அந்த நிறுவனம் தடைசெய்வதில் தவறென்ன ?. இதை ஒரு ஜனநாயக வழிமுறை அல்ல என்று எப்படிச் சொல்ல முடியும் ?. இதற்கு ‘ஈழத்தில்’கூட ஒரு முன் உதாரணம் உண்டே, உங்களுக்குத் தெரியாதா ?

போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகி பூரண அமைதி நிலவி வந்திருந்த ஜனவரி 2003ல், யாழ் பல்கலைக்கழக சகல வளாகத்தைச் சேர்ந்த மாணவர்களும் ஒன்றுகூடி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடாக பல்கலைக் கழக வளாகத்திற்குள் உதயன் பத்திரிகையைத் தடைசெய்து தீர்மானம் நிறைவேற்றி பல்கலைக் கழகத்தையே இயங்காமல் செய்திருந்ததை உங்களுக்குத் தெரியாது என்று நீங்கள் சொல்ல முடியாது. அத்துடன் அவர்கள் இன்னுமொருபடி மேலேபோய் உதயன் ஊடக நிறுவனத் தலைவர் திருவாளர் சரவணபவானையும் பல்கலைக்கழக செனற்றிலிருந்து பதவி நீக்கம் செய்யவேண்டுமென பகிரங்க கோரிக்கை வைத்திருந்தார்களே ?. நினைவிருக்கிறதா ?. அப்போது இந்த ‘ஊடக ஜனநாயகத்திற்கு விழுந்த பேரிடி’ பற்றி நீங்கள் ஒரு பத்திரிகை அறிக்கைகளும் விடவில்லையே ?. ஏன் ?. அப்போதெல்லாம் ‘கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்தி நியாயத்தைக் கோருவதற்கு ஊடக நிறுவனங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் உரிமையுண்டு. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தமது நியாயத்தை எழுத்து மூலமாக வெளிப்படுத்தி நிலைமையை தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்’ என ஏன் நீங்கள் கட்டப் பஞ்சாயத்து செய்யவில்லை ?. அல்லது ஏன் ‘சர்வாதிகார முடிவுகள் எடுக்கப்பட்டு ஊடக சுதந்திரத்திற்குக் குழிபறிக்கப்பட்டிருப்பதை ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கிறது’ எனக் காட்டமாக அறிக்கை வெளியிடவில்லை ?.

உதயன் பத்திரிகையை பல்கலைக்கழக வளாகத்திற்குள் தடைசெய்ய எடுத்த முடிவு ஊடக ஜனநாயகத்திற்கு விழுந்த பேரிடி அல்ல என்றால், மாநகர முதல்வர் உதயனை தனது வளாகத்திற்குள் தடைசெய்ய எடுத்த முடிவு மட்டும் எப்படி ஜனநாயக விரோதமாகும் நண்பர்களே ?.

ஹோட்டல் கட்ட வெளிக்கிட்டால் தடுப்பீங்க றோட்டை அகலமாக்க போனா எதிர்ப்பீங்க தென்னிலங்கை வியாபாரிகளை வியாபாரம் செய்யவிட்டா திட்டுவீங்க உல்லாசப் பயணியள் வந்தா, அய்யோ எங்கட ஊர் எல்லாம் ஊத்தையாகிப் போகுது எண்ணுவீங்க பொது நூல்நிலையத்தைப் பார்வையிட வந்தா, ஜயோ எரிக்கப் போறாங்க எண்டு ஊரைக் கூட்டுவீங்க கட்டடத் தொகுதி கட்டப்போனா அய்யய்யோ ஊழல் என்று அலறுவீங்க சிங்கள மக்கள் வந்தால் ஜயோ எங்கட காணியளை எல்லாம் தூக்கிக்கொண்டு போகப் போறான் எண்டு கத்துவீங்க ஏன் இப்படியெல்லாம் எழுதுறீங்க என்று கேட்டா, ‘இது பிறெஸ் பிரீடம். எழுத்து மூலமா வெளிப்படுத்தி நிலைமையை தெளிவுபடுத்துங்க’ என்று வேட்டியை மடிச்சுக்கட்டி ரெண்டு விரலைக் காட்டுறீங்க. என்ன வெளையாடுறீங்களா ?.

ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். ‘உதயன்’ பத்திரிகையைத் தடைசெய்ய முடிவெடுத்த யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாடோ, அல்லது ‘உதயன்’ பத்திரிகையைத் தடை செய்யும் யாழ் முதல்வரின் மேற்சொன்ன முடிவோ ஒரு ஜனநாயகபூர்வமான எதிர்ப்புமுறையேயன்றி வேறல்ல. மற்றும்படி இதில் நீங்கள் குளறுவதுபோல கருத்துச் சுதந்திர மறுப்புமில்லை ஒரு கத்தரிக்காயுமில்லை.

ஆனால், உங்களுடைய இந்த ஊடகங்கள் பல ஒரு பக்கச் செய்தியை மட்டும் பிரசுரிக்கின்றனவே@ அரசியல் ஆதாயங்களுக்காக உண்மையைச்சொல்ல தயங்குகின்றனவே@ கவனம் கொள்ளவேண்டிய கருத்துக்கள் பலதுக்கு களம் அமைத்துக் கொடுக்க மறுக்கின்றனவே@ சில செய்திகள் பொது மக்களைச் சென்று சேரக்கூடாது என்று திட்டம்போட்டுச் செயற்படுகின்றனவே@ அதுதான் அப்பட்டமான கருத்துச் சுதந்திர மறுப்பு. உங்களுடைய ஊடக நிறுவனங்களுக்கு அந்தச் சுதந்திரமுமில்லை, அதற்குப் பெயர் ஊடக சுதந்திரமுமல்ல.  அத்துடன், பொது மக்களைக் குசிப்படுத்த பொய்களையும், புனைவுகளையும் பிரசுரம் செய்கின்றனவே@ ஊடக உரிமையைப் பயன்படுத்தி இனவெறியையும், மத வெறியையும் ஊட்டிச் செய்திகளைத் திரித்துப் பிரசுரம் செய்கின்றனவே, இதுதான் ஊடக ஜனநாயகத்திற்கு விழும் பேரிடி. தயவுசெய்து இவற்றை உங்கள் ஊடக நிறுவன உறுப்பினர்களுக்குத் தெளிவாகத் தெரியப்படுத்தி வையுங்கள்.

உங்களுடைய நிறுவக உறுப்பினர்கள் கடைப்பிடிக்கும் ஊடக தர்மங்கள்பற்றி அவர்களின் ஓராயிரம் செய்திகளை என்னால் உதாரணம் காட்டி எழுத முடியும். இவைபற்றியெல்லாம் உங்களுக்குத் தெரியாதா என்ன ?. சரி, இவைபற்றியெல்லாம் உங்களுடைய ஊடகங்களுக்குத்தான் அக்கறையில்லை, ஆனால் உங்களுக்கு உண்டா ?.

ஊடகங்களினதும், ஊடகவியலாளர்களினதும் ஊடக நெறிமுறைகளை மீறிய செயற்பாட்டை வெளிப்படுத்தி நெறிப்படுத்துவதும் ஊடகவியலாளர் ஒன்றியமொன்றின் நோக்கங்களுள் ஒன்றாக     அமையவேண்டியது அவசியம்;. ஆனால் பணம் பண்ணவும், பாராளுமன்ற கதிரைகளைப் பெறவும் பத்திரிகைகளை நடாத்துகின்ற ஊடக நிறுவனங்களது உரிமைகளையும் உயர்த்திப்பிடிக்க முனையும் உங்களால் இது எப்படி முடியும் ?. இவைபற்றியெல்லாம் இப்போதும் உங்களுக்கு இன்னொரு கருத்து இருக்குமானால், பத்திரிகை ஒன்றில் பகிரங்கப்படுத்துங்கள்.

பத்திரிகைச் சுதந்திரம் என்பது பத்திரிகையாளர்களையும், பத்திரிகைகளையும் மட்டும் உள்ளடக்கும் ஒரு உரிமையென்று பலர் எண்ணுவது எனக்குத் தெரியும். நீங்கள் இன்னும் ஒருபடி மேலே போய் பணம் பண்ணுவதற்காக பத்திரிகைகளை வெளியிடும் பத்திரிகை நிறுவனங்களுக்கும் இந்தப் ‘பத்திரிகைச் சுதந்திரத்தின்’ பாதுகாப்பு உண்டு என்று பாடம் படிப்பிக்க வருகிறீர்கள். இது தவறு என்பதை முதலில் நீங்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். பத்திரிகைச் சுதந்திரம் என்பது பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகள் சம்பந்தமானது மட்டுமன்றி பத்திரிகைகளின் பாவனையாளர்களான சகல வாசகர்களையும், இதர பொது மக்களையும் மற்றும் பொது நிறுவனங்களையும் உள்ளடக்கியதொன்று என்பதை தயவுசெய்து உணர்ந்துகொள்ளுங்கள். அத்துடன், இதர சுதந்திரங்கள்போல இந்தப் பத்திரிகைச் சுதந்திரத்திற்கும் சில கட்டுப்பாடுகள் உண்டு என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தக் கட்டுப்பாடுகளை உறுதி செய்வதற்கே ஊடகவியலாளர்களுக்கு ஒரு ஒழுக்கக் கோவை அவசியமாகிறது என்பது உங்களுக்கு எங்கே தெரியப்போகிறது. பொதுவாக உலகளாவிய ஊடகவியலாளர்களின் ஒழுக்கக் கோவைகள் அனைத்துமே, உண்மைச் செய்திகளைப் பிரசுரித்தல், செய்திகளைச் சரிபார்த்துப் பிரசுரித்தல், தெரிவிக்கப்படும் செய்திகளின் இலக்குகளில் தெளிவாக இருத்தல், பக்கச் சார்பின்றி செய்திகளைப் பிரசுரித்தல், நேர்மையாகச் செய்திகளைப் பிரசுரித்தல் மற்றும் பொதுமக்களுக்குப் பொறுப்பாகச் செய்திகளைப் பிரசுரித்தல் ஆகிய விடயங்களில் ஒருமித்த கருத்தையே கொண்டுள்ளன. ஆனால் உங்களுடைய ஊடக நிறுவன உறுப்பினர்கள் பலரிடம் இந்த ஒழுக்கம் இல்லையென்பதுடன், உங்களுடைய நிறுவனம் இதுவரையில் இதைப்பற்றி அலட்டிக் கொண்டதே இல்லையென்பதும் அப்பட்டமானதொரு உண்மை. 

சில வருடங்களுக்கு முன்னர் உங்களுடைய நிறுவன உறுப்பினர் ஒருவரிடம் உங்களுடைய நிறுவனத்தின் ஒழுக்கக்கோவையின் பிரதியொன்றைப் பார்க்க முடியுமா எனக் கேட்டிருந்தபோது, “ஒழுக்கக் கோவையா ? அப்படியெண்டால் என்ன ?” என அவர் அப்பாவித்தனமாகக் கேட்டது இன்னும் என் நினைவிலிருக்கிறது. இப்போதாவது உங்களுடைய நிறுவன உறுப்பினர்களுக்கு ஒரு ஒழுக்கக் கோவை இருக்குமானால் தயவுசெய்து அதன் பிரதியொன்றை பத்திரிகைகளில் பிரசுரியுங்கள்.

உங்களுடைய உறுப்பினர்களுக்கு ஒரு ஒழுக்கக்கோவை இருக்கிறதோ இல்லையோ, உங்களுடைய நிறுவனத்திற்கு நோக்கங்கள் உண்டென்பது எனக்குத் தெரியும். உங்களுடைய முன்னாள் தலைவர் திருவாளர் துரைரட்ணம் அவர்கள் ஒரு பத்திரிகை அறிக்கையில் உங்களுடைய நிறுவனத்தின் நோக்கங்களென நாலு விடயங்களைப் பட்டியலிட்டு, முதலாவதாக ‘பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாத்தல்’ எனப் பெருமையாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், பத்திரிகைச் சுதந்திரம் என்றால் என்ன, அது பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியமென்ன என்பதுபற்றியெல்லாம் உங்களுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது என உங்களுடைய அறிக்கைகள் சத்தியம் செய்து சொல்லும்போது, இன்னொருவர் என்ன செய்ய முடியும் ?.

ஒரு ஜனநாயகச் செயன்முறைக்கு பத்திரிகைச் சுதந்திரம் மிகவும் அவசியம் என்ற வகையிலேயே பத்திரிகைச் சுதந்திரம் பாதுகாக்கப்படல் வேண்டும் என்று பிரஸ்தாபிக்கப்படுகிறது. ஒரு நீதியான ஜனநாயக அரசொன்று அமைவதற்கு பொது மக்கள் விளிப்படைதல் ஒரு முன்னோடிச் செயற்பாடாக அமைதல் வேண்டும். இங்கு ஒரு ஊடகவியலாளனின் கடமை ஒரு சமூகத்தைச் சுற்றிச்சூழ நிகழும் சகல நிகழ்வுகளையும் விடயங்களையும்பற்றி ஒரு உண்மையான, பூரணமான செய்திகளையும் அறிக்கைகளையும் அளிப்பதில் முக்கியத்துவம் பெறுகிறது. மனச்சாட்சியுள்ள ஒவ்வொரு ஊடகவியலாளனும் நேர்மையாகவும், தூரநோக்குடனும் செய்திகளை வெளியிடும் ஒரு பொது சன ஊழியனாவான் என்றால், உங்களது நிறுவன உறுப்பினர்கள் எத்தனைபேர் இப்படி உள்ளனர் ?

சகல விடங்களையும் சரியாகத் தெரிந்துவைத்துள்ள, சகல தேசிய சர்வதேசிய விடயங்களைப்பற்றிய தெளிவும் விளக்கமும் உள்ள ஒரு சமூகமே ஒரு ஜனநாயக அமைப்பிற்கு அத்திவாரமாக அமையும். இதைத் தருவதற்குத்தான் பத்திரிகைச் சுதந்திரம் தேவையேயன்றி, வெறும் பிரச்சாரங்களை செய்திகளாகத் தருவதற்கும், பொழுது போக்குக்குத் தீனி போடுவதற்கும், அல்லது, உங்கள் ஊடக நிறுவன உறுப்பினர்கள் நினைக்கின்ற ‘இதர காரணிகளுக்கும்’ அல்ல.

ஊடக நிறுவன பெருச்சாளிகளின் அரசியல் அபிலாசைகளுக்குப் பலியாகி, ஊடக சுதந்திரம் என்ற போர்வையில் ஒரு பக்கச் செய்திகளைப் பிரசுரித்து, விற்பனைக்காக கற்பனைக்கதைகளை கட்டுவித்து, அரசியல் ஆதாயங்களுக்காக இளைஞர்களை உருவேற்றி, இன்னொரு தலைமுறையையும் பலிகொடுக்க உங்களுடைய ஊடக நிறுவன உறுப்பினர்களை தொடர்ந்தும் அனுமதிக்கப் போகிறீர்களா என்பதை நீங்களே முடிவெடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தக் கடிதத்தை இயலுமானால் படியுங்கள். அதைவிட, இதற்குப் பதில் தர உங்களைக் கோருவது  கொஞ்சம் ‘ஓவர்’ என்பது எனக்குத் தெரியும். முடியுமானால் தாருங்கள். இது ஆக்க பூர்வமான ஒரு விளைவை ஏற்படுத்த வேண்டுமென்பதே எனது அவா.

இல்லையென்று அடம் பிடிப்பீர்களானால் நான் என்ன செய்ய முடியும் ?. இப்போதைக்கு, மனச்சாட்சி இருக்குமானால் ஒரு முறை தட்டிப்பார்த்துக் கொள்ளுங்கள் என்று மட்டுமே கேட்டு வைக்கிறேன்.

வணக்கம்.

-ஒரு ஊடகவியலாளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக