வெள்ளி, 1 ஏப்ரல், 2011

திமுக கூட்டணிக்கு வைகோ ஆதரவு அளிக்க வேண்டும்: ராமதாஸ்

சிதம்பரம், மார்ச் 31: திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு வைகோ ஆதரவு அளிக்க விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன் என்று பாமக நிறுவனர்  வேண்டுகோள் விடுத்துள்ளார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. விருந்தினர் விடுதியில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி: தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில் அதிமுக அணிக்கு தோல்வி பயம் வந்துள்ளது. கொள்கை திட்டங்கள், வாக்குறுதிகள் பற்றி பேசாமல் தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து ஜெயலலிதா விமர்சனம் செய்து வருகிறார். இதுபோன்று எந்த ஒரு மாநிலத்திலும் அரசியல் அநாகரிகம் இல்லை. தலைவர்களின் குடும்பங்களை பற்றி யாரும் விமர்சித்தது இல்லை. அண்மையில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தியை பற்றி பாஜக குழுவினர் ஒரு முறை தவறான தகவலை வெளியிட்டனர். அதற்காக அக்கட்சி மூத்தத் தலைவர் அத்வானி உடனே வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதினார். இது அரசியல் நாகரிகம், பண்பாடு. ஆனால் இங்கு ஜெயலலிதா தனது பிரசாரத்தில் முழுக்க முழுக்க தனி நபர் விமர்சனம் செய்து வருகிறார். இதை அவர் தவிர்க்க வேண்டும். அவருடன் கூட்டணி சேர்ந்துள்ள நடிகர் நிதானமிழந்து பேசி வருகிறார். அந்த நடிகர் திமுக, பாமக கூட்டணி கொள்கையற்ற கூட்டணி என கூறி வருகிறார். திமுக, பாமக இரு கட்சிகளும் இடஒதுக்கீடு, சமூகநீதி, இந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சி, சமச்சீர்கல்வி, இருமொழிக் கொள்கை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றம், சிறுபான்மை மக்கள் பாதுகாப்பு, மதச்சார்பின்மை, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, அதற்கேற்ப இடஒதுக்கீடு, மத்திய, மாநில தமிழ் ஆட்சிமொழி, நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழி ஆகிய கொள்கைகளில் பாமகவுக்கும், திமுகவுக்கும் ஒற்றுமையும் உடன்பாடும் உள்ளது. அந்த வகையில் திமுக, பாமக கொள்கைக் கூட்டணி, லட்சியக் கூட்டணி. அதிமுக மற்றும் நடிகர் சேர்ந்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. தற்போது நடிகர் கட்சியை ஏன் சேர்த்தோம் என அதிமுக தலைமை புலம்பி வருகிறது. நடிகர் கட்சியினால் தமக்கு பாதிப்பு என அதிமுக தலைமை நினைக்கிறது. நடிகர் தனது வேட்பாளரை அடித்ததால் அதிமுகவுக்கு தமிழகத்தில் உள்ள கொஞ்சம், நஞ்சம் இருந்த பெண்கள் ஆதரவும் போய்விட்டது. கேரளம், அசாம், மேற்குவங்கத்தில் இதுபோன்று தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி கிடையாது. தமிழகத்தில்தான் அதிக கெடுபிடி செய்கிறது என்றார் ராமதாஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக