வெள்ளி, 1 ஏப்ரல், 2011

ம.தி.மு.க.வின் ஆதரவைக் கோரும் பணியில் தி.மு.க. களம்

தேர்தலில் இருந்து ஒதுங்கி நிற்கும் ம.தி.மு.க.வின் ஆதரவைக் கோரும் பணியில் தி.மு.க. களம் இறங்கியுள்ளது.
ம.தி.மு.க.வின் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு வெளியாகி பத்து நாள்கள் ஆகியும் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது பற்றியோ, யாருக்கு பணி செய்ய வேண்டும் என்றோ ம.தி.மு.க. தலைமை இதுவரை அறிவிக்கவில்லை. ம.தி.மு.க.வுக்கு கொங்கு மண்டத்திலும், தென் மாவட்டங்களிலும் குறிப்பிட்ட அளவுக்கு வாக்கு வங்கி உள்ளதை யாரும் மறுக்க முடியாது. 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் 35 இடங்களில் போட்டியிட்டு ஆறு இடங்களை வென்றது ம.தி.முக. அதன் வாக்கு சதவீதம் 5.98 சதவீதமாக இருந்தது. இதேபோன்று 2009 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் 11,12,908 வாக்குகளைப் பெற்றது. அதன் வாக்கு சதவீதம் 2.67 ஆகும். ஆதரவைக் கோருகிறது: 20 முதல் 30 தொகுதிகள் வரை குறிப்பிட்ட அளவுக்கு வாக்குகளை வைத்திருக்கும் ம.தி.மு.க.வை சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க.வினர் தொடர்பு கொண்டு ஆதரவு திரட்டத் தொடங்கியுள்ளனர். "தேர்தலில் ம.தி.மு.க.வினரின் பணியை மறுக்க முடியாது. குறைந்த அளவில் கட்சியினர் இருந்தாலும் அவர்களின் தேர்தல் பணி முக்கியமானது. இந்தத் தேர்தலில் அவர்கள் போட்டியிடவில்லை என முடிவு செய்துவிட்ட நிலையில் அவர்களின் வாக்கு வங்கியும், பணித் திறனும் வீணாகின்றன. இதனால், அந்த வாக்கு வங்கியை எப்படியாவது தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முடிவு செய்து ம.தி.மு.க.வுடன் பேசி வருகிறோம்'' என்கிறார் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர். தேர்தலைப் புறக்கணித்துள்ள ம.தி.மு.க., தி.மு.க. அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், இந்த வேண்டுகோளுக்கு முன்னதாகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ம.தி.மு.க. நிர்வாகிகளுடன் தி.மு.க. தரப்பு நல்லுறவை பேணத் தொடங்கிவிட்டிருக்கிறது. "கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்க விரும்பினோம். இதனால், பல முக்கிய பிரச்னைகளை கையில் எடுத்து பிரசாரத்தில் எதிரொலிக்கத் திட்டமிட்டு இருந்தோம். ஆனால், குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகளைக் கொடுத்து அ.தி.மு.க. தலைமை அவமானம் செய்து விட்டது. இதனால், அந்த அணியையே நாங்கள் முதலில் எதிர்க்கிறோம்' என்கின்றனர் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ம.தி.மு.க.வினர். வைகோ அறிவிப்பார்? தி.மு.க. தரப்பில் இருந்து ம.தி.மு.க. தலைமையிடமும் பேசப்பட்டு வருவதாக நம்பகத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கெல்லாம், ஏப்ரல் முதல் வாரத்தில் பதில் அளிப்பதாக ம.தி.மு.க. உறுதி அளித்துள்ளதாக தி.மு.க. வட்டாரங்கள் கூறுகின்றன. தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், கட்சியினர் தங்கள் விருப்பம் போல வாக்களிக்கலாம் என்ற நிலையுடன் ம.தி.மு.க. அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிவிப்பு வெளியாகாவிட்டாலும் மௌனத்தையே சம்மதமாக ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்களது செல்வாக்கு தி.மு.க.வுக்குச் செல்லும் என ம.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த தேர்தல்களில் தே.மு.தி.க. பிரித்த வாக்குகளால்தான் தி.மு.க.வின் வெற்றி நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த முறை அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இது ஒவ்வொரு தொகுதியிலும் தி.மு.க.வினரை கலக்கம் அடையச் செய்துள்ளது. இதைச் சரிக்கட்டவே ம.தி.மு.க.வின் வாக்கு வங்கிகளை தி.மு.க. கோருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தாய் கழகத்துடன் இணைந்து பணியா அல்லது தள்ளி நிற்பதா என்கிற முடிவு ம.தி.மு.க. சார்பில் விரைவில் வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு கட்சித் தொண்டர்களாலும், தி.மு.க.வினராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக