ஞாயிறு, 5 டிசம்பர், 2010

ரத்த சரித்திரம்: ஒரு உண்மை கதையை படமாக எடுத்திருக்கிறார் ராம் கோபால் வர்மா

ரத்த சரித்திரம் - விமர்சனம்

            ந்திர மாநிலத்தில் நடந்த ஒரு உண்மை கதையை படமாக எடுத்திருக்கிறார் ராம் கோபால் வர்மா. சூரியாக சூர்யா, பரிடால் ரவியாக பிரதாப் ரவி கதாபாத்திரத்தில் விவேக் ஒபராய் என இரண்டு தனி மனிதர்களுக்கும் இருந்த வன்முறை போராட்டத்தை ரத்தம் சொட்டட் சொட்ட சொல்லி இருக்கிறது ரத்த சரித்திரம். ஆந்திராவில் நடந்ததாக இருந்தாலும் தமிழ்நாட்டில் நடந்ததாகவே கதை சொல்லப்படுகிறது...

உண்மையில் நடந்தது என்ன என்று சம்பவங்களின் போது பல மர்மங்கள் நீடித்த நிலையில் படத்தில் சொல்லப் பட்ட கதையை பார்ப்போம்.

சினிமாவை தன் அரசியல் சக்தியாக மாற்றிய நடிகர் சிவராஜ் ( என்.டி.ஆராக சத்ருஹன் சின்ஹா). தேர்தலில் சிவராஜ் வெற்றியடைய முழு பலம் விவேக் ஓபராய். அரசியல் செல்வாக்கோடு அசைக்க முடியாத சிம்மாசனதில் இருப்பவன் விவேக் ஓபராய். அவனை எதிர்த்து நின்று பேசவும் யாருக்கும் தைரியம் இல்லை என்ற நிலை. சூர்யா விவேக் ஓபராயை கொல்ல மாஸ்டர் ப்ளான் போடுகிறார். சூர்யாவின் ப்ளான் தோல்வியில் முடிய, விவேக் ஓபராய் தப்பித்து விடுகிறார்.

சூர்யாவின் மனைவியை போலீஸ் பிடிக்க... சூர்யா போலீசில் சரணடையும் நிலை வருவதால்,  சிறைக்கு செல்கிறார். ஏன் இந்த கொலை வெறி? காரணம் உண்டு...

சூர்யாவின் வீட்டில் டி.வி. பாம் வைத்து மொத்த குடும்பத்தையும் தீர்த்து கட்டியது விவேக் ஓபராய். ஏன்? எதனால்? சூர்யாவின் தம்பி   அவர் மீது கொலை வெறியோடு திரிந்ததினால்... அது எதனால்? சூர்யாவின் அப்பாவை கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததினால். அது எதற்காக? சூர்யாவின் அப்பா, விவேக் ஓபராயின் அப்பாவையும் அண்ணனையும் கொடூரமான முறையில் கொலை செய்யக் காரணமாய் இருந்ததினாலே...


அது எதற்காக என்று மீண்டும் ஒரு கேள்வி எழுகிறது? சூர்யாவின் அப்பாவும் விவேக் ஓபராயின் அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். ஒருவருக்கொருவர் அன்பாய் இருந்தவர்கள், இது பிடிக்காமல் இருவரையும் பிரிக்க சூழ்ச்சி செய்தது நாகமணி கதாபாத்திரத்தில் வரும் கோட்டா சீனிவாச ராவ். இந்த சூழ்ச்சி தான் நடந்த எல்லா ரத்த கொடுமைகளுக்கும் காரணம்.

சிறையில் இருந்த படியே சூர்யா போடும் ப்ளான் என்ன, சூர்யா எப்படி விவேக் ஓபராயை கொலை செய்கிறார் என்பதையும் அதன் பிறகு சூர்யா எந்த நிலைக்கு ஆளாகிறார் என்பதையும் தெளிவான காட்சிகளோடு சொல்லி முடிக்கிறார் ராம் கோபால் வர்மா.

இதில் பலருக்கும் பல விமர்சனங்களும் கேள்விகளும் இருக்கிற நிலையில், இதை ஒரு சினிமாவாக ராம் கோபால் வர்மா எப்படி கையாண்டிருக்கிரார் என்பதே நாம் பார்க்க வேண்டிய முக்கியமான விஷயம். சினிமா விதிகளை எல்லாம் ஓரம் தள்ளி விட்டு தன் வழக்கமான ஸ்டைலில் வித்யாசமாகவே கையாண்டிருக்கிறார் ரா.கோ.வ. படத்தின் முதல் ஷாட் தொடங்கி கடைசி காட்சி வரை ரத்தம்!

சூரி கதாபாத்திரத்தை சூர்யாவைத் தவிர இளம் கதாநாயகர் யாரும் சிறப்பாக செய்திருக்க முடியாது என்பதே உண்மை. கண் அசைவுகளில் மிரட்டி இருக்கிறார்.

சிறைக்குள் நடக்கிற சண்டைக் காட்சிகள் எதார்த்தமாகவும் மிரட்டலாகவும் இருக்கிறது. விவேக் ஓபராயும் விட்டுக் கொடுக்காமல் நடித்திருக்கிறார்.

ப்ரியாமணி சில காட்சிகளுக்கு வந்தாலும் நச்சுனு நெஞ்சில் நிற்கிற மாதிரி கதாபாத்திரம். டி.வி.பாமில் சிதரிக் கிடக்கிற அம்மா, தங்கை, தம்பியை பார்க்கிற சூர்யா ரத்தம் சொட்ட சொட்ட தலையை சுவற்றில் இடித்தபடி அழுகிறார், அவருடன் ப்ரியாமணியும் அழுகிறார்... இந்த காட்சியில் இரண்டு பேருமே சிறந்த நடிகர்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

காட்சிக்கு காட்சி ரத்தத்தை சூடாக்குகிற தரம் - சந்தீபின் பின்னணி இசை... சில இடங்களில் அதிக இரைச்சல். அமோல் ரத்தோட் ஒளிப்பதிவு, உண்மையான சம்பவங்களை கேமராவுக்குள் கொண்டுவர ரொம்பவே சிரமப் பட்டிருகிறார். ரத்ததை படமாக்கி கேமராவே சிவப்பாக மாறியிருக்கும் போலிருக்கிறது.


ஒவ்வொரு வசனங்களிளும் ஒரு கோடி கோபம். கதாபாத்திரங்களுக்கு வசனத்தால் இன்னும் ரத்தம் சேர்த்திருகிறார்கள் ஞானவேல் - பரத்குமார். விவேக்ஓபராய் சூர்யாவிடம் நீ என்னை கொல்வியா? அது முடியுமா? என கேட்க அதற்கு சூர்யா... முடியும் ஏன்னா நான் சாவுக்கு பயப்படலை என சொல்லும் வசனம் நச்.

படத்தை கதையாக சொல்லும் பின்னணி குரல் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். கௌதமின் குரலில் ஆழமான கோபம், அளவான உணர்ச்சி, அழகான தமிழ்.

இரண்டு அரசியல் சாம்ராஜ்ஜியதிற்கு இடையே நடந்த ரத்த வெறி கலந்த பழிவாங்கும் போராட்டம். இதை சொல்லும் தைரியம் ராம் கோபால் வர்மாவிற்கு மட்டுமே இருந்திருக்கிறது. இது உண்மை சம்பவமாக இருந்தாலும்... ஒரு காட்சி கேமராவுக்குள் கொண்டுவரப் பட்டாலே அது சினிமாவாகவே மாறிவிடுகிறது.

ஆனால் காட்சிகளை நம்பகத் தன்மையோடும் உண்மையான எதார்தத்தோடும் பதிவு செய்ய முயற்சி செய்து அதில் முழுமை அடைந்திருகிறார்  ரா.கோ.வ. என்றே சொல்ல வேண்டும்.

படத்தின் முடிவு இன்னொரு தொடர்ச்சியாகவே இருக்கும் என கருதப்படுகிறது. பிரதாப் ரவி கதாபாத்திரதை ஏற்ற விவேக் ஓபராய் இறந்துவிட்டார்.

சூர்யா சிறையில் இருந்து வெளியே வந்து விட்டார்... விவேக் ஓபராயின் மனைவி கையில் இருக்கும் குழந்தை தான் படத்தின் கடைசி ஷாட். அப்படியென்றால்  இன்னொரு ரத்த சரித்திரம்....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக