வெள்ளி, 3 டிசம்பர், 2010

சினிமா பைனான்சியர் முத்துராஜா கொலை செய்யப்பட்டது உறுதி


நெல்லை மாவட்டம், தென்காசியை அடுத்த நெடுவயல் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லல் காத்தான் மகன் முத்துராஜா (35). சென்னை ராமாபுரத்தில் வசித்து வந்த இவர், சினிமா பைனான்சியர், வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்புபவர், எஸ்டேட் அதிபர், பண்ணை வீட்டு முதலாளி என்ற பல்முகம் கொண்ட கோடீசுவரர்.
கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி, மலேசியாவில் உள்ள தனது உயிர் நண்பர்களான, நாமக்கல்லை சேர்ந்த வக்கீல்கள் என்.பத்மநாபன் (41) மற்றும் அவரது சகோதரர் அழைத்ததின் பேரில் மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு சென்றார். அதன் பின்னர் அவர் சென்னை திரும்பவில்லை.
மலேசியாவில் மாயமான அவர், அங்கு கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அவரை அழைத்த வக்கீல் சகோதரர்களே அவரை கொலை செய்ததாகவும் அந்த பரபரப்பான தகவல்களில் கூறப்பட்டது.

மலேசியாவில் அழகுக்கலை நிபுணரும், கோடீசுவரியுமான சுசிலாவதி லாவியா என்பவரும், அவரது உதவியாளர்கள் 3 பேரும் கொலை செய்யப்பட்ட வழக்கிலும்,

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சிலரை கொலை செய்த வழக்கிலும் வக்கீல் சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.

அப்போது அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் முத்து ராஜா உள்பட மேலும் பலரை அந்த வக்கீல் சகோதரர்கள் படுகொலை செய்து இருப்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து, முத்துராஜா கொலை செய்யப்பட்ட தகவல்களை மலேசியா போலீசாரே, முத்து ராஜாவின் மனைவி உஷாராணிக்கு தெரிவித்தனர். ஆனால், முத்துராஜா உயிருடன் இருப்பதாகவும், அவர் மீண்டும் வருவார் என்றும் அவரது முதல் மனைவி ராமலட்சுமியும், அவரது தந்தை அல்லல் காத்தானும் உறுதியாக நம்பிக்கை தெரிவித்தனர்.

முத்துராஜா கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் பான்டிங் பகுதியில் உள்ள லடாங் கடோங் என்ற இடத்தில், அவர் கொலை செய்யப்பட்டதற்கான எந்த தடயமும் கண்டுபிடிக்கப்பட வில்லை.

மேலும் முத்துராஜா கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட எலும்பு மஜ்ஜை மற்றும் முத்துராஜாவின் தந்தை அல்லல் காத்தானின் ரத்த மாதிரி ஆகியவற்றை டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி, கொலை செய்யப்பட்டது முத்துராஜாதானா என்று போலீசார் உறுதி செய்ய முடிவு செய்து இருந்தனர். ஆனால் முத்துராஜாவின் தந்தையிடம் இருந்து இன்னமும் ரத்த மாதிரி எடுக்கப்படாததால், மரபணு (டி.என்.ஏ.) சோதனை நடத்த முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில், முத்துராஜா கொலை செய்யப்பட்டது உறுதிதான் என்று மலேசியா போலீசார் நேற்று திட்டவட்டமாக தெரிவித்தனர். இது தொடர்பாக முத்துராஜா கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் கோலா லங்கட் மாவட்ட போலீசார் அல்லல் காத்தானின் வக்கீல் மற்றும் மனைவி உஷாராணியின் வக்கீல் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும் நேற்று தெரிவித்தனர்.

மலேசியா போலீசார் அனுப்பிய கடிதம் உஷாராணியின் வக்கீலுக்கு கிடைத்து இருப்பதாகவும், அவர் விரைவில் மலேசியா வந்து வக்கீல் சகோதரர்களில் ஒருவரான பத்மநாபன் மீது சிவில் வழக்கு தொடர இருப்பதாகவும் மலேசியா எம்.பி. மாணிக்கவாசகம் கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக