வெள்ளி, 3 டிசம்பர், 2010

ஒன்றரை மாதத்தில் 21,000 கைது,ஹெரோயின் பாவனை மற்றும் விற்பனை தொடர்பில் 4412 சுற்றிவளைப்புகள்

கடந்த ஒன்றரை மாதத்தில் நாடு பூராவும் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல்களின் போது போதைப் பொருள் மற்றும் மதுபானம் தொடர்பில் 20,722 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய கூறினார்.
இவர்களிடமிருந்து  53,617 கிராம் போதைப் பொருட்களும் 3 இலட்சத்து 67,098 லீட்டர் மதுபான வகைகளும் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.  பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த காலத்தில் போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல்கள் பற்றி விளக்கமளித்த பொலிஸ் மா அதிபர் மேலும் கூறியதாவது,
கடந்த ஒக்டோபர்     15ஆம் திகதி முதல் நாடு பூராவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதல்களில் பெருமளவு போதைப் பொருட்கள் பிடிபட்டன. சட்டவிரோத சாராயம் தொடர்பில் தனியான பொலிஸ் குழுக்கள் தேடுதல் நடத்தின.      போதைப் பொருட்கள் தொடர்பில் 16,111 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டன. இதன் போது 16,401 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர். 670 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஹெரோயின் பாவனை மற்றும் விற்பனை தொடர்பில் 4412 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டதில் 7.51 கிலோ கிராம் போதைவஸ்துக்கள் பிடிபட்டன. 4413 பேர் கைது செய்யப்பட்டனர். 363 பேருக்கு எதிராக வழக்கு தொடர்ந் துள்ளோம்.
கஞ்சா தொடர்பான 10,149 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டதில் 10,107 பேர் கைது செய்யப்பட்டனர்.   இதன் போது    51.57 கிலோ    கிராம்  கஞ்சா கைப்பற்றப்பட்டது. 307 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.      பாபுல் மற்றும் லேகியம் தொடர்பிலான தேடுதல்களின் போது 1535 பேர் கைது செய்யப்பட்டதோடு 2034 கிலோ கிராம் போதைப் பொருட்கள் பிடிபட்டன.
பேருவளை பகுதியில் ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான பாபுல் மற்றும் லேகியம் என்பன மீட்கப்பட்டன.  மதுபானம் தொடர்பிலான 4417 சுற்றிவளைப்புத் தேடுதல்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப் பட்டன.
இதன் போது 4321 பேர் கைதானதோடு 3,67,098 லீட்டர் சட்ட விரோத மதுபானங்கள் கைப்பற்றப்பட்டன.
மதுபானம் தயாரிக்கும் இடங்களை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியதில் 1044 பேர் கைதானார்கள். இவர்களிடமிருந்து 3,11,000 லீட்டர் மதுபானம் கைப்பற்றப்படடது.    மதுபான கடத்தல் தொடர்பில் 1054 பேர்    கைதானதோடு 2452 லீட்டர் மதுபானம் மீட்கப்பட்டது.    மதுபானம் விற்பனை செய்வோர் 855 பேரை கைது செய்ததோடு இவர்களிடமிருந்து 9319 லீட்டர் கைப்பற்றினோம்.
விளையாட்டு சங்கங்கள் மற்றும் இரவு நேர களியாட்ட விடுதிகளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றது தொடர்பாக 301 பேர் கைதானார்கள். இவர்களிடமிருந்து 9820 லீட்டர் மதுபானம் கைப்பற்றப்பட்டது.
மதுபான வகைகளை சட்டவிரோதமாக வைத்திருந்தது தொடர்பில் 1970 பேர் பிடிபட்ட அதேவேளை இவர்களிடமிருந்து 9820 லீட்டர் மதுபானத்தை கைப்பற்றியுள்ளோம்.
ஜனாதிபதியின் ‘மதட தித்த’ திட்டத்திற்கமைவாக இந்த தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டன. குறுகிய காலத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி கண்டுள்ளோம். மதுபானம் மற்றும் போதைப் பொருள் பாவனையை முற்றாக ஒழிக்கும் வரை எமது நடவடிக்கை தொடரும் என்று அவர் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக