வியாழன், 4 நவம்பர், 2010

TNA தலைவர்களை அழைத்து இந்தியத் தூதுவர் ஆலோசனை:அரசியல் தீர்வு குறித்து கொழும்புடன் பேசுமாறு சூசகமாகத் தெரிவிப்பு!


தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக இலங்கை அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதில் இந்தியா மிகுந்த அக்கறை காட்டி வருகின்றது.இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்களுடனான சந்திப்பின்போது இந்தியத் தூதுவர் அசோக் காந்தா தெரிவித்ததாக சந்திப்பில் கலந்துகொண்ட யாழ்.மாவட்ட எம்.பி.யும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராஜா நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இந்திய உயர்ஸ்தானிகரின் வாசஸ்தலமான இந்திய இல்லத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை 7 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தித்திருக்கிறார். அவரின் அழைப்பின்பேரில் இச்சந்திப்பு இடம்பெற்றதாக மாவை சேனாதிராஜா கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா,சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். இந்தியத் தூதுவருடன் பிரதித் தூதுவர் மிஸ்ரா தூதராக அரசியல்துறைச் செயலாளர் ஸ்ரீவாத்சவா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 500 உழவு இயந்திரங்களை அன்றையதினம் இந்தியா கையளித்திருப்பது பற்றி கூட்டமைப்பு எம்.பி.க்களிடம் கூறிய இந்தியத் தூதுவர் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகளை வழங்குவதற்கு இந்தியா மேலும் தயாராகவிருப்பதாகவும் உறுதியளித்திருக்கிறார்.
அதேசமயம், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக கொழும்பும் தமிழ்க் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதில் புதுடில்லி தீவிரமாக அக்கறை காட்டி வருவதாக உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.இந்த மாத இறுதியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கைக்கு வருகைதரவுள்ள நிலையில், வட,கிழக்குத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய கட்சியானதமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்களை அழைத்து இந்தியத் தூதுவர் பேச்சு நடத்தியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக