வியாழன், 25 நவம்பர், 2010

Mulayam ready.பீகார் தேர்தல் முடிவால் பீதி-உ.பியில் கூட்டணிக்கு முலாயம்

பீகார் சட்டசபைத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவ் கூட்டணிக்கு ஏற்பட்ட கடும் அடியைப் பார்த்து பீதியடைந்துள்ள முலாயம் சிங் யாதவ், உ.பியில் தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைக்க தாங்கள் தயாராக இருப்பதாக காங்கிரஸுக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளார்.

2012ல் உ.பியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. சமீபத்தில் முடிவடைந்த பீகார் சட்டசபைத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவ் கூட்டணி வெற்றி பெறும். அதைத் தொடர்ந்து உ.பியிலும், லாலுவுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து காங்கிரஸுக்கு நெருக்கடி தரலாம் என நினைத்திருந்தார் சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ். ஆனால் லாலுவுக்குக் கிடைத்துள்ள அடி அவரை தடம்புரள வைத்துள்ளது.

இந்த நிலையில்,உ.பியில் தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைக்க தாங்கள் தயார் என்று முலாயம் கூறியுள்ளார். இதுகுறித்து மீரட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எங்களது சிந்தனையை ஒத்த கட்சிகளுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இதுகுறித்த விவரத்தை பொருத்தமான நேரத்தில் அறிவிப்போம்.

காங்கிரஸுடன் கூட்டணி வருமா என்பது குறித்து இப்போது தெரிவிக்க விரும்பவில்லை. எங்களது கட்சியின் சிந்தனையுடன் ஒத்தவர்களாக இருந்தால் கூட்டணி அமையும். ராஷ்டிரிய லோக்தளம் கட்சிக்கும், எங்களது கட்சிக்கும் இடையே நல்ல பொருத்தம் உள்ளது. எனவே இந்த கூட்டணியை மக்கள் விரும்புகிறார்கள்.

உ.பியில் அடுத்து சமாஜ்வாடிதான் ஆட்சியைப் பிடிக்கும். பகுஜன் சமாஜ் கட்சியில் உ.பியில் நிலைமை மோசமாக உள்ளது. சட்டம் ஒழுங்கு நிலை மோசமாக உள்ளது என்றார் முலாயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக