செவ்வாய், 2 நவம்பர், 2010

மரண தண்டனைக்கும் கருணை மனுவுக்குமிடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது மூதூர் ரிஸானா நபீக்கின் உயிர்

அல்லாஹ்வுக்காக மன்னியுங்கள்! ‘மரண தண்டனைக்கும் கருணை மனுவுக்குமிடையில் ஊசலாடும் ரிஸானா நபீக்

மரண தண்டனைக்கும் கருணை மனுவுக்குமிடையே ஊசலாடிக்  கொண்டிருக்கிறது மூதூர் ரிஸானா நபீக்கின் உயிர்.  மூதூரிலிருந்து சவூதி அரேபியாவுக்கு பணிப் பெண்ணாகச் சென்ற  ரிஸானா நபீக் மீது குழந்தை ஒன்றை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பை அந்நாட்டு உயர் நீதிமன்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீளவும் உறுதி செய்திருக்கிறது.
இச் செய்தியானது இலங்கையில் மட்டுமன்றி உலகெங்கும் வாழுகின்ற மனிதாபிமானத்தை நேசிக்கின்றவர்களையெல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
யார் இந்த ரிஸானா?
வறுமை, பட்டினி, பணமின்மை, குடியிருக்க வீடில்லை என பல்வேறு பிரச்சினைகள்  ரிஸானாவின் குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை. மூதூரைச் சேர்ந்தவர் சுல்தான் நபீக். இவர் ரிஸானாவின் தந்தை. கூலித் தொழில் செய்து வரும் இவர் மிகவும் கஷ்டத்திற்கும் மத்தியில் தனது பிள்ளைகளை படிக்க வைத்தார். ரிஸானா குடும்பத்தில் மூத்த பிள்ளை. வெளிநாடு செல்வதற்கு முன்னர் 9ஆம் தரத்தில் படித்துக் கொண்டிருந்தாள். வறுமை ரிஸானாவின் குடும்பத்தை தொடர்ந்தமையால் தனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வெளிநாடு சென்றாள் ரிஸானா.
அப்போது வெளிநாடு செல்வதற்குரிய வயதை ரிஸானா அடைந்திராவிட்டாலும் பேயைக் கூட `பெக்’ பண்ணி அனுப்பி வைப்பதில் புகழ் பெற்ற நம் நாட்டு முகவர் நிறுவனங்களின் உதவியுடன் ரிஸானா வயதைக் கூடுதலாகக் காட்டி சவூதிக்கு அனுப்பி வைக்கப்பட்டாள்.
2005ஆம் ஆண்டு மே மாதம்  சவூதிக்குச் செல்லும்போது அவளுக்கு வயது வெறும் 16 மட்டுமே.
என்ன நடந்தது?
வீடு ஒன்றுக்குப் பணிப் பெண்ணாகச் சென்ற ரிஸானாவுக்கு துணி துவைத்தல், சமையலுக்கு உதவி செய்தல், வீட்டை துப்பரவு செய்தல் போன்ற வேலைகளுடன் அந்த வீட்டு எஜமானின் 4 மாத ஆண்குழந்தையை பராமரிக்கும் பொறுப்பும் சுமத்தப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
ரிஸானா சவூதி அரேபியாவுக்கு சென்று முதலாவதும் கடைசியுமாக ஒரு கடிதம் எழுதியிருக்கிறாள். அக் கடிதத்தில் தான் பணி புரியும்  வீட்டில் வேலைகள் அதிகமாக இருப்பதாகவும் காலை 5  மணி யிலிருந்து நள்ளிரவு 2 மணி வரை வேலை செய்ய வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் அத்துடன் 4 மாதக் குழந்தையையும் தானே பராமரிக்க வேண்டியிருப்பதாகவும் அக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாள். இக் கடிதத்தின் பின்னர் ரிஸானாவுடனான எந்த தொடர்புகளையும் பெற்றோரால் ஏற்படுத்த முடியவில்லை.
இந் நிலையில்  2005ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி ரிஸானா அக் குழந்தைக்கு போத்தலில் பால் கொடுத்துக் கொண்டிருந்த போது திடீரென குழந் தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் ஆத்தரமடைந்த வீட்டு எஜமான் தனது குழந்தையை ரிஸானா வேண்டுமென்றே கொலை செய்ததாகக் கூறி ரிஸானாவை ரியாத் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
சில நாட்களின் பின்னர் ரிஸானா நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது தான் வெளிநாடு வரும்போது தனக்கு 16 வயது எனவும் தன்னை வெளிநாட்டுக்கு அனுப்பிய முகவர் நிலையம் தனது வயதை கூட்டி 22 வயது என கடவுச் சீட்டைப் பெற்று வெளிநாடு அனுப்பியதாக ரிஸானா தெரிவித்துள்ளார். ஆனால் அவரது பிறப்புச் சான்றிதழ் மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை. பிறப்புச் சான்றிதழில் 1988.02.04 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கடவுச் சீட்டில் 1982.02.02 என மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இவற்றைக் கவனத்திற் கொண்ட 3 நீதிபதிகள் அடங்கிய குழுவினர் ரிஸானா பணி புரிந்த வீட்டு எஜமானாகிய நைப் ஜிஸ்யான் கலப் அல் உதைபியிடம் ரிஸானாவை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு அவர் அதனை மறுத்துள்ளதுடன் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்படல் வேண்டும் என கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த 2007 ஆம் ஆண்டு ஜன் மாதம் 16ஆம் திகதி ரிஸானாவுக்கு மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிமன்ற விசாரணையில் தான் குழந்தையைக் கொலை செய்யவில்லை எனவும்  மூச்சுத்திணறியே குழந்தை உயிரிழந்தது எனவும் ரிஸானா நீதிமன்றில் கூறியுள்ளார். இருப்பினும் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் ரிஸானாவின் வாக்குமூலத்தை சரியாக மொழிபெயர்க்கவில்லை எனவும் இதன்காரணமாக நீதிபதிகள் ரிஸானா குற்றத்தை ஒப்புக் கொண்டதாகக் கூறியே மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.
இருப்பினும் இத் தீர்ப்புக்கு எதிராக சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கிளர்ந்தெழுந்தன. 18 வயதுக்குக் குறைவான ஒருவருக்கு மரண தண்டனை விதிக்க முடியாது எனக் கூறி சவூதி உயர் நீதிமன்றத்தில் மேன் முறையீட்டு  மனு  ஒன்றையும் இவ் அமைப்புக்கள் தாக்கல் செய்தன.
அத்துடன் ரிஸானா விவகாரம் தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ரிஸானாவை வெளிநாட்டுக்கு அனுப்பிய முகவர் நிலையத்தின் அனுமதிப் பத்திரத்தையும் இரத்து செய்யுமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  வெளிவிவகார அமைச்சுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அத்துடன் ரிஸானாவின் தந்தையான சுல்தான் நபீக் மரணமான குழந்தையின் பெற்றோர்களிடம் மன்னிப்புக் கோரி கடிதம் ஒன்றை ஆங்கில மொழி பெயர்ப்புடன் அனுப்பி வைத்திருந்தார். அதற்கும் அவர்கள் இரங்காத நிலையில்  முன்னாள் வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹுஸைன் பைலாவின் உதவியுடன் ரிஸானாவின் பெற்றோர் சவுதி அரேபியா சென்று ரிஸானாவை நேரில் சந்தித்ததுடன் உயிரிழந்த குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து மன்னிப்புக் கோரவும் முயற்சி செய்தனர். இருப்பினும் இங்கிருந்து கஷ்டப்பட்டு சவூதி சென்ற ரிஸானாவின் பெற்றோரைச் சந்திப்பதற்குக் கூட அவர்கள் மறுத்து விட்டனர்.
இந்நிலையில் நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் மேன்முறையீடு மனு கடந்த சனிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் ரிஸானா தொடர்பான மேன்முறையீட்டு மனுவை நிராகரித்துள்ளதுடன் ரிஸானா குற்றவாளி எனவும் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் இரண்டாவது தடவையாகவும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அடுத்து வருகின்ற ஏதாவது ஒரு வெள்ளிக் கிழமையில் ரிஸானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என சவுதி அரேபிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் தமது மகளை அல்லாஹ்வுக்காக மன்னித்து விடுதலை செய்யுமாறும் மரண தண்டனையிலிருந்து காப்பாற்றுமாறும் ரிஸானாவின் பெற்றோர் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இத் தீர்ப்பு வழங்கப்பட்ட மறுதினமே  ரிஸானா நபீக்கை மன்னித்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு  சவூதி அரேபிய மன்னருக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அது மட்டுமன்றி ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புக்களும் ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரியுள்ளதுடன் இது விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையையும்   அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை தலையிடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளன.   எது எப்படியிருப்பினும் சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி குறித்த குழந்தையின் பெற்றோரிடமிருந்து ரிஸானாவுக்கு மன்னிப்பைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். அத்துடன் முழு உலகுமே இன்று கெஞ்சிக் கேட்கும் மன்னிப்பை வழங்குவதில் இன்னமும் பின்னிற்காது குறித்த சவூதி அரேபிய பெற்றோர் ரிஸானாவுக்கு புது வழங்க முன்வர வேண்டும்.
மனிதருள் மாணிக்கமாக மன்னிப்புக்கு முன்னுதாரணமாத் திகழ்ந்த மாநாபி முஹம்மத் (ஸல்) அவர்கள் வாழ்ந்த அம் மண்ணிலிருந்து கொண்டு `மன்னிக்கமாட்டோம்….’ என அடம்பிடிப்பது நியாயமாகுமாகுமா?
எனவேதான் உங்களைப் பார்த்து நாமும் கேட்கிறோம்… அல்லாஹ்வுக்காக எங்கள் அப்பாவி சகோதரி ரிஸானாவை மன்னித்து விடுங்கள்….யா அல்லாஹ்… அவர்களின் உள்ளங்களில் இரக்கத்தை சொரிய வைப்பாயாக!

1 கருத்து:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு