வெள்ளி, 26 நவம்பர், 2010

ஆஸிக்கு அரசியல் தஞ்சம் தேடிச் சென்ற தமிழர்கள் இருவர் சிறையில் தற்கொலை முயற்சி!

ஆஸ்திரேலியாவுக்கு அரசியல் தஞ்சம் கோரி வந்த நிலையில் பேர்த் நகரத்தில் உள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கான முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்களில் இருவர் கடந்த திங்கட்கிழமை குளிசைகளை அளவுக்கு அதிகமாக விழுங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்கள்.
இவர்கள் உடனடியாக ரோயல் பேர்த் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் குணம் ஆகி வருகின்றனர் என்று ஆஸ்திரேலிய அரச உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
ஆனால் இவர்களின் தற்கொலை முயற்சி அரசியல் தஞ்சம் வழங்கும் நடவடிக்கையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் கூறினார். இவர்கள் கடந்த 17 மாதங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றனர்.
இதனால் மனம் உடைந்த நிலையிலேயே உயிரை மாய்க்க துணிந்து இருக்கின்றார்கள். நீண்ட நாட்களாக சிறுகச் சிறுக இம்மாத்திரைகளை சேர்த்து வந்திருக்கின்றனர்.
இவர்களில் ஒருவர் கிறிஸ்மஸ் தீவில் கடந்த வருடம் ஆப்கானியர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களில் ஒருவரென நீதிமன்றால் குற்றவாளியாக காணப்பட்டு உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக