சனி, 20 நவம்பர், 2010

புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் தமது வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ள இன்று எதனையும் கூறமுடியாத

புலிகளின் எலும்புக்கூடுகளின் கரும் நிழல்கள் சர்வதேசத்திடம் வேறு கதைகளைக் கூறுகின்றன
யுத்தம் முடிவடைந்துள்ளபோதும் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சில ஊடகங்களின் ஆதரவுடன் மோதல்கள் வேறுவடிவத்தைப் பெற்றுள்ளதென ஐ.நா.வின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா நல்லிணக்க ஆணைக்குழு முன் தெரிவித்துள்ளார்.கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் இரண்டாவது தடவையாக நேற்று முன்தினம் வியாழக்கிழமை சாட்சியமளிக்கையிலேயே 58 ஆவது படையணியின் முன்னாள் தலைமையதிகாரியும் ஐ.நா.வுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதியுமான சவேந்திர சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் நேற்று முன்தினம் மாலை கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்ற அமர்வில் சாட்சியமளித்தார்.இராணுவச் சீருடையுடனும் பதக்கங்கள் முத்திரைகளுடன் நல்லிணக்க ஆணைக்குழு முன் முதற்தடவையாகச் சாட்சியமளித்த நான் இன்று ஐ.நா.தலைமையகத்தில் எமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜதந்திரியாக இரண்டாவது தடவையாக இந்த ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கின்றேன் என தனது சாட்சியத்தை ஆரம்பித்த சவேந்திர சில்வா தொடர்ந்து தெரிவிக்கையில்;

நான் களத் தளபதியாகப் போரிட்ட மண்ணில் அன்று துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களே கேட்டன. ஆனால், இன்று அவற்றைக் கேட்கமுடியவில்லை. மாறாக உழவு இயந்திரங்களினதும் ஏனைய விவசாய கனரக வாகனங்களினது சத்தத்தையே கேட்க முடிகின்றது. சீருடையுடன் மனிதர்கள் அங்கு உள்ளனர். ஆனால், அவர்களின் கையில் ஆயுதம் இல்லை. அங்குள்ள மக்கள் நிலத்தைத் தோண்டுகின்றனர். பதப்படுத்துகின்றனர்.

அவை பதுங்கு குழிகளையோ மண் அணைகளையோ உருவாக்குவதற்காக இல்லை விவசாயத்தை மேற்கொள்வதற்காக.இன்று நான் நாட்டைவிட்டு வெளியேறி பணிபுரிந்தாலும் மனிதன் என்ற ரீதியில் சிறந்த பணியைச் செய்து நிறைவேற்றியுள்ளேன்.

ஆனால், விடுதலைப் புலிகளின் எலும்புக் கூடுகளின் கரும் நிழல்கள் சர்வதேசத்தின் முன்னால் வேறுபட்ட கதைகளைக் கூறுவதை என்னால் காணமுடிகின்றது.

புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் தமது வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ள இன்று எதனையும் கூறமுடியாத நிலையில் உள்ளனர்.

இலங்கையின் பிரதிமையை அழிப்பதற்கு பல விடயங்களை இலக்குவைத்து சளைத்துப்போன பின்னர் தற்பொழுது சர்வதேசத்தின் கவனங்களை திசைதிருப்பும் தன்மையுடைய சிவிலியன்கள் விடயத்தினை புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் தமது இலக்காகக் கொண்டு முயற்சிக்கின்றனர்.

சாதாரண சிப்பாய்களைக் கொண்டுள்ள இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை ஒருபோதும் வெல்ல முடியாதென்றே உலகின் மூன்றில் இரண்டு பங்கினர் தெரிவித்தனர்.

இந்நிலையிலும் எமது இராணுவம் போதிய ஆயுத வளங்களைக் கொண்டிருந்தாலும் பின்னர் பாதுகாப்புச் செயலாளரினால் மிகவும் அதிநவீன இலத்திரனியல் சாதனங்கள், ஆயுதங்கள் பெற்றுத்தரப்பட்டது.

விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டிலிருந்த பகுதியை தனிநாடாகவே நிர்வகித்து வந்தனர். தனிப்பட்ட ஆட்சி நிர்வாகம், காவல்துறை, தரைப்படை, வான்படை, கடற்படை ஆகியவற்றுடன் வங்கியையும் நிர்வகித்து வந்தனர்.

பாடசாலைகள் கெரில்லா கூடங்களாகவும் தேவாலயங்கள் ஆட்லறி தளங்கள் பதுங்கு குழிகளாகவும் மருத்துவமனைகள் ஆட்லறித் தளங்களாகவும் பயன்படுத்தப்பட்டது.

வடக்குக் கிழக்கில் அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராக விடுதலைப் புலிகள் செய்தவற்றை எவரும் இலகுவில் மறந்துவிட முடியாது.

இதுபோன்ற காரணங்களினாலேயே விடுதலைப் புலிகள் தமது ஆட்பலத்தை இழந்தனர்.

சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருசில சர்வதேச ஊடகங்களின் ஆதரவுடன் மோதல்கள் தற்பொழுது வேறுவடிவத்தைப் பெற்றுள்ளது.

விடுதலைப் புலிகளினால் தமது சொந்த மண்ணில் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கும் பதில்சொல்ல வேண்டிய கடப்பாடுடையவர்களாக நாம் உள்ளோம்.

விலை மதிப்பற்ற இந்நாட்டின் சுதந்திரத்திற்கு எதிராக விடுதலைப் புலிகளின் கைப்பொம்மைகள் தொடர்ந்தும் செயற்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

ஆலயங்கள், தேவாலயங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் விடுதலைப் புலிகள் பதுங்கியிருந்தமையை நாம் அறிந்திருந்தோம். குறித்த இடங்களுக்கு எம்மால் தாக்குதல் நடத்தியிருக்க முடியும்.

பொதுச் சொத்துகளுக்கும் பொதுமக்களுக்கும் பூச்சிய பாதிப்பு என்ற கொள்கையைப் பாதுகாப்புச் செயலரின் உத்தரவிற்கு அமைவாக நாம் பேணினோம்.

ஆனால், விடுதலைப் புலிகள் பொதுமக்களைச் சுட்டுக்கொன்றனர். மோதலின் இறுதிக் கட்டத்தில் காயமடைந்ததாகக் காட்டப்பட்ட பொதுமக்கள் தற்பொழுது எங்கே.

விடுதலைப் புலிகளின் சிறைச்சாலைகளை நாம் பார்வையிட்டோம். அச்சுவர்களில் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டவர்கள் இரத்தத்தினால் எழுதியுள்ளனர்.

விஸ்வமடு, தர்மபுரம், முல்லைத்தீவு காடுகளில் இருந்த விடுதலைப் புலிகளின் சிறைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் இரும்புச் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தனர்.

இவ்விடயங்கள் குறித்து ஊடகங்கள் ஏன் வெளிப்படுத்தவில்லை. இவ்வாறு கைதிகளாக இருந்தவர்கள் தற்பொழுது எங்கே?

கடல்கோளின்போது இறந்தவர்களின் புகைப்படங்கள் விடுதலைப்புலிகளினால் வெளியிடப்படவில்லை. ஆனால், அப்படங்கள் மோதலில் இறந்தவர்களாகக் காட்டி தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் மக்கள் படை போராளி படையென்ற விடயங்கள் குறித்து பரவலாகப் பேசப்படுகின்றது. இவர்கள் இராணுவத்திற்கு எதிரான போருக்காகப் பயிற்றப்பட்ட சிவிலியன்கள் ஆவர்.

அத்துடன், விடுதலைப்புலிகள் சிவில் உடையிலேயே போரிட்டனர். குறிப்பாக மோதலின் இறுதிக்கட்டத்திலும் சிவில் உடையிலேயே அவர்கள் இருந்தனர்.

சிவில் உடையில் மீட்கப்பட்ட சடலங்களின் கழுத்திலும் கையிலும் இலக்கமும் இரத்த வகையும் குறிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு இறந்தவர்களை பொதுமக்களாகக் காட்ட சில ஊடகங்கள் முயற்சிக்கின்றனவ.

ஆனால், இறந்தவர்கள் பொதுமக்கள் அல்ல என்பது ஐ.சி.ஆர்.சி. ஊடாக விடுதலைப்புலிகளிடம் சடலங்களை ஒப்படைத்தபோது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த உடல்களைப் பொறுப்பேற்க விடுதலைப்புலிகள் மறுக்கவில்லை. ஏனெனில் அவை விடுதலைப்புலிகளின் உடல்கள்.

எமது இலக்கை பூரணமாக நிறைவேற்றுவதற்கு உத்தரவுகளுக்கமைவாக எமக்குப் படையினர்க்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டதுடன் இராணுவம் முழு அளவில் ஆயுத வளத்தையும் பெற்றிருந்தது.

விடுதலைப்புலிகளின் வரிசேகரிப்பு பிரிவின் தலைவரான எழிலனைத் தேடித்தருமாறு அவரது மனைவி ஆணைக்குழு முன் கோரியுள்ளார். எழிலன் தான் கட்டாய ஆட்

சேர்ப்புக்கும் பொறுப்பாக இருந்தவர். அவரின் மனைவியின் இன்றைய நிலையை நோக்குங்கள். தனது கணவருக்காக ஏங்குகின்றார்.

மோதலில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், காயமடைந்த புலி உறுப்பினர்களைக் காணவில்லை. அவர்கள் எங்கே? காயமடைந்த புலிகளை புலிகளே சுட்டுக்கொன்று விடுவார்கள்.

அத்துடன், விடுதலைப்புலிகள் மக்களைச் சுட்டுக்கொன்றுள்ளனர். ஆனால் , புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையை எம்மால் கூற முடியாது.

மோதலின்போது இராணுவத்தினர் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை.

மோதலின் இறுதிக் கட்டத்தில் புலிகளை நாம் செய்மதி மூலம் அடையாளம் கண்ட பின்னரும் கூட நாம் கனரக ஆயுதங்களால் தாக்கவில்லை. ஏனெனில் நாம் மோதலில் வெற்றியடையப்போகின்றோம் என எமக்குத் தெரியும்.

மோதலின் இறுதிக் கட்டத்தில் ரி 56 ரகத் துப்பாக்கிகளையே நாம் பயன்படுத்தினோம்.

விடுதலைப்புலிகளை இறுதிக் கட்டத்தில் வெற்றிகொள்ள அதிகாலை 1 மணி முதல் 2 மணிவரையான நேரத்தையே நாம் பயன்படுத்தினோம்.

இறுதி நேரத்தில் அனைவரையும் நாம் சுற்றி வளைத்த பின்னர் பொட்டு அம்மான், தமது சகாக்களிடம் தாம் இராணுவத்திடம் தோற்றுவிட்டதாகக் கூறியதை எம்மால் கேட்க முடிந்தது.

2009 மே மாதத்தின் பின்னர் இராணுவத்தினர் பொதுமக்கள் எவரையும் கைதுசெய்யவில்லை. அவ்வேளை, முன்னர் எவராவது கைது செய்யப்பட்டால் அங்கு சரணடைந்தால் அவர்களைப் பதிவு செய்து உரிய தரப்பிடம் ஒப்படைத்துவிடுவோம்.
2009 மே 17,18 ஆகிய திகதிகளில் மக்களோ, புலிகளோ சரணடையும்போது அரசசார்பற்ற நிறுவனங்கள் பிரசன்னமாகியிருக்கவில்லை எனத் தெரிவித்தார்
- தினக்குரல் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக