ஞாயிறு, 28 நவம்பர், 2010

ஊழல் பெருச்சாளி மொபூட்டு நாட்டுப் பணத்தை மொத்தமாக கொள்ளையடித்து சுவிஸ் வங்கியில்

மொபூட்டு
ஈ மெயில் ஐடி வைத்திருக்கும் அனைவருக்கும் எந்த மின்னஞ்சல் வருதோ இல்லையோ தவறாமல் ஆப்பிரிக்க சர்வாதிகாரி மின்னஞ்சல் ஒன்று வந்திருக்கும்.  எங்கப்பா ஒரு ___  ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி. அவர் நிறைய பணத்தை சுவிஸ் வங்கியில் போட்டு வைத்து விட்டு செத்துப் போனார். அதை உங்கள் வங்கி கணக்குக்கு மாற்றி விடுகிறேன், கமிஷனும் தருகிறேன் என்று ஆசைகாட்டி இதுவரை உலகெங்கும் பல நாடுகளில் பல பேரின் பணத்தை ஏமாற்றிச் சுருட்டிள்ளது இந்த நைஜீரிய ஈ மெயில் மோசடி.  பேர் தான் நைஜீரிய மோசடியே தவிர இந்த மோசடிப் பேர்வழிகள் அடிக்கடிப்  பயனபடுத்துவதென்னவோ காங்கோ நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி மொபூட்டுவின் பெயரைத் தான்.  யாரிந்த மொபூட்டு? ஒரு சாதாரண ஆப்பிரிக்க நாட்டின் தலைவருக்கு எப்படி சுவிஸ் வங்கியில் இவ்வளவு பணம் இருக்க முடியும்? என்று கேட்கிறீர்களா. ஆப்பிரிக்கா என்றால் நினைவுக்கு வரும் காடு, யானை என்ற ஸ்டீரியோடைப்புகளின் வரிசையில் நாட்டுப் பணத்தை மொத்தமாக  கொள்ளையடித்து சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் சர்வாதிகாரி என்ற ஸ்டீரியோடைப்பையும் சேர்த்த புண்ணியவான் தான் மொபூட்டு. காங்கோ நாட்டை அப்படியே சுருட்டி முப்பது வருட காலமாகத் தன் பாக்கெட்டில் வைத்திருந்தவர்.
பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பொதுவாக ஒரு சாபக்கேடு உள்ளது.  பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய காலனியாதிக்க நாடுகள் தங்கள் சாம்ராஜ்ய கனவுகளைத் தணித்துக் கொள்ள ஆப்பிரிக்கக் கண்டத்தைத் தான் பயன்படுத்தின. 20ம் நூற்றாண்டில் காலனியாதிக்கம் குறைந்து ஐரோப்பிய எஜமானர்களிடமிருந்து விடுதலையடைந்த ஆப்பிரிக்க நாடுகள் சர்வாதிகாரிகளிடமும் திருடர்களிடமும் சிக்கிக் கொண்டன. உள்நாட்டுப் போர்கள், இனக் கலவரங்கள்,  படுகொலைகள், மட்டமான நிர்வாகம்,  பரவும் தொற்று நோய்கள், கொடிய வறுமை என ஆப்பிரிக்க மக்கள் அரை நூற்றாண்டாக அனுபவிக்காத கொடுமையே கிடையாதெனலாம். இன்று வரை இந்த அவல நிலை பல நாடுகளில் நீடிக்கிறது. காங்கோவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் ஏனைய ஆப்பிரிக்க நாடுகளைப் போல காங்கோ ஒன்றும் ஏழை நாடல்ல.  தங்கம், வைரம், செம்பு என எக்கச்சக்க கனிம வளங்களைக் கொண்டது.  அதன் இயற்கை வளங்களுக்காகத்தான் பெல்ஜியம் அதனைக் கைப்பற்றித் தனது காலனியாக்கியது.  19ம் நூற்றாண்டின் இறுதிவரை மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள காங்கோ பிரதேசம் வெளியாட்கள் போகாத மர்மப் பகுதியாக இருந்தது. ஐரோப்பாவிலுள்ள குட்டி நாடுகளில் ஒன்றான பெல்ஜியம்,  பெரிய நாடுகள் மட்டும் தான் காலனி வைத்துக்கொள்ளலாமா தனக்கும் ஒரு காலனி வேண்டுமென்று அதுவரை ஐரோப்பியர் எவரும் போய்ப்பார்த்திராத காங்கோ பிரதேசத்தைத் தனதாக்கிக் கொண்டது. அடுத்த அறுபது ஆண்டுகளுக்கு பெல்ஜியத்தின் இரும்புப் பிடியில் காங்கோ இருந்தது.  அங்கு தான் 1930ல் மொபூட்டு பிறந்தார்.
சிறு வயதில் கத்தோலிக்க பாதரியார்கள் நடத்திய பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார் மொபூட்டு. அங்கு தான் பல ஐரோப்பிய மொழிகளைக் கற்று வெளியுலகைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டார். ஆனால் அவர்களது கடுமையான விதிமுறைகள் பிடிக்காமல் தனது பத்தொன்பதாவது வயதில் பள்ளியை விட்டு ஓடிவிட்டார்.  மீண்டும் பிடிபட்ட போது பள்ளியை விட்டு ஓடியது க்குத் தண்டனையாக காங்கோ ராணுவத்தில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டார். அவர் ராணுவத்தில் இருந்த போதுதான் பெல்ஜிய விடுதலை இயக்கம் தீவிரமடைய ஆரம்பித்தது.  இரண்டாம் உலகப் போருக்குப் பின் முன்னாள காலனியாதிக்கப் பேரரசுகள் அனைத்தும் ஆட்டம் கண்டு போயிருந்தன. ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் ஒன்றன் பின் ஒன்றாக பல நாடுகள் சுதந்திரம் அடையத் தொடங்கின. காங்கோவிலும் உடனே விடுதலை வேண்டுமென்ற குரல் வலுக்கத் தொடங்கியது. பாட்ரீஸ் லுமும்பா என்ற மக்கள் செல்வாக்கு வாய்ந்த தலைவர் காங்கோ விடுதலை இயக்கத்தின் தலைவராக இருந்தார். கூடிய விரைவில் பெல்ஜிய ஆட்சியாளர்கள் காங்கோவின் ஆட்சிப் பொறுப்பை லுமும்பாவின் கையில் ஒப்படைத்துவிடுவார்கள் என்று அப்போது பரவலாக நம்பப்பட்டது. காற்று லுமும்பா பக்கம் அடிப்பதை உணர்ந்து கொண்ட மொபூட்டு ராணுவத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டு லுமும்பா கட்சியில் இணைந்தார். விரைவில் தன் திறமையாலும் அறிவாலும் உயர்ந்து லுமும்பாவின் அந்தரங்கச் செயலாளராகி விட்டார்.
தங்களுடைய பொருளாதார நிலைக்கு பங்கம் விளையாமல் காங்கோவுக்கு எப்படி சுதந்திரம் வழங்குவதென்று  ஆராய்ந்து கொண்டிருந்த மேற்கத்திய நாடுகளின் பார்வையில் மொபூட்டு விழுந்தார். லுமும்பா ஒரு இடதுசாரி சிந்தனையாளர். சோவியத் யூனியனில் படித்தவர். அவர் கையில் ஆட்சிப் பொறுப்பு சிக்கினால் விரைவில் காங்கோவிலுள்ள ஐரோப்பிய கம்பனிகளையெல்லாம் தேசியமயமாக்கிவிடுவார் என்று அமெரிக்கா முதலான நாடுகள் பயந்தன. எனவே லுமும்பா பதவியேற்பதற்கு முன்பே அவரைக் காலி செய்வதற்கான உள்ளடி வேலைகளில் இறங்கின.  ஜூன் 1960ல் காங்கோ விடுதலையடைந்தது.  பல கட்சிகளும் கூட்டணிகளும் பங்கேற்ற முதல் காங்கோ அரசு பதவியேற்றது. இந்தக்  கூட்டணி அரசில் குடியரசுத் தலைவர் கசாவுபு அமெரிக்க ஆதரவாளர், பிரதமர் லுமும்பாவோ இடது சாரி ஆதரவாளர். ஆட்சியமைந்து கொஞ்ச நாளில் புதிய ஆட்சியாளர்களுக்குள் சண்டை மூண்டு உள்நாட்டுப் போர் தொடங்கியது.  குடியரசுத் தலைவரும், பிரதமரும் ஒருவரையொருவர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்தனர்.  அடுத்து நிகழ்ந்த குழப்பத்தை நன்றாக பயன்படுத்திக் கொண்டார் மொபூட்டு.  அமெரிக்க உளவு நிறுவனமான சி. ஐ. ஏ காங்கோ சோவியத் யூனியனின் கையில் சிக்காமல் இருக்க மொபூட்டுவை அதிபராக்க முடிவு செய்தது. காங்கோ விடுதலையாவதற்கு முன்பே சி. ஐ. ஏவின் ஏஜெண்டாகியிருந்தார். 1961ல் லுமும்பாவை சி ஐ ஏ மொபூட்டுவின் துணையோடு  படுகொலை செய்தது. பின்னர் ஏற்பட்ட அரசாங்கத்தில் மொபூட்டுவுக்கு முக்கியமான பொறுப்பு தரப்பட்டது.  காங்கோ ராணுவத்தில் உயர் பதவியேற்ற மொபூட்டு அடுத்த ஐந்தாண்டுகளில் மேலும் வளர்ந்து 1965ல் அமெரிக்க ஆதரவுடன், காங்கோவின் தலைவராகி விட்டார்.  அந்த ஐந்தாண்டுகளில் காங்கோவின் பல பகுதிகளில் பிரிவினைப் போராட்டங்கள் நடந்ததும் அவருக்கு சாதகாமாகிப் போனது.  நாட்டைச் சிதறாமல் பாதுகாக்க ஒரு சக்திவாய்ந்த தலைவர் வேண்டுமென்று மக்கள் நினைத்ததால் அவருக்கு மக்களிடமும் பெரும் ஆதரவு இருந்தது.  இந்த உள்நாட்டுப் போர்களும் பிரிவினைக் கலவரங்களும் அடங்கி அமைதி திரும்புவதும் மொபூட்டுவின் பதவியேற்பும் சரியாகப் பொருந்தி அமைந்தன. தனது 35 வயதில் காங்கோவின் முடிசூடா மன்னரானார் மொபூட்டு.
பதவிக்கு வந்தவுடன் அவர் செய்த முதல் காரியம் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தடை விதித்தது தான். கட்சிகள் இருந்தால்தான் அரசியல் கருத்து வேறுபாடு வரும்,  அதனால் நாட்டில் சச்சரவுகள் மூளும் என்று காரணம் சொல்லி ஐந்து வருடங்களுக்கு எந்த அரசியல் கட்சியும், அமைப்பும் காங்கோவில் இருக்கக் கூடாது என்று உத்தரவு போட்டுவிட்டார்.  அரசியல்வாதி என்ற சொல்லே காங்கோவில் கெட்ட வார்த்தையாகி விட்டது. எல்லா சர்வாதிகாரிகளும் செய்வது போல தனது தலைமையில் ஒரு கட்சியை ஆரம்பித்தார். மக்களாதரவு புரட்சி இயக்கம் என்று பெயர் கொண்ட அக்கட்சியில் காங்கோவின் அனைத்து குடி மக்களும் கட்டாயமாக உறுப்பினராக வேண்டுமென்று உத்தரவு போட்டார் மொபூட்டு. காங்கோவிலிருந்து ஐரோப்பிய தாக்கத்தை அறவே ஒழிக்கும் முயற்சியில் இறங்கினார். பெல்ஜிய ஆட்சியாளர்கள் நகரங்களுக்கும் அமைப்புகளும் வைத்திருந்த ஐரோப்பிய பெயர்களையெல்லாம் லோக்கல் மொழியில் மாற்றினார். நாட்டின் பெயரையே காங்கோவிலிருந்து ஸெயர் என்று மாற்றி விட்டார்.  நடை உடை பாவனை என அனைத்து விஷயங்களிலும் ஐரோப்பிய பாணிகள் தடை செய்யப்பட்டன.  தனது பெயரைக் கூட ”தனது மன உறுதியாலும், நிலைத்து நிற்கும் தன்மையாலும், அனைத்தையும் வென்று செல்லுமிடமெல்லாம் தீக்கிரையாக்கும் வீரன்” என்று மாற்றிக் கொண்டார்!
நாடு முழுவதும் எல்லாத் துறைகளிலும் இந்த ஸெயராக்கத்தைத் தொடர்ந்து நடத்தினார். பொருளாதாரம், கல்வி, தொழிற்சாலைகள், என அனைத்துத் துறைகளும் மொபூட்டுவின் கட்டுப்பாட்டில் வந்தன.   தனது உறவினர்களையும் ஜால்ராக்களையும் நாட்டின் முக்கிய பதவிகளுக்கு நியமித்தார். மொபூட்டுவின் ஆட்சியில் அதிபருக்கே அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டன. நாட்டின் நாடாளுமன்றம் ஆமாம் சாமி போடும் அமைப்பாக மாற்றப்பட்டது.  மொபூட்டுவின் அரசியல் விரோதிகள் அனைவரும் கொல்லப்பட்டார்கள் அல்லது நாட்டை விட்டு விரட்டப்பட்டார்கள். தனது அமைச்சரவையில் கூட எதிர்த்துப் பேசியவர்களை பொது இடத்தில் தூக்கிலிட்டார் மொபூட்டு.   தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு மொபூட்டு ஆதரவாளர்கள் கட்டுபாட்டில் கொண்டு வரப்பட்டன.  அரசு ஊடகங்களில் கூட மொபூட்டுவைத் தவிர வேறு யாரைப் பற்றியும் செய்தி வெளியிடக் கூடாதென்று உத்தரவு போடப்பட்டது.  தேர்தல்கள் நடந்தாலும் “ஜனநாயக” முறைப்படி மொபூட்டு மட்டும் தான் அவற்றில் போட்டியிடுவார். சர்வாதிகார இலக்கணப்படி 98 சொச்ச சதவிகித வோட்டுகளுடன் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
இப்படி ஐந்தாண்டுகளில் தனது பதவியைத் தக்க வைக்க அரசியல் எதிரிகளையெல்லாம் ஒழித்த பின்னர் நாட்டை விஞ்ஞான முறைப்படி கொள்ளையடிக்கும் வேலையில் இறங்கினார். காங்கோவிலிருந்த நிறுவனங்களெல்லாம் தேசியமயமாக்கப்பட்டு அவற்றின் நிர்வாகங்கள் மொபூட்டுவின் அல்லக்கைகள் கையில் கொடுக்கப்பட்டன.  காங்கோ நாட்டின் கருவூலமே மொபூட்டுவின் பாக்கெட்டில் தான் இருந்தது.  தனது கொள்கைகளுக்கு மொபூட்டுயிசம் என்று பெயரிட்டு நாட்டிற்குத் தானேதான் எல்லாம் என்று பிரகடனப்படுத்திக் கொண்டார். இந்த முட்டாள் தனமான முடிவால் விரைவில் காங்கோவின் பொருளாதாரம் சின்னாபின்னமானது. மொபூட்டுவின் அல்லக்கைகளின் கேவலமான நிர்வாகத்தால் தேசியமயமாக்கப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் பெரும் நஷ்டத்தில் மூழ்கின.  மொபூட்டுவின் குடும்பத்தினரும், கூட்டாளிகளும் அரசு பணத்தைத் தங்கள் பெயரில் சுவிஸ் வங்கிகளில் போட்டு வைத்துக் கொண்டனர். புதிய ஆப்பிரிக்க மறுமலர்ச்சி ஒன்றை ஏற்படுத்திகிறேன் பேர்வழி என்று மொபூட்டு வகுத்த திட்டங்கள் அனைத்தும் எக்கச்சக்க பணத்தை வீணடித்து நாட்டின் கடன் சுமையை மேலும் ஏத்தின.  உலக வங்கி கூட கடன் தர மறுக்கும் அளவுக்கு காங்கோ நாட்டின் பொருளாதாரம் மோசமாகிப் போனது. ஆனால் மத்திய ஆப்பிரிக்காவில் சோவியத் ஆதரவு இயக்கங்களுக்கு எதிராக ஒரு ஆள் வேண்டுமென்று அமெரிக்காவும் பிற மேற்கத்திய நாடுகளும் கருதியதால், அவை மொபூட்டுவின் முட்டாள்தனத்துக்குத் துணை போயின. காங்கோ திவாலாகாமல் பார்த்துக் கொண்டன.
பனிப்போர் அரசியலில் தனக்குள்ள முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த மொபூட்டு அதனை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். மேலை நாடுகளின் உதவிப் பணத்தையெல்லாம் அப்படியே தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.  நாடே வறுமையில் வாடிக் கொண்டிருக்க மொபூட்டுவின் கூட்டாளிகள் மட்டும் சகல வசதிகளுடன் வாழ்ந்து கொண்டிருந்தனர்.  நாட்டில் சாலைகளே இல்லாத போது மொபூட்டு குடும்பம் மட்டும் பெரிய லிமோசின்களில் பவனி வந்தது. போக்குவரத்து வசதியில்லாத நாட்டில் மொபூட்டு போவதற்கு ஒரு தனி கன்கார்டு வகை விமானமே வாங்கப்பட்டிருந்தது.  நாடெங்கும் மாட மாளிகைகள், கேளிக்கை விருந்துகள், அவ்வப்போது வெளி நாடுகளில் ஷாப்பிங்க் என உல்லாசமாக வாழ்க்கை நடத்தியது மொபூட்டு குடும்பம.  ஊழல் பெருச்சாளி என்ற தொடருக்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டினார் மொபூட்டு.  தனது பதவிகாலத்தில் ஐந்து பில்லியன் டாலர் வரை அவர் சுருட்டியிருக்க வேண்டுமென்று பரவலாக நம்பபட்டது. (பணவீக்கத்துக்கு அட்ஜஸ்ட் செய்தால் இன்றைய மதிப்பில் இது இன்னும் பல மடங்கு அதிகம்).
ஆனால் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு மொபூட்டுவின் உல்லாச வாழ்க்கைக்குக்கும் முடிவு ஏற்பட்டது.  சோவியத் யூனியன் வீழ்ந்து பனிப்போர் முடிவுக்கு வந்த பின்,  அமெரிக்காவுக்கும் சி ஐ ஏவுக்கும் மொபூட்டு தேவையில்லாது போனார். அவருக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்டன. அமெரிக்க உதவியில்லாமல், மொபூட்டுவால் ரொம்ப வருஷம் தாக்கு பிடிக்க முடியவில்லை. நாசமாகிப் போயிருந்த பொருளாதாரமும், புதிதாக முளைத்திருந்த தலைவர்களும் மொபூட்டுவின் பதவிக்கு உலை வைத்தனர். முப்பதாண்டுகளாக எதிர்க்க ஆளில்லாமல் தனியாளாக ஆட்சி செய்துவந்த மொபூட்டு பதவியைத் தக்க வைக்க தனது போட்டியாளர்களுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டி வந்தது.  கொஞ்சம் கொஞ்சமாக மொபூட்டுவின் பலம் குறைந்தது.  மேலும் கேன்சரால் பாதிக்கபபட்ட மொபூட்டுவால் முன்போல வேகமாக செயல்படவில்லை. 1990களில் காங்கோவில் உள்நாட்டுப் போர் மூண்டது.  பல பக்கங்களிலிருந்து உருவான நெருக்கடிகளைத் தாங்க முடியாமல் தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு ஓடிவிட்டார் மொபூட்டு.  ஆனால் பதவியை விட்டு விலகியபின் நீண்ட நாட்கள் அவர் உயிருடன் இருக்கவில்லை. சில மாதங்களுக்குள்ளாக இறந்து போனார்.  அவர் இறந்த பின் அவரது சுவிஸ் வங்கிக் கணக்குகளில் 5 மில்லியன் டாலர்கள் மட்டுமே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் சுருட்டிய பில்லியன் கணக்கான டாலர்களில் மீதி எங்குபோனது என்பது இன்று வரை மர்மமாகவே இருக்கின்றன.  இந்த மர்மத்தைப் பயன்படுத்தி மோசடிப் பேர்வழிகள் பேராசை பிடித்தவர்களை மின்னஞ்சல் மோசடி மூலமாக ஏமாற்றி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக