வெள்ளி, 5 நவம்பர், 2010

பாலியல்படங்கள்: அம்பலமாகும் அடையாளம்: ஆபாசத்துக்கு எதிராக இலங்கை நடவடிக்கை


- பி.பி.சி செய்தி
இலங்கையில் உள்நாட்டில் தயாராகும் ஆபாசப் படங்களில் நடித்த நடிகர் நடிகைகளின் புகைப்படங்களை வெளியிட கொழும்பு மேஜிஸ்டிரேட் நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி தந்துள்ளது.
இத்தகைய நடிகர் நடிகைகள் 83 பேரின் புகைப்படங்கள் தம்மிடம் இருப்பதாகவும், இவை இணைய தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டதாகவும் கூறிய காவல் துறைப் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி இந்த புகைப்படங்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பத்திரிக்கைகளில் வெளியிடப்படும் என்றார்.
நடிகர்களின் அடையாளங்கள் தெரிந்த பிறகு, இவர்களுக்கு பின்னால் - ஆபாசப் படங்களை தயாரிப்பது விற்பது போன்ற வேலைகளை செய்யும் நபர்களைப் பிடிக்க முடியும் என்றும் காவல் துறை நம்புகிறது.
ஆபாசப் படங்களில் நடிப்பது சிறை தண்டனைக்குறிய குற்றம் என்று காவல் துறைப் பேச்சாளர் கூறினார்.
அதேசமயம் சில பெண்களின் ஆண் நண்பர்கள், அந்த பெண்களுக்குத் தெரியாமலோ அல்லது அவர்களை ஏமாற்றியோ எடுத்த படங்கள் எல்லாம் இணைய தளத்தில் இருக்கின்றன. இது போன்ற படங்களை வெளியிடுவது பாதிக்கப்பட்ட பெண்களை மேலும் பாதிக்கச் செய்யும் விடயமாக அமையும் என்ற கருத்தும் சில மட்டங்களில் இருக்கிறது.
சமீப காலமாக உள்ளூரில் தயாரிக்கப்படும் ஆபாசப் படங்கள் அதிக அளவில் இணையத்தில் புழங்குவதால் இது போன்ற நடவடிக்கை தேவை என்று காவல் துறை கூறுகிறது. ஆபாசப் காட்சிகளைக் கொண்ட இணைய தளங்களையும், குறுந்தகடுகளையும் தடை செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் காவல் துறை கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக