வியாழன், 4 நவம்பர், 2010

இந்திய மீனவர்களின் வருகையைத் தடுத்து நிறுத்துமாறு முல்லைத்தீவு மீனவர்கள் மீள் குடியேற்ற பிரதி அமைச்சரிடம் கோரிக்கை

இந்திய மீனவர்கள் இழுவைப்   படகுகளில் வந்து தமது கடற்பகுதியில் மீன் பிடிப்பதனால்,       தமது வலைகள் சேதமாக்கப்படுவதாக அரசாங்கத்திடம்  முறையிட்டுள்ள  முல்லைத்தீவு  மீனவர்கள்,    இந்திய மீனவர்கள் அத்துமீறி    வருவதைத்   தடுத்து   நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு   மாவட்டத்தின்   மீள் குடியேற்ற நடவடிக்கைகள்   குறித்து மீளாய்வு    செய்வதற்காக அங்கு சென்றிருந்த   மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயக மூர்த்தி   முரளிதரனிடம்   இந்திய மீனவர்களின் வருகையால் தமக்கு ஏற்பட்டு வருகின்ற பாதிப்புகள் குறித்து எடுத்துக் கூறி இந்தக் கோரிக்கையை  முன் வைத்துள்ளனர்.
முல்லைத்தீவு மீனவர்கள் தமது நிலைமைகள் குறித்து தெரிவித்துள்ளதாவது; யுத்த மோதல்கள் காரணமாக அனைத்தையும் இழந்து இடம்பெயர்ந்து பல்வேறு    கஸ்டங்களுக்குப் பின்னர்  மீள்குடியேற்றப்பட்டுள்ள  எங்களுக்கு மீன்பிடிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள போதிலும், அந்தத் தொழிலை நிம்மதியாகச்   செய்ய     முடியாத  நிலைமையே   இந்திய மீனவர்களினால்  எங்களுக்கு   ஏற்பட்டுள்ளது.
தற்காலிக கொட்டில்களிலும்,   கூடாரங்களிலுமே   நாங்கள்   இப்போது மீள்குடியேற்றப்பட்டுள்ளோம்.      அரசாங்கம் அளித்துள்ள சிறிய உதவிகளோடும், வெளியாரிடம் பெற்றுள்ள கடனைக் கொண்டுதான்   சிறிய அளவிலான   வலைகளை வாங்கி,  அவற்றை கொண்டு மீன்பிடி தொழிலில்   ஈடுபட்டுள்ளோம்.  ஆனால் அந்த வலைகளையும்  இந்திய  மீனவர்களின்   இழுவைப் படகுகள்   சேதமாக்கி   எங்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தி வருகின்றன.
வலைகள் சேதப்படுத்தப்பட்டதனால், அவற்றிற்குப் பதிலாகப் புதிய வலைகளை வாங்குவதற்கு எங்களிடம் கையில் பணமில்லை.   இதனால் மீன்பிடித்தொழிலையே    கைவிட வேண்டிய   அவல   நிலைமைக்குப்   பல மீனவ குடும்பங்கள் ஆளாகியிருக்கின்றன.
போரினால் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு மீள்குடியேற்றத்தின் பின்னர் வாழ்வாதாரத்திற்கான மீன்பிடி தொழிலைச் செய்ய  முடியாதவாறு ஏற்பட்டுள்ள இந்திய மீனவர்களின் வருகை அமைந்திருக்கின்றது. எனவே இந்திய மீனவர்களின் வருகையைத் தடைசெய்து, எமக்கு ஏற்பட்டுள்ள அவல நிலைமையில் இருந்து எம்மைக் காப்பாற்றுவதற்கு நட வடிக்கை எடுக்க வேண்டும்.
முல்லைத்தீவு மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை, முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளும் உறுதிப்படுத்தி, இந்திய மீனவர்களின் வருகையைத் தடுத்து  நிறுத்துவதற்கு   அவசரமாக நடவடிக்கை   எடுக்கப்பட வேண்டும் என்பதை மீள்குடியேற்ற அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விடயம் குறித்து இலங்கை ஜனாதிபதி இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்தைகள் நடத்தி வருவதாகவும், முல்லைத்தீவு மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமைகளை அவரது கவனத்திற்குக் கொண்டு வந்து  இரு நாடுகளினதும் அரச மட்டத்தில் இதற்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு ஆவன செய்வதாக பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி  மூரளிதரன் உறுதியளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக