வியாழன், 4 நவம்பர், 2010

தமிழ் கட்சிகளின் ஒற்றுமை நடக்கக்கூடிய காரியமா?? – கபில்



தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு வந்தால்தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என்று வவுனியாவில் நடந்த வடக்கு மாகாண அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார்.    இதன்மூலம்,   இனப்பிரச்சினைத் தீர்வு   இழுபறிக்குள்ளாவதற்கு தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையின்மையேக் காரணம் என்று வெளிப்படுத்த அவர் முனைந்திருக்கின்றார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கருத்தில்   இருந்து  இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.    இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான எந்தவொரு முயற்சிகளையும் அரசாங்கம் இது வரையில் எடுக்கவில்லை என்பதே உண்மை.
13ஆவது   திருத்தத்தின் அடிப்படையிலான    தீர்வு என்றும் அதற்கு அப்பால் சென்று   தீர்வு காண்பதற்கான முயற்சிகள் என்றும் செய்திகள் தான் வருகின்றனவே தவிர, அரசின் சார்பில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
டியூ.குணசேகரவின் தலைமையிலான நாடாளுமன்றத்   தெரிவுக்குழு  ஒரு தீர்வு யோசனையைத் தயாரித்தது. பின்னர் அதற்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.   ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் தன்னிடம் ஒரு தீர்வு யோசனை இருப்பதாகவும், அதைத் தான் நமுடைறைப்படுத்துவேன் என்றும் கூறியிருந்தார் மஹிந்த ராஜபக்ஷ.  ஆனால் எதுவுமே நடக்கவில்லை என்பது தான் உண்மை.
இந்த நிலையில் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு வந்தால் தான் அரசியல் தீர்வு என்ற புதியதொரு நிபந்தனையை அவர் வெளியிட்டிருக்கிறார்.   தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையை அவர் வலியுறுத்துகிறாரா அல்லது    தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு வராததால் அரசியல் தீர்வு கிடையாது என்று கையைவிரிக்கிறாரா என்பது  முக்கியமான கேள்வியாக உள்ளது.
அதேவேளை, தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை பற்றிப் பேசும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக தென்னிலங்கைச் சிங்களக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுள்ளாரா என்று கேள்வி எழுப்பியுள்ளன சில அரசியல் கட்சிகள்.   அதாவது,   ஐ.தே.க., ஜே.வி.பி., தேசிய சுதந்திர முன்னணி,   ஜாதிக ஹெல உறுமய என்று பல்வேறு தரப்புகளினதும் அனுமதி அரசியல் தீர்வுக்கு அவசியம்.
தமிழர்களுக்கு உரிமைகளைப் பகிர்ந்து கொடுக்கும் விடயத்தில் இந்தக் கட்சிகளிடத்தில் ஒற்றுமை கிடையாது என்பது உலகறிந்த உண்மை.  தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு வந்து விட்டால் கூட இந்தக் கட்சிகள் அதற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்பது வெளிப்படை.  நிலைமை அப்படியிருக்க, எல்லாப் பழிகளையும் தமிழ்க்கட்சிகளின் மீது போட்டு தப்பிக் கொள்ளவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  முனைந்திருக்கிறார்.
அதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியது போன்று       தமிழ்க்கட்சிகளிடம் ஒன்றுமையின்மை இருப்பது உண்மை தான்.       அதை யாரும் மறுக்க முடியாது. தமிழ்க்கட்சிகள் மத்தியில் இருக்கும் ஏட்டிக்குப் போட்டியான தன்மைக்கும், சிங்களக் கட்சிகளுக்கு இடையில் இருக்கும் ஏட்டிக்குப் போட்டியான தன்மைக்கும் நிறையவே வேறுபாடுகள் இருப்பதை நாம் மறந்து விடவும் கூடாது.   மறுத்துரைக்கவும்  முடியாது.
தென்னிலங்கை சிங்களக் கட்சிகள் தமிழருக்கு உரிமைகள் வழங்கக் கூடாது அரசியல்தீர்வு தேவையில்லை என்பதில் உறுதியாக   ஒற்றுமையாக இருக்கின்றன. அண்மையில் தமிழர்கள் பலரும் நம்பும்        ஐ.தே.க. கூட அரசியல்தீர்வு இனிமேல் தேவையில்லை என்று கூறியதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.  ஜாதிக ஹெல உறுமயவின் பாணியைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.
ஜே.வி.பி இப்போது அரசியல் நலனுக்காக தமிழருடன் நெருக்கத்தை ஏற்படுத்துவது போலப் பாவனை காட்டிக் கொண்டாலும் அதன் சுயரூபம் நன்கு அறியப்பட்டதே. போர்நிறுத்த உடன்பாட்டை முறித்து, சமாதான முயற்சிகளை குழப்புவதில் ஜே.வி.பி.யின் பங்கு கணிசமாக இருந்ததை யாரும் மறுக்க மு டியாது.
‘‘அரசியல்தீர்வை மறுக்கும் விடயத்தில் தென்னிலங்கை சிங்களக் கட்சிகள் மத்தியில் ஒன்றுபட்ட நிலை இருக்கிறது.   அதை மறைக்கவே தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையைக் காரணம் காட்டியிருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
ஆனால் தமிழ்க் கட்சிகள் மத்தியில்   அத்தகைய ஒற்றுமையோ ஒருமித்த கருத்தோ இல்லை.   ஒன்றையொன்று விழுங்கித் தின்னும் போக்கே காணப்படுகிறது. தமிழரின் பிரச்சினை என்று வந்தாலும் கூட,  ஒன்றுபட்டு  நிற்கும்  தன்மையை விட,   இவற்றிடம் இராஜவிசுவாசமே மேலோங்கிப் போகிறது.
இதன் காரணமாக எந்த உருப்படியான காரியத்தையும் செய்ய  முடியாமல் போகிறது.   இப்போது பத்துத் தமிழ் அரசியல் கட்சிகள், அமைப்புகள் இணைந்து தமிழ்க் கட்சிகளின் அரங்கம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளன.  இன்னொரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கிறது.   தமிழ்க் காங்கிரஸ் அல்லது   தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி தனியாக நிற்கிறது.
தமிழ்க்கட்சிகளின் அரங்கத்துக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பலமுறை அழைப்புகள் அனுப்பப்பட்டன.  ஆனால் இரா.சம்பந்தன்  வெளிநாடு  சென்றிருந்ததைக் காரணம் காட்டி கூட்டமைப்பு அவற்றைத் தட்டிக் கழித்து விட்டது.   இப்போது சம்பந்தன் நாடு திரும்பியுள்ளார்.   அவரைச் சந்தித்து அழைப்பு விடப் போவதாகக் கூறியுள்ளார் தமிழ்க் கட்சிகளின் அரங்கத் தின் செயலாளர் சிவாஜிலிங்கம்.
அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உள்ளடக்காத தமிழ்க்கட்சிகளின அரங்கம் வலுவானதாக இருக்க முடியாது.   ஏனென்றால் அதற்கே நாடாளுமன்றப் பலம் அதிகம்.  இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நன்றாகவே தெரியும்.   தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் உள்ள பல கட்சிகள் பெயருக்கே கட்சியாக இயங்குபவை. எனவே இந்த அணியை பலப்படுத்த அவர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின்   தயவு அவசியம்.
அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ இந்த அணியில் இணைந்து கொண்டால் அது தமது அரசியல் நலனைப் பாதிக்குமோ என்ற அச்சம் இருந்து கொண்டே இருக்கிறது. அதனால் அது தயக்கம் காட்டுகிறது.
இன்னொரு பக்கத்தில் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நடந்து கொள்ளவில்லை என்பது வெளிப்படை.  அதற்கு அவர்களுக்குக் கிடைத்த பல சந்தர்ப்பங்களையும் தவறவிட்டுள்ளனர் என்பதே உண்மை. உதாரணத்துக்கு, உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலம் விடயத்தில் தமிழ்க்க ட்சிகளி ன் அரங்கம் ஒன்றுபட்டு நிற்கவில்லை.
ஒவ்வொரு கட்சியும் தமது அரசியல் நலனை முன்னிறுத்தியே செயற்பட்டன.   அதாவது ஆளும்கட்சியுடனான உறவை மையப்படுத்தியே அவற்றின் செயற்பாடுகள் இருந்தனவே தவிர தமிழரின் நலன்களை  முன்னிலைப்படுத்தியதாக இருக்கவில்லை.
கிழக்கு மாகாணசபையில் இந்தச் சட்டமூலம் விவாதத்துக்கு விடப்பட்டபோது     தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தில் இடம்பெற்றுள்ள    தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆதரவு அளித்தது.  நாடாளுமன்றத்தில் ஈ.பி.டி.பி அதற்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளது.   இப்படிப்பட்ட நிலையில் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தினால் ஒத்த கருத்துள்ள அரசியல் சூழலை உருவாக்க முடியாது.   வெறுமனே பெயருக்கு ஒன்று கூடிப் பேசி விட்டுப் போவது தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் போதுமானதல்ல.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியது போல தமிழ்க்கட்சிகளின் ஒன்றுபட்ட நிலைப்பாடு அவசியமானது.   அது இருந்தால் தான் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு அழுத்தங்கள் கொடுக்க முடியும்.    ஆனால் துரதிஷ்டவசமாக அந்த ஒற்றுமை தமிழ்க் கட்சிகளிடத்தில் இல்லாமல் போயுள்ளது.   இராஜ விசுவாசத்தையும், தமிழர் நலனையும் ஒரே கோட்டில் பயணிக்க வைக்க முடியாது.
தேர்தல், போட்டி என்று வரும் போது தமிழ்க் கட்சிகள் வேண்டுமானால் மோதிக் கொள்ளலாம்.    ஆனால் தமிழர் பிரச்சினை என்று வரும்போது அவர்கள் ஒன்றாக நிற்க வேண்டியது அவசியம்.   அப்படி நின்றால்  தான்   இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என்பது  தான் யதார்த்தம்.  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதைத் தான் கூறியிருக்கிறார்.
அவர் கூறியதன் அர்த்தம் -அல்லது உட்பொருள் வேறு. இதன் அர்த்தம் வேறு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக