ஞாயிறு, 14 நவம்பர், 2010

காணாமல் போனோர் தொடர்பில் பணம் பெற்ற சம்பவம் : விசாரணைக்கு வருமாறு அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கு அழைப்பு

காணாமல் போனோரை விடுதலை செய்வதற்காக பணம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படும் முறைப்பாடு தொடர்பில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியிடம் வவுனியா காவல்துறையின் வாக்குமூலம் பெறவுள்ளனர். எதிர்வரும் 16 ஆம் திகதி அவரை வவுனியாவுக்கு வருமாறு வவுனியா காவல்துறையினர் அழைத்துள்ளனர்.
காணாமல் போனோரை விடுவித்து தருவதாக கூறி இராணுவ அதிகாரி ஒருவரின் தொலைபேசி இலக்கத்தை கொடுத்து அவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் பணத்தை வழங்க கூறியதாக வவுனியா காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக லக்பிம செய்திதாள் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பணத்தை வைப்பு செய்வதற்கான காணாமல் போனோரின் உறவினர்களுக்கு வழங்கப்பட்ட வங்கி இலக்கம் கொழும்பு பொரளையில் உள்ள வங்கி ஒன்றின் இலக்கம் என்றும் அது பாதாள உலக குழு ஒன்றின் தலைவரது மனைவியின் இலக்கம் என்றும் செய்திதாள் குறிப்பிட்டுள்ளது. குறித்த பெண் தற்போது தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினர் தகவல்படி தமது உறவுகளை தேடிக் கொள்வதற்காக தாம் 75 ஆயிரம் மற்றும் மூன்று லட்சம் ரூபாய்களை வழங்கியுள்ளதாக இருவர் முறைப்பாடுகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தம்மிடம் பணத்தை பெற்றுக் கொண்ட போதும் பின்னர் அவர்களின் தொலைபேசி இலக்கங்கள் துண்டிக்கப்பட்டு விட்டதாகவும் பணத்தை கொடுத்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இது தொடர்பில் கருத்துரைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தமக்கும் இந்த சம்பவத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி தனக்கு ஒரு கடிதம் எழுத்தியிருந்தார்.
இந்தநிலையில் மேஜர் மதியழகன் என்ற ஒருவர் தம்முடன் தொடர்பு கொண்டு தாம் இராணுவத்தில் உள்ளதாவும் எழிலனையும் புலிகளின் துணை அரசியல்துறை பொறுப்பாளர் தங்கனையும் தம்மால் அவர்களின் உறவினர்களுக்கு காட்ட முடியும் என கூறியதாக விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மற்றும் ஒருநாள், குறித்த மேஜரின் தொலைபேசி அழைப்பின் ஊடாக தங்கன் என அறிமுகம் செய்துக் கொண்டவர் தம்முடன் பேசியதாகவும் அதனை தம்மால் நம்பக்கூடியதாக இருந்ததாகவும் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் தம்முடன் காணாமல் போனதாக கூறப்பட்ட ஒருவரின் உறவினர் தொடர்பு கொண்ட போது குறித்த மேஜர் என்ற நபரின் தொலைபேசி இலக்கத்தை அவரிடம் கொடுத்ததாக குறிப்பிட்ட விநாயகமூர்த்தி, அவர் பணம் பெற்றது பற்றி தமக்கு பின்னரே தெரியவந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
பணத்திற்காக இந்த நடவடிக்கை நடைபெறுகிறது என தெரிந்திருந்தால் தாம் குறித்த உறவினர்களிடம் பணத்தை கொடுக்க வேண்டாம் என தெரிவித்திருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தாம் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் விநாயகமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் வாக்குமூலத்திற்காக தன்னை வவுனியா காவல்துறையினர் எதிர்வரும் 16 ஆம் திகதி அழைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக