புதன், 24 நவம்பர், 2010

நடிகர் விஜயகுமார் மீது மகள் பரபரப்பு புகார்!தனது பிள்ளைகளை அறையில் பூட்டி வைத்து

Vanitha Vijayakumar accuses her father of assault
நடிகர் விஜயகுமாரும், நடிகர் அருண் விஜய்யும் தனது பிள்ளைகளை அறையில் பூட்டி வைத்து சித்ர‌வதை செய்ததாக விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா பரபரப்பு புகார் கூறியுள்ளார். நடிகர் விஜயகுமாரை தாக்கியதாக வனிதாவின் கணவர் ஆனந்தராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதையடுத்து கோர்ட் வளாகத்தில் நின்று கண்ணீர் விட்டு கதறி அழுத வனிதா பரபரப்பு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது பிள்ளைகளை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகரில் வசித்து வரும் எனது அப்பா விஜயகுமார் வீட்டிற்கு அனுப்பி வைத்தோம். அதன்பின் எங்களது பிள்ளைகளை அழைத்து வர நானும் எனது கணவரும் வீட்டிற்கு சென்றோம். அப்போது வீட்டில் இருந்த அப்பா விஜயகுமார், அருண்விஜய் ஆகியோர் எனது பிள்ளைகளை கொடுக்க முடியாது என்று கூறி ஒரு அறையில் பூட்டி வைத்து விட்டனர். பிள்ளைகளை பூட்டி வைத்து சித்ரவதை செய்ததுடன், என்னை சரமாரியாக தாக்கினார்கள். இதில் எனக்கு உடலில் காயம் ஏற்பட்டது. உடனே எனது பிள்ளைகளை மீட்டு தருமாறு மதுரவாயல் போலீசாரிடம் புகார் அளித்தேன். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிறகு எனது பிள்ளைகளை போலீஸ் உதவியுடன் மீட்டேன்.
இந்நிலையில், எனது கணவர் ஆனந்தராஜ், விஜயகுமாரை தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி, 15ம்தேதி எனது கணவர் மீது மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார்கள். அதுபற்றி விசாரித்த போலீசார், நேற்று எனது கணவரை மீண்டும் விசாரணைக்கு அழைத்தனர். நான் போலீஸ் நிலையத்திற்கு செல்வதற்குள் எனது கணவரை அவசர அவசரமாக மோட்டார்சைக்கிளில் ஏற்றிக் கொண்டு பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டனர். புகாரில் என் பெயரும் இருப்பதால் என்னையும் கைது செய்யுங்கள் என்று கதறினேன். ஆனால், யாரும் கண்டு கொள்ளவில்லை.
இது எல்லாத்துக்கும் காரணம் அருண் விஜய்யும், டைரக்டர் ஹரியும்தான். அவங்கதான் கலகம் பண்ணிட்டு இருக்காங்க. எந்த தந்தையாவது இப்படி பெற்ற மகள் மீது புகார் செய்வார்களா? உண்மையிலேயே மகள் மீது தவறு இருந்தால்கூட இப்படி புகார் செய்ய மாட்டார்கள். எங்கள் மீது தவறே இல்லாதபோது இப்படி பொய் புகார் கொடுத்திருக்கிறார்கள். இது சம்பந்தமாக போலீஸ் கமிஷனர் மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோரை சந்தித்து புகார் செய்யப் போகிறேன், என்று வனிதா கூறினார்.
வனிதா கோர்ட் வளாகத்தில் கண்ணீர் வடித்து கதறி அழுதததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ஏற்கனவே வனிதா அளித்திருந்த பேட்டியொன்றில், என் பிள்ளைகளை நல்லா படிக்க வைக்கணும்ங்கிறது என்னோட விருப்பம். ஆனால் என் அப்பாவுடன் சினிமா பங்ஷன்களுக்கெல்லாம் போய் படிப்பில் இருந்து திசை திரும்புறான். அதனாலதான் அவனை அங்கே இருந்து கூட்டிட்டு வர போயிருந்தேன். பேச்சு தகராறில் சண்டையாகி விட்டது. அங்கே இருந்த அண்ணன் அருண் வில்லன் மாதிரி என்னை அடிச்சார். வயிற்றில் உதைச்சார். சினிமாவிற்காக கத்துக்கிட்ட சண்டைப் பயிற்சிகளையெல்லாம் என்கிட்ட காட்டினார். அருண் அடிச்சதுக்குத்தான் அவர் மேல போலீஸில் புகார் கொடுத்தேன். விஜயகுமார் வீட்டு பிள்ளைங்கிறதால அவர் மேல ஆக்ஷன் எடுக்காமல் வெச்சிருக்காங்க. எத்தனையோ சினிமா குடும்பங்களின் பிரச்னையை தலையிட்டு சரி செய்திருக்கிற அப்பா, உங்க வீட்ல, உங்க மகளுக்கு ஏற்பட்ட பிரச்னையை தீர்த்து வைக்காமல் கண்டுக்காமல் விட்டீங்க? ஏன் எனக்கு துணையா நிற்கலை? என்று கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் வனிதாவின் கணவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக