வியாழன், 11 நவம்பர், 2010

சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பாக தி. ஞானசேகரனுடன் உரையாடல்

அவதூறுகளைப் பேச தனிமனிதர்களைத் தாக்குதல் செய்ய, இன்னொருவரின் அரசியல் நிலைப்பாட்டை கேலி செய்கிற விடயங்களை மாத்திரமே நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

   1. 2011 சனவரியில் நடக்கவிருக்கிற சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு ஏன் நடைபெறுகிறது?
    எங்களுடைய நாட்டிலே 30 வருடங்கள் போர் நடந்திருக்கிறது. எங்களுடைய மக்கள் உலகெங்கும் சிதறுண்டு போயிருக்கிறார்கள். இந்த போரின் காரணமாகச் சிதறுண்டு போயிருக்கிறார்கள். இப்பொழுது போர் முடிந்து ஏறத்தாழ ஒன்றரை வருடங்களுக்கு மேலான காலப்பகுதி கழிந்து விட்டது. இந்த நிலையில் நாங்கள், மீண்டும் போரின் காரணமாக வீழ்ச்சியுற்ற தமிழர்கள், தங்களுடைய உணர்வுகளை, தமிழுணர்வை, எழுத்தாளன் என்ற நிலையில் அல்லது கலைஞன் என்ற நிலையிலே பரந்த வாழ்கிற எங்களுடைய மக்கள் எல்லோரையும் ஒன்றிணைத்து அவர்களோடு பரிமாற, கருத்துப்பரிமாற்றம் செய்ய ஒரு சந்தர்ப்பம் தேவை. அந்த சந்தர்பத்தினை இந்த மகாநாடு வழங்கும். எல்லாவற்றுக்கும் ஓர் ஆரம்பம் தேவை அந்த ஆரம்பத்திற்கு இந்த மகாநாடு தேவை என்று நாங்கள் கருதுகிறோம். அதனால் தான் இந்த மகாநாடு. நீண்டகாலமாக நாங்கள் திட்டமிட்டிருந்தாலும் இதைப்போன்ற சூழலுக்காக நாங்கள் காத்திருந்து போர் நின்றநிலையில் ஒன்றரை வருடத்திற்குப் பின்னர் இந்த மகாநாட்டை நாங்கள் நடத்த தீர்மானித்திருக்கிறோம்.
   2. சரி இந்த மாநாட்டின் நோக்கம்.. நீங்கள் எல்லாவற்றினதும் தொடக்கம் என்று சொல்கிறீர்கள் அது என்ன மாதிரியான தொடக்கம்?
    ஓம் தொடக்கம் என்று நான் சொல்லும் போது . இந்தப் போருக்கு முதல் இருந்த நிலையை விட இன்று எங்களுடைய தமிழ் இலக்கியம் பல்வேறு பரிணாமங்களை அடைந்திருக்கிறது. அதாவது புலம்பெயர் இலக்கியம்,புகலிட இலக்கியம். புலம் பெயர் இலக்கியம் என்று சொல்கிறபொழுது ஆரம்பத்திலே அந்த மக்கள் தங்களுடைய நாட்டைவிட்டுப் பிரிந்த போது ஏற்பட்ட உணர்வுகளை எழுதிக்கொண்டிருந்தார்கள். அந்த நாடுகளில் இருந்து அந்த நாட்டுச் சூழலுக்கு தம்மைப் பொருத்திக்கொள்வதற்கு எடுத்த முயற்சிகளை எழுதினார்கள் அதையெல்லாம் புகலிட இலக்கியமாக எமக்குத் தந்தார்கள். இவையெல்லாம் தமிழுக்குப் புதிய வரவுகள். அதே போன்று அந்த நாட்டு மொழியைப் படித்து அந்த நாட்டு இலக்கியங்களிலே இருந்து பல மொழிபெயர்ப்புகளை எங்களுக்குத் தந்திருக்கிறார்கள். எங்களுடைய இலக்கியங்களை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள் அந்த நாட்டு மக்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். இப்படி பல பரிணாம வளர்ச்சி எங்களுடைய இலக்கியத்திலே ஏற்பட்டிருக்கிறது. இவையெல்லாவற்றைப்பற்றியும் இந்த மகாநாட்டின் வெளிப்பாடாக கொண்டு வரவேண்டும் அதற்கு ஒரு ஆரம்பமாக இதை நாங்கள் கருதுகிறோம்.
    3. இந்த மாநாட்டுக்குப்பின்னால் இலங்கை அரசாங்கம் இருக்கிறதா?
    இந்த மாநாட்டுக்குப்பின்னால் அரசாங்கம் இல்லை. நாங்கள் இதுவரை காலமும் எந்த அரசியல்வாதிக்கும் அறிவித்தல் கொடுக்கவில்லை. அல்லது அவர்களிடம் பணத்தைப் பெறவும் இல்லை.எங்களுடைய மாநாடு முழுக்க முழுக்க எழுத்தாளர்களுடைய பணத்திலே அவர்களுடைய பணத்தைச் சேகரித்து நாங்கள் நடத்தகிறோம். இதற்குப்பின்னால் எந்த அரசியல் பணமோ ஒத்துழைப்போ நாங்கள் பெற்றுக்கொள்ளவில்லை.
    4. சரி அரசாங்கள் இதற்கு நிதி தராவிட்டாலும், ஒத்துழைப்பு தராவிட்டாலும் கூட இப்படி ஒரு மாநாடு யுத்தம் முடிவுற்ற நிலையில் நடக்கிறது என்பதை, தமிழர்கள் அனைவரும் மகிழ்சியாக இருக்கிறார்கள் என்றும் எழுத்தாளர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்று அரசாங்கம் பிரச்சாரம் செய்ய வாய்ப்பாக அமைந்துவிடுமில்லையா?

    இந்தப் போர் முடிவடைந்த பிறகு. நிறைய நிகழ்வுகள் தமிழர்கள் நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்பொழுது இந்த ஆடிவேல் விழா ஒரு பெரிய விழாவாக தமிழர்கள் இலங்கையில் அதுவும் தலைநகர் கொழும்பில் தமிழர்களால் நடத்தப்பட்டது. எங்களுடைய சனாதிபதியும் அந்த ஆடிவேலுக்குப் போனார். அது மட்டுமல்ல அவர் நல்லூர் கோவிலுக்கும் போனார் அதனுடைய அர்த்தத்தை நீங்கள் எப்படி நினைப்பீர்கள் அதற்குப்பினால் அரசு உள்ளது என்றா? அல்லது சனாதிபதி கலந்துகொள்கிறார் என்பதற்காக அவர் கலந்து கொண்டு விட்டு பிரச்சாரம் செய்வார் என்பதற்காக இப்பிடி எல்லாம் நடக்கிறதுக்காக நாங்கள் அந்த ஆடிவேலை நிப்பாட்ட வேணுமா? அல்லது நல்லூர் கோவிலை கொண்டாட விட வேணாமா? எங்களுக்கு தமிழர்கள் வீழ்ச்சியுற்ற நிலையில் இருந்து மீட்சி பெறவேண்டும் நாங்கள் எங்களைக் கட்டமைக்க வேண்டும் அதுதான் எங்களுக்கு முக்கியம் அவர்கள் பிரசாரம் பண்ணுவார்கள் அல்லது பிரசாரம் பண்ண மாட்டார்கள் என்ற நிலையை விட வீழ்ந்து போன தமிழன் மீண்டும் தன்னை எழுப்பிக் கொள்ளவேண்டும் என்பதுதான் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது.
    5. சரி அப்படியென்றாலும் இந்த மாநாட்டை பல்வேறு தரப்பினரும் மறுதலிக்கிறார்கள். குறிப்பாக இந்தியாவில் இருந்தும், புலம்பெயர் தரப்பிலிருந்தும் நிராகரிக்கிறார்கள். அண்மையில் கூட அதிகம் பேர் கையெழுத்திட்ட ஓர் அறிக்கை வெளிவந்திருந்தது?
    எந்த ஆதாரத்தில் இவர்கள் இதை இவர்கள் மறுதலிக்கிறார்கள்? ஆதாரமற்ற ஓர் அறிக்கையிலே இவர்கள் கையெழுத்துப் போடுகிற பொழுது நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதாரம் இல்லாமல் எதையும் சொல்லலாம். கள நிலவரம் அவர்களுக்கு தெரியாது. நாங்கள் முப்பது வருடம் போருக்கு முகம்கொடுத்துக்கொண்டிருக்கிறோம். போருக்கு முகம் கொடுத்தது மட்டுமல்ல நாங்கள் இங்கே தமிழருக்கு, தமிழ் ஊடகவியலாளருக்கு என அனைத்து தரப்பினருக்கும் இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் குரலெழுப்பியே வந்திருக்கிறோம். நான் தனிப்பட ஒரு சஞ்சிகையாளன் என்ற முறையில் என்னுடைய ஞானம் இதழின் ஆசிரியர் தலையங்கங்களில் ஏறத்தாள 16 ஆசிரியர் தலையங்கங்கள் கடந்த 5 வருடங்களிற்குள்ளாக மிகவும் கடுமையாக எழுதியிருக்கிறேன். நாங்கள் களத்தில் இருந்து கொண்டு பேசுகிறோம். அவர்கள் களத்தில் இல்லாமல் யாரோ முடுக்கிவிட்ட பொய்யான கருத்துக்களை, ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு பேசுகிறார்கள். நாங்கள் சொல்கிற ஒவ்வொரு விடயத்தையும் எங்களால் நிரூபிக்க முடியும். ஆனால் அவர்களால் நிரூபிக்க முடியாது. இன்னொன்று நான் சொல்லுகிறேன் 75 லட்ச ரூபாய் அரசாங்கத்திடம் இருந்து லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டை எஸ்.பொ முன்வைத்தார் அவர்தான் ஆரம்பித்து வைத்தது. அவருக்கு எதிராக நாங்கள் வழக்கும் தொடர்ந்திருக்கிறோம். லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு என்பதால் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். நீதி மன்றத்தில் நாம் சந்திக்கவிருக்கிறோம்.
    6. சரி அப்படியானால் இந்த மாநாட்டை நடத்துவதற்கான நிதி தொடர்பான ஆவணங்கள் உங்களிடம் இருக்கிறதா?
    எங்களிடம் ஆவணம் இருக்கிறது. யார்யாரிடம் பணம் சேர்த்தோம் சேர்த்த பணம் எவ்வளவு செலவழித்த பணம் எவ்வளவு இவையெல்லாம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விழா நிறைவடைந்ததும் ஒரு கணக்காய்வாளரை வைத்து நிதியறிக்கையினை நாங்கள் வெளியிடுவோம். இதோ பாருங்கள் ( இது தொடர்பான ஆவணங்களைக் காட்டுகிறார்)
   7. உத்தேச அளவில் நீங்கள் திட்டமிட்டு வைத்திருக்கிற அளவில் இந்த மாநாட்டை நடத்தி முடிக்க எவ்வளவு செலவாகும் என்று நினைக்கிறீர்கள்?
    15 லட்சம் (இலங்கை ரூபா). இது உங்களுக்கு சிரிப்பாயிருக்கலாம். ஆனால் எங்களுக்கு பலர் இந்த மாநாட்டுக்கான உணவுச் செலவுகளை பொறுப்பெடுக்க முன்வந்திருக்கிறார்கள். இப்படியாகப் பல விடயங்களை எங்களுக்குத் தனிநபர்கள் பொறுப்பெடுத்திருக்கிறார்கள் செலவுகளுக்கு. அதனால் மிகுதிச் செலவுகள் பதினைந்து லட்சம் மட்டும்தான்.
   8. இந்த மாநாட்டுக்கு வருகிறவர்களுக்கு பயணச்சீட்டு தங்குமிடவசதிகள் இலவசமாக வழங்கப்படுகிறதா?
    இல்லை. இரண்டு விதமாக இம்மாநாட்டில் கலந்து கொள்ள வருகிறார்கள். ஒன்று பார்வையாளர்களாக வருகிறார்கள் அடுத்தது பங்காளர்களாக வருகிறார்கள். பார்வையாளர்களாக வருகிறவர்களுக்கு நாங்கள் எதுவும் செய்யவில்லை அது செய்யவும் முடியாது. ஆனால் பங்காளர்களுக்கு மாநாடு நடைபெறும்நாட்களில் நாங்கள் உணவும் தங்குமிட வசதியும் செய்து கொடுப்போம். பயணச்சீட்டுகள் தொடர்பில் வெளிநாட்டிலிருந்தோ இலங்கையிலிருந்தோ பார்வையாளர்களாக வருகிறவர்களும் சரி பங்காளர்களாக வருகிறவர்களும் சரி தங்களுடைய சொந்தப்பணத்திலேதான் பயணச்சீட்டுக்களைப் பெற்று இங்கே வருகிறார்கள்.   எவருக்கும் இலவசமாக அவை வழங்கப்படவில்லை.
    9. எங்கே இந்த மாநாட்டை நடத்துவதாக உத்தேசித்திருக்கிறீர்கள்?
    கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் தான் நாங்கள் இதனை நடத்துவோம். அரங்குகள் தமிழ்ச் சங்கத்துக்குள்ளேயே சங்கரப்பிள்ளை மண்டபம் (300 பேர் கொள்ளும்), விநோதன் மண்டபம் (70 பேர் கொள்ளும்), மற்றும் தமிழ்ச்சங்கத்தின் முதல் தளத்தில் உள்ள அரங்கு (சங்கரப்பிள்ளை மண்டபத்தை விடச் சற்றுப்பெரியது) ஆகிய 3 இடங்களிலே நடைபெறும். சில அரங்குகள் மிகவும் சிறிய இடமாகத்தான் இருக்கும். ஆனாலும் நாங்கள் ஆய்வரங்குகளில் பார்வையாளர் எண்ணிக்கையை முதலிலேயே தீர்மானித்து விண்ணப்பங்கள் இப்போதே கோரியிருக்கிறோம் அதன் மூலம் துறைசார் பார்வையாளர்களை அனுமதிப்பதன் மூலமாக இப்பிரச்சினையை அணுக முடிவெடுத்திருக்கிறோம்.
    10. இலங்கைக்கு உள்ளேயிருந்து இந்த மாநாட்டுக்கான எதிர்ப்புகள் எதுவாவது தோன்றியிருக்கிறதா?
    இது வரையில்லை.

   11. இலங்கையில் உள்ள எழுத்தாளர்களுக்கு இம்மாநாடு குறித்த எவ்வாறு தெரிவிக்கப்பட்டது அல்லது அழைப்பு விடுக்கப்பட்டது?
    நாங்கள் இது தொடர்பாக தொடர்ச்சியாக உள்நாட்டு பத்திரிகைகளிலே விளம்பரங்கள் கொடுத்தோம். துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. இது தவிரவும் ஒவ்வொரு பிரதேசங்களில் உள்ள இலக்கிய நண்பர்கள் வழியாகவும் விடயங்களை தெரியப்படுத்தினோம். படைப்பாளிகளிடையேயும் கலைஞர்களிடயேயும் பிரதேசவாரியாக நாங்கள் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தினோம்.
    (ஒலிப்பதிவில் இந்தக் கேள்வி(11) இடம்பெறவில்லை இது பின்னர் கேட்டுச் சேர்க்கப்பட்டது)
    12. நீங்கள் முதலில் நடத்திய ஆலோசனைக்கூட்டத்திற்கு வந்தவர்களில் எவராவது இம்மாநாட்டுக்கு எதிராக கருதுக்களை அங்கே சொன்னார்களா?
    அப்படி ஒன்றுமே சொல்லவில்லை. எப்படி நடத்தலாம், எப்படி திறம்பட நடத்தலாம் என்றே கருத்துக்களைச் சொன்னார்கள். அங்கே வந்திருந்த சிவத்தம்பி கூடச்சொன்னார் இதை எப்படியும் தரமான மாநாடாக நடத்த வேண்டும், விழா போல இல்லாமல், மிகத்தரமான மாநாடாக நடத்த வேண்டும் என்று அங்கே பேசினார்.
    13. நீங்கள் சொல்வதன்படி இலங்கையில் உள்ள எழுத்தாளர்கள் இதனை எதிர்க்கவில்லை. நாங்களும் அப்படி கேள்விப்பட இல்லை. இப்படி இங்கே எதிர்ப்பு இல்லாதபோது ஏன் புலம்பெயர்ந்திருக்கிறவர்களும், இந்தியாவில் இருக்கிறவர்களும் எதிர்க்கிறார்கள். ?
    அவர்கள் பழக்கப்பட்டு விட்டார்கள். அவர்களுக்கு எதை எடுத்தாலும் அதை அரசியல் நோக்கம் கொண்டு மட்டுமே அணுகுவது. ஈழத்தமிழர் பிரச்சினையில் அரசியல் செய்து தங்களுடைய இருப்பை பலப்படுத்தவும் தங்களுக்கு விளம்பரம் செய்து கொள்ளவும் தான் செய்வதாகத்தான் நாங்கள் நினைக்கிறோம். வேற காரணம் இல்ல. இப்ப எஸ்.பொ, ஒரு காரணமும் இல்லை அவர் இப்படிச் சொன்னதுக்கு தன்னை நிலைநிறுத்தி நான் பெரியவன் எண்டு காட்டிக்கொள்வதற்குத்தான் இதைச் செய்யிறார். இன்னொன்று நான் சொல்கிறேன் எங்களுடைய இந்த மாநாட்டிலே நாங்கள் முதியோர்களுக்கு அல்ல இளம் தலைமுறைக்குத்தான் நாங்கள் வாய்ப்பளிக்க போகிறோம் அடுத்த தலைமுறைக்குத்தான் முக்கியத்துவம். நிறைய அரங்குகளில் பங்கு பற்ற விண்ணப்பித்திருப்பவர்களைப் பார்த்தால் அவர்கள் இளம் ஆட்களாய் இருக்கிறார்கள்.
    14. வெளிநாட்டு எழுத்தாளர்களுக்கு எப்படி அறிவிக்கப்பட்டது?
    ஊடகங்களுக்குள்ளால் அறிவிக்கப்பட்டது. பல்வேறு வானொலிகளிலும் எங்களுடைய அமைப்பாளர் நேர்காணல்கள் வழங்கி அதனைப் பரவலாக்கம் செய்தார். பத்திரிகைகளிலும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக இணையத்தளங்கள் வழி பார்த்தால் எங்களுடைய எதிர்ப்பாளர்களே எங்களுக்கு போதிய அளவு விளம்பரத்தை தந்திருக்கிறார்கள்.
    15. சரி இலங்கையின் ஊடங்கள் எப்படி ஆதரவு தருகின்றன?
    நிறையவே ஆதரவு. நாங்கள் தருகிற அனைத்துச் செய்திகள் விளம்பரங்கள் கட்டுரைகள் எல்லாம் மறுப்பின்றி வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இப்போது நாங்கள் ஆரம்பக் கட்டமாகத்தான் இதனைச் செய்து கொண்டிருக்கிறொம் டிசம்பரில் நாங்கள் ஊடகவியலாளர்கள் அனைவரையும் அழைத்து இதனை அறிமுகப்படுத்தி ஒரு பத்திரிகையாளர் மாநாட்டினை நடத்த இருக்கிறோம். அவர்களுடன் கலந்துரையாடி திட்டங்களைச் சொல்லுவோம். ஏற்கனவே முன்னணிப் பத்திரிகைகள் எங்களுக்கு உதவுவதாக ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். 
   16. இதுவரைக்கும் ஏறத்தாழ எத்தனை விண்ணப்பங்களை நீங்கள் பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள். எந்த நாடுகளிலிருந்தெல்லாம் விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன?
    இது வரைக்கும் உள்நாட்டிலிருந்து 300க்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. எல்லா நாடுகளிலுமிருந்தும் விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. இந்த எதிர்ப்பிரச்சாரங்களினால் ஒரு தளம்பல் நிலைமை ஏற்பட்டிருந்தது. பிறகு நாங்கள் அவற்றை தெளிவு படுத்தி இப்போது அதிகளவான விண்ணப்பங்கள் வெளிநாட்டில் இருந்து வர ஆரம்பித்திருக்கின்றன. இது தவிரவும் கலைக்குழுக்களும் தங்களுடைய கலை வடிவங்களை நிகழ்த்துவதற்காக பெருமளவில் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
    17. இந்த ஆய்வரங்கங்களில் பேசப்படுகின்ற விசயங்களிற்கு தணிக்கை இருக்கிறதா?
    நிச்சயமாகத் தணிக்கை இருக்கிறது அதாவது. எந்த அரசியல் விடயங்களும் அதற்குள் வரக்கூடாது.
    18. ஏன் அப்படி?
    இது எழுத்தாளர் மாநாடு ஏற்கனவே இது அரசுசார்பு அரசு எதிர்ப்பெண்டு நிறைய முத்திரைகள் இதற்கு குத்தப்பட்டிருக்கின்றன. இந்தப் பொய்ப்பிரச்சாரங்களை முறியடிக்கவேண்டிய தேவையிருக்கிறது. இது ஈழத்தமிழ் இலக்கியம் குறித்து பேச வேண்டிய இடம். எங்களுடைய நோக்கம் அரசியல் பேசுவதல்ல. பல்வேறு பட்ட அரசியல் கருத்துள்ளவர்களும் இதற்குள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் உதாரணமாக புலி ஆதரவாளர்கள், புலி எதிர்ப்பாளர்கள், அரச எதிர்ப்பாளர்கள், அரச ஆதரவாளர்கள் என்று பலதரப்பட்ட அரசியல் நிலைப்பாடுள்ளவர்களும் ஒன்றாகச் சேர்கின்ற இடம் இது. இதனுள் அவரவர் தன் தன் அரசியலைத் தூக்கிப்பிடித்தபடி நின்றால் வீணான குழப்பங்கள் விழையலாம்.
   19. ஆனால் இதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் வரலாமில்லையா.. நீங்கள் புகலிட இலக்கியம் என்றொரு அரங்கை வைத்து விட்டு அதில் ஆய்வு செய்கிற ஒருவர் தான் ஏன் புலம்பெயர்ந்தேன் என்று சொல்லவெளிக்கிட்டாலே அங்கே அரசியல் வந்துவிடுகிறதில்லையா?
    அதெல்லாம் உண்மைகள், உதாரணமாக கலவரங்கள் நிகழ்ந்தன அதற்கு இனவாதம் காரணம் இது வெளிப்படையான உண்மை அந்த உண்மைகளைப் பேச இங்கே தடையில்லை. அதைப் பேசத்தான் இந்த மாநாடே.

    ஆனால் அவதூறுகளைப் பேச தனிமனிதர்களைத் தாக்குதல் செய்ய, இன்னொருவரின் அரசியல் நிலைப்பாட்டை கேலி செய்கிற விடயங்களை மாத்திரமே நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மற்றபடி உண்மைகளைப் பேச இங்கே தடையில்லை.
    20. அரசுக்கு ஆதரவான கோசங்களே இந்த மாநாடு எங்கும் நிறைஞ்சிருக்கும் எண்டொரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே?
    அது பொய்யென்பது இதுவரை நாங்கள் பேசியவிடயங்களில் இருந்தே தெளிவு பட்டிருக்கும். இவர்கள் தங்களை முன்னிலைப்படுத்துவதற்கா அல்லது எதற்காக இவ்வாறெல்லாம் பேசுகிறார்கள் என்பது உண்மையில் எங்களுக்கும் புரியவில்லை.
    21. சரி இவ்வளவு நாளும் பேசாமல் இருக்கிற அரசாங்கம் கடைசிநேரத்தில் ஒரு அழுத்தத்தை உங்கள் மீது பிரயோகித்து தமக்குச் சார்பானதாக நடத்தச் சொல்லவோ எதிரானதென்று தடை செய்யவோ வாய்ப்பிருக்கிறதில்லையா?
    நான் உங்களுக்குச் சொல்கிறேன். இதுகளைப் பற்றியெல்லாம் நாங்கள் எற்கவே சிந்தித்திருக்கிறோம். உங்களுக்கும் தெரியும் இதில் பல அரசியல் நிலைப்பாடுகள் உள்ளவர்களும் இருக்கிறார்கள். அதிலே இதனை அரசுக்கு எடுத்துச் சொல்லிப் புரிவைக்கும் வலு உள்ளவர்கள் இருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க எழுத்தாளர்களுடைய மாநாடு, அரசியல் மாநாடல்ல அதனை அப்படியே நடக்க விடுங்கள் என்று சொல்லும் வலுவுள்ள இலக்கியவாதிகள் எம்மோடு இருக்கிறார்கள். உடனடியாக நீங்கள் முடிவெடுத்து விடக்கூடாது அப்படியானர் அவர்கள் தான் இந்த மாநாட்டை நடத்துகிறார்கள் அதற்குப்பின்னால் இருக்கிறார்கள் என்று. பலதரப்பட்ட அரசியில் நிலைப்பாடுள்ளவர்கள் இதில் இருக்கிறார்கள் அதிலே அரசு சார்ந்தவர்களும் இலக்கியவாதிகள் கலைஞர்கள் என்ற முறையிலே கலந்து கொள்கிறார்கள்.
    22. நான் இதை வலியுறுத்திக் கேட்பதற்கான காரணம், இந்த எதிர்ப்புக்கோசங்கள், இந்த மாநாட்டில் தேவையற்ற அரசியல் தலையீடுகளை உண்டாக்கி விடக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு என்பதால் தான்.
    இந்தக்கேள்வி “இனிய நந்தவனம்” என்றொரு சஞ்சிகைக்கு நான் வழங்கிய நேர்காணலில் கேட்கப்பட்டது. அந்நேர்காணல் அச்சஞ்சிகையில் வந்திருக்கிறது. அவர்கௌள்க்கு நான் சொன்ன பதில் இதுதான்,    நாங்கள் எழுத்தாளர்கள். அரசியல் சார்புள்ள எழுத்தாளர்கள் இருப்பார்கள். அவர்கள் இந்தப்பிரச்சினையை தீர்க்கக்கூடிய வல்லமையுடையவர்களாக இருப்பார்கள்.
    23. சரி இந்த மாநாட்டின் ஒரு பகுதியான சிங்கள தமிழ் உறவுப்பரிவர்த்தனை பற்றிச் சொல்லுங்கள்?
    சிங்கள் தமிழ் உறவுப்பரிவர்த்தனை என்பது ஓர் அரைநாள் நிகழ்வு. அது நடக்கவிருக்கிறது. நிறையச் சிங்கள புத்திஜீவிகள் தமிழர் தரப்பை புரிந்து கொண்டு எழுதியும் பேசியும் வந்திருக்கிறார்கள். போர்க்காலக் கதைகள் என்று நாங்கள் ஞானம் வெளியீட்டினூடாக ஒரு புத்தகம் கொண்டு வந்திருந்தோம் சிங்கள மொழிபெயர்ப்புக் கதைகள். அதைத் எங்களுக்காகத் தொகுத்து தந்தவரே எஸ்.பொ தான் அதைப்படித்தால் தெரியும் சிங்கள எழுத்தாளர்கள் எவ்வளவு புரிதலுடன் நோக்குகிறார்கள் என்று. அதைப்போல அவர்கள் நிறைய தமிழ் நூல்களை சிங்களத்திற்கு மொழிபெயர்த்திருக்கிறார்கள் என்னுடைய ஒரு நாவல் கூட மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. அந்த நாவல் குருதிமலை. அது பேசுகிற விடயம் சிங்கள இனவாதத்திற்கெதிராக மலையக மக்கள் எப்படித் திரண்டார்கள் என்கிற விசயம் அதையே சிங்களத்தில் மொழிபெயர்த்து கொடுத்திருக்கிறார்கள். அப்படியான எங்களைப் புரிந்து வைத்திருக்கிறார்கள் சிங்கள எழுத்தாளர்கள். இப்போதேல்லாம் நான் சந்திக்கிற 95 வீதமான சிங்கள எழுத்தாளர்கள் எங்களை நோக்கி வருகிறார்கள். அவர்களோடு நாங்கள் தொடர்பாடல்கள் செய்யவேண்டியவர்களாக இருக்கிறோம் சிங்கள இலக்கியங்கள் தமிழுக்கு வந்திருக்கின்றன. தமிழ் இலக்கியங்கள் சிங்களத்திற்கு வந்திருக்கின்றன. இந்தப் பாங்கை வளர்க்கவேண்டியிருக்கிறது. இதனால் இந்த நிகழ்வை நாங்கள் எற்பாடு செய்திருக்கிறோம். வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிற எங்களுடைய படைப்பாளிகளுக்கு சிங்கள படைப்பாளிகள் தங்களுடைய நிலைப்பாட்டை விளங்கப்படுத்துவார்கள். அவர்களுக்கு இது தேவை இங்குள்ள நிலைமையைப் புரிந்து கொள்வதற்கு அது தேவை.
நன்றி: mauran.blogspot

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக