வியாழன், 25 நவம்பர், 2010

வன்னிமக்களை ஆட்டிப்படைகின்றது அத்தாட்சி பத்திரம் என்கின்ற துயரப் பிசாசு – அரவிந்தன்



வன்னிமக்கள் கடந்த ஆண்டு யுத்தத்தினாலும் அகதி முகாம் வாழ்க்கையாலும் துன்பத்தின் எல்லைக்கே சென்றிருந்தார்கள்.   இப்போது அவர்களை இன்னொரு துயரப் பிசாசு பிடித்து ஆட்டுகிறது.
அது காணியில்லை.  காணிக்கான அத்தாட்சிப்பத்திரம் இல்லை.    பிறப்பு , இறப்பு , விவாகப்பத்திரங்கள்ல்லை.   இதனால் உதவித் திட்டங்களில் இடமில்லை என்ற அறிவிப்புகள் துயரப் பிசாசாக மக்களைப் பிடித்து ஆட்டுகின்றன.      மீள் குடியேறி வீட்டுக்கோ ஊருக்கோ வந்தால் போதும்.   அங்கே இருந்து கொண்டு எதையாவது   செய்து கொள்ளலாம் என்று வந்தவர்கள்   இப்போது தெரு நீளத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
இதில் இவர்களுடைய முக்கியமான பிரச்சினை காணியில்லை, வீடில்லை என்பதே.   காணி இருப்போருக்கு முறையான அத்தாட்சிப்பத்திரம் இல்லை என்பது இன்னொரு பிரச்சினை.  பொதுவாகவே வன்னியில்  மூன்று வகைப் பட்ட மக்கள் வாழ்கிறார்கள்.
1. பூர்வீக வன்னியர்கள்.    இவர்கள் பழைய வன்னிக் கிராமங்களில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருபவர்கள்.    கண்டாவளை,   இயக்கச்சி,   பளை,   பூநகரி, புளியம் பொக்கணை,   நெடுங்கேணி,   ஒட்டுசுட்டான்,  முள்ளியவளை.    முல்லைத்தீவு,    புதுக்குடியிருப்பு, குழமுனை, செம்மலை, பாண்டியன்குளம், நட்டாங்கண்டல்  போன்ற   இடங்களைச் சேர்ந்தவர்கள்.
2. குடியேற்றத் திட்டங்கள்  மூலமாகக் குடியேற்றப்பட்டவர்கள்,    இவர்கள் படித்த வாலிபர் திட்டம்,   படித்த மகளிர் திட்டம்,   மத்திய வகுப்புத்திட்டம், விவசாயிகள் திட்டம், பொதுத்திட்டம் என்பவற்றின் மூலமாக இங்கு வந்தவர்கள்.
3. வன்முறைச் சூழலின் விளைவுகளால் குடியேறியவர்கள். இவர்களில் பெரும்பகுதியினர் மலையகத்திலிருந்து வந்தவர்கள்.   ஏனையோர் யுத்தத்தின் காரணமாக யாழ்ப்பாணம்,  திருகோணமலை,  மன்னார்,   வவுனியா,   மட்டக்களப்பு,   அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
பூர்வீக   வன்னி மக்களைப் பொறுத்த வரையில் அவர்களுக்குத் தாராளமாகவே காணி உண்டு. அது பரம்பரைச் சொத்து.   ஆகவே அவர்களுக்குப் பிரச்சினை இல்லை.   சிலவேளை நடைபெற்ற போரின்போது    அவர்களுடைய ஆவணங்கள்   தவறியிருந்தால்   மட்டும் சில சிரமங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அதையும் அவர்கள் இலகுவில் சீர் செய்து கொள்ளலாம். அயற் காணிக்காரர்களின் ஆவணங்கள் அதற்கு உதவும்.
இரண்டாவது தரப்பினருக்கும் அதிக பிரச்சினை இல்லை. இவர்களிலும் இரண்டு வகையினர் உள்ளனர். முதலாவது வகையினர் படித்தவர்கள். மத்தியதர வாழ்க்கையைக் கொண்டவர்கள். இவர்களுக்கு அதிக பிரச்சினை இல்லை. இவர்கள் தங்கள் காணிகளுக்குரிய ஆவணங்களை ஏற்கெனவே எடுத்து வைத்திருப்பவர்கள்.
இரண்டாவது வகையினர், பாமரமக்கள்.  இவர்கள் கல்வி அறிவு, பொருளாதார நிலை, சமூகநிலை எல்லாவற்றாலும் பின்தங்கியோர்.  இதனால் காணி வழங்கப்பட்ட போதும்   இவர்களுக்கு   ஒதுக்குப் புறங்களே கிடைத்தன.   அத்துடன் உரிய காலப்பகுதியில் கிரமமாக முயற்சித்து அத்தாட்சிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளத் தவறிவிட்டனர்.
மூன்றாவது வகையினர் வன்முறையின் காரணமாகக் குடியேறியோர்.     இவர்களில் ஒரு குறிப்பிட்ட    வீதத்தினர் சொந்தமாகவே காணிகளை வாங்கிக் கொண்டனர். அத்துடன் முறைப்படியான ஆவணங்களையும் பெற்றுக் கொண்டனர்.   இவர்கள் மிகச் சிறிய எண்ணிக்கையானோர்.
ஏனையோர் அத்துமீறி அரசாங்கக் காணிகளில் குடியேறியோர்.   தனிப்பட்டவர்களின் காணிகளில் குடியேறியோரும் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இவர்களிலும் ஒரு குறிப்பிட்ட சாராருக்கு தற்காலிக அத்தாட்சிப் பத்திரம் வழங்கப்பட்டது. ஏனையோருக்கு எதுவுமே இல்லை. இந்த நிலையில் பத்தாண்டுகளுக்கும்   மேலாக   இந்த மக்கள்   இந்த நிலையில் இருக்கிறார்கள்.
இப்போது வீட்டுத்திட்டம் என்ற பெயரில் போரினால் பாதிக்கப்பட்ட வீடுகளை மீள அமைத்துக் கொடுப்பதற்கான உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த வீட்டு உதவியைப்   பெற்றுக் கொள்வதாயின்   சம்பந்தப்பட்ட   குடியிருப்பாளர்களுக்கு சொந்தக் காணி இருக்க வேண்டும்.   அதற்கான   உறுதிப்பத்திரம் இருப்பது அவசியம்.   இந்த அறிவிப்பினால், பாதிக்கப்படுவோர் ஏற்கெனவே வன்முறைகளால்  பாதிக்கப்பட்டோரும் பின்தங்கிய நிலையில் இருப்போருமே. ஏனெனில் இவர்களிடமே உரிய அத்தாட்சிப் பத்திரங்கள் இல்லை.
ஆகவே வருகின்ற வீட்டுத்திட்டங்களில் உடனடியாக நன்மையடைவோர் அத்தாட்சிப்பத்திரங்களை வைத்திருப்போரே.   இவர்களில் பலர் வெளியிடங்களில் இருந்து வந்து தங்கள் அத்தாட்சிப் பத்திரங்களைக் காட்டிப் பதிவுகளை மேற்கொண்டு தங்களுக்கான வீட்டு வசதிகளைப் பெற்றுக் கொள்கிறார்கள்.  ஏனையோர் பிரதேசச்   செயலர்   பிரிவுகளின்   முன்னே    நாட் கணக்காக ,    வாரக் கணக்காக,   மாதக் கணக்காக காணிப் பதிவுகளுக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
காலையில் இருந்து மாலைவரை இவர்கள் பிரதேச செயலகங்களின் முன்னே முண்டியடித்துக்கொண்டு நிற்பதை எவரும் காணமுடியும்.   கைக்குழந்தைகளுடன் தாய்சேய் நிலையங்களுக்குச் செல்வதைப்போல  இருபது முப்பது  பெண்கள் காணி விண்ணப்பப் பத்திரங்களுடன் மணிக்கணக்கான நேரம் சில பிரதேச செயலகங்களில் நிற்பதைப் பலநாட்கள் அவதானிக்க முடிகிறது.
காய்ந்து   சோர்ந்து போன  முகங்களுடன், பசியுடன் இவர்கள் காத்திருந்து திரும்பிப் போகிறார்கள். பின்னர் மறுநாளும் வந்து இதேமாதிரிக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.   இதேவேளை சில பகுதிகளில்     இவர்களின் சிரமங்களைக் குறைக்கும் பொருட்டு காணிக் கச்சேரிகள் அந்தந்தப் பகுதிகளுக்குச் சென்று சேவை நடத்துகின்றன.   ஆனாலும் மக்களின்  பிரச்சினைகள்   அவர்களின்   தேவைகளின் அளவுக்கு நிறைவேற்றப்படவில்லை.
இவர்கள் அனைவரும் போரில் பாதிக்கப்பட்டவர்கள். குறிப்பாக குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள்.    சிலருக்கு  பிள்ளையோ கணவரோ தடை முகாம்களில் இருக்கின்றனர்.   சிலருக்கு காயமடைந்து   பராமரிக்க   வேண்டிய நிலையில் உடல் உறுப்புகளை   இழந்து இருக்கிறார்கள். சிலர் ஆதரவற்ற நிலையில் இருக்கிறார்கள்.
பொதுவாகவே எப்படியோ பாதிக்கப்பட்டவர்களே அதிகமாக இருக்கும் வன்னியில் மக்கள் எதன் பொருட்டும் நீண்ட நாட்கள் அலைவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. நிர்வாக இயந்திரத்தை முடுக்கி விடக்கூடிய அளவுக்கு ஆளணிப் பற்றாக்குறையும் வளப் பற்றாக்குறைகளும் இருக்கின்றன என்று யாரும் சொல்லக்கூடும்.
ஆனால், காணி மற்றும் பிறப்பு, இறப்பு, விவாகப் பதிவுகள், அவற்றின் அத்தாட்சிப்பத்திரங்கள் என்பவை எந்த நிலையிலும் அவசியமானவை என்பதால்  இவற்றுக்கு முன்னுரிமை  கொடுக்க வேண்டியது   அத்தியாவசியமானதாகும்.      போரில் எல்லாவற்றையும் இழந்திருக்கும் மக்களுக்கு இப்போது கிடைத்திருக்கும் இந்தச் சிறு உதவிகள் கூட கிடைக்காமற் போய் விடுமோ என்றே அவர்கள் பயப்படுகிறார்கள்.
ஆனால், சம்மந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டால் எல்லோருக்கும் இந்த உதவிகள் கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காணி இல்லாதோருக்கு காணிகள் வழங்கப்படும். காணி வழங்கப்பட்ட பின்னர் வீடமைப்புக்கான ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது.  காணி உள்ளோருக்கு அதற்கான பரிசீலனைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்றும் சொல்கிறார்கள்.
இதேவேளை கிராமங்களில்  ‘வீட்டுத்திட்டத்துக்கான கால எல்லை முடிவடைகிறது.    முடிவடையும்    கால எல்லைக்குள் காணிக்கான அத்தாட்சிப்பத்திரம் உள்ளோர் மட்டும் வீட்டுத்திட்ட உதவிக்குத் தெரிவு செய்யப்படுவர்’ என்ற அறிவிப்பு கிராம அலுவலர்களின் மூலம் விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் குழப்பகரமான நிலையே சனங்களின் பதற்றத்துக்குக் காரணம். சனங்கள் என்னதான் செய்வார்கள்?
நாங்கள் முப்பது ஆண்டுகளாக இந்தக் காணிகளில் இருக்கிறோம். இந்தக் காணிகளுக்குரிய அத்தாட்சிப் பத்திரங்களை இதுவரை எங்களுக்கு வழங்கவில்லை. ஒவ்வொரு முறை விண்ணப்பிக்கும் பொழுதும் கொஞ்சம் பொறுங்கள்.  மாகாணசபையின் அங்கீகாரத்துக்கு அனுப்பியிருக்கிறோம். அது வந்தபின்னர் அறிவிக்கிறோம்.
கச்சேரியில் பதிவுக்காக அனுப்பியிருக்கிறோம். பதிவு செய்யப்பட்டு வந்தவுடன் உங்களுக்குரிய உறுதிகள் வந்து விடும் என்று சொல்லிச் சொல்லியே காலத்தைக் கடத்தினார்கள். எங்களுக்கு ஒரு துண்டு அறிக்கைகூடக் கிடையாது.     நாங்கள் காணியில் எந்த உதவியையும் பெறமுடியாது.    வங்கிகளில் கடனைப் பெறமுடியாது.    விவசாயத்திட்டங்களில் உதவிகளையோ மானியங்களையோ பெறஇயலாது.   இப்போது   வீட்டுத்திட்டத்திலும்  எங்களுக்கு இடமில்லை என்கிறார்கள் இவர்கள்.
மலைநாட்டில் இருந்து வந்த எங்களுக்கு பயிர்ச்செய்கைக்கான காணிகள் வழங்கப்படவேயில்லை. குடியிருக்கும் காணிகளைக்கூட நாங்களாகவே வெட்டித்துப்புரவாக்கி    குடியிருக்கிறோம்.    இங்கே ஒழுங்கான ஒரு வீதியில்லை.    ஏனைய வசதிகள் இல்லை.   இவ்வளவுக்கும் போரின் பாதிப்புகளையும் நாங்கள் தான் அடைந்திருக்கிறொம்.
இப்போது இந்திய உதவித்திட்டங்களில் வீடுகள் அமைக்க வந்திருக்கின்றன. ஆனால், இந்திய வம்சாவழியினர் என்று சொல்லப்படும் எங்களுக்கு இந்த வீட்டுத்திட்டத்தில் வீடு கிடைக்குமோ என்பது சந்தேகமாகவே  இருக்கிறது என்று   சொல்கிறார்  முத்தையன்கட்டைச் சேர்ந்த பழனியாண்டி.  இவரைப்போல கிளிநொச்சி  மாவட்டத்தின் பல   பிரதேசங்களிலும்   வவுனியா வடக்கிலும் ஏராளமான குடும்பங்களிருக்கின்றன.
இதேவேளை கிளிநொச்சியிலேயே   அரசாங்கக் காணிகளையே   ஏக்கர்கணக்கான அளவில் வைத்திருப்போரும் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அதிலும் இவர்கள் ஒரு காலம் உயர் அதிகாரிகளாக இருந்தவர்கள்.   இதேவேளை முப்பது நாற்பது ஆண்டுகளாக குடியிருந்தோருக்கு நிரந்தரக் காணியில்லை என்ற நிலையும் உண்டு. இதெல்லாம் எங்கே நடக்கின்றன?
நிலத்துக்காகப் போராடும் ஒரு இனத்திடம் இவ்வாறான சமூக ஏற்றத்தாழ்வுகள்.  இந்த முப்பது ஆண்டுகளுக்குள்ளும் எத்தனை அதிகாரத்தரப்புகள் வந்து போய்விட்டன?  ஆனால், மக்கள் இன்னம் நிர்க்கதியான நிலையில்தான்.
வீடிற்றவன்  – நாடற்றவன்  – நிலமற்றவன் என்று நாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதானா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக