வியாழன், 25 நவம்பர், 2010

யாழ்ப்பாண சாதிக் கொடுமை: மகளின் காதலுக்கு வில்லனாக மாறிய தகப்பனுக்கு கனடாவில் ஐந்து வருட கடூழிய சிறை!


யாழ்ப்பாணத்து சாதிக் கொடுமையால் மகளின் காதலுக்கு வில்லனாக மாறிய தகப்பனுக்கு கனேடிய நீதிமன்றம் ஒன்று ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்து உள்ளது.


இளைய மகள், இளைய மகளின் காதலன், மூத்த மகளின் கணவன் ஆகியோரை 2007 ஆம் ஆண்டு வாகனத்தால் மோதி கௌரவக் கொலை செய்ய முயன்றார் என்று குற்றஞ்சாட்டி ஒன்ராரியோவில் உள்ள உயர்நிலை நீதிமன்றம் ஒன்றில் Scarborough நகரவாசியான செல்வநாயகம் செல்லத்துரை ( வயது-47) என்பவருக்கு எதிராக வழக்கு இடம்பெற்று வந்துள்ளது.

இம்மூவர் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தினார் என்கிற குற்றச்சாட்டை செல்வநாயகம் ஒப்புக் கொண்டார். இதனால் இவருக்கு எதிரான படுகொலை முயற்சிக் குற்றச்சாட்டை சட்டமா அதிபர் திணைக்களம் வாபஸ் பெற்றுக் கொண்டு மூவர் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தினார் என்று குற்றச்சாட்டில் திருத்தம் கொண்டு வந்தது.


இக்குற்றச்சாட்டுக்கு அதிக பட்சத் தண்டனை 14 வருட கடூழிய சிறை. நேற்று இவ்வழக்கு தீர்ப்புக்காக நீதிபதி John McMahon முன்னிலையில் வந்தது. சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து ஆஜரான அரசுத் தரப்பு சட்டவாதி குற்றவாளிக்கு ஆறு வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரினார்.

எதிரி தரப்பில் ஆஜரான சட்டத்தரணி இவ்வழக்குக்காக அவரது கட்சிக்காரருக்கு ஐந்து வருட தண்டனைதான் வழங்க வேண்டும் என்று கோரினார். ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார் நீதிபதி.

இவ்வழக்குக்காக ஏற்கனவே செல்வநாயகம் 11 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளார். எனவே அவர் இன்னமும் 49 மாதங்கள் கடூழிய சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

குற்றவாளி மிகப் பாரிய குற்றச் செயலை இழைத்திருக்கின்றார் என்று நீதிபதி தீர்ப்பில் சுட்டிக் காட்டினார். வழக்கின் தீர்ப்பு தமிழ் உரை பெயர்ப்பாளர் மூலம் குற்றவாளிக்கு நீதிமன்றில் உரை பெயர்த்துக் கூறப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக