'நாடகம், நடிகர் திலகம், நான்...' என்ற தலைப்பில் கலைமாமணி எஸ்.ஏ.கண்ணன்
ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அதன் வெளியீட்டு விழா திடீரென ரத்தானது பற்றி கழுகார் சொல்லியிருந்தார்.
எஸ்.ஏ.கண்ணனும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் 17 வயது முதல் உயிருக்கு உயிரான நண்பர்கள். கண்ணனைவிட சிவாஜி மூன்று மாதங்கள் மூத்தவர். 1951-ல் 'சிவாஜி நாடக மன்றம்' தொடங்கிய இருவரில் கண்ணனும் ஒருவர். தமிழ் நாடக வரலாற்றில் பல பக்கங்களில் இடம்பெறக்கூடிய இவர் எழுதி இருக்கும் புத்தகத்திலிருந்து ஓரிரு செய்திகள் மட்டும் இங்கே.....
11.8.1946-ல் வி.சி.கணேஷ், ஸ்ரீசக்தி நாடக சபைக்கு ஒப்பந்தப் பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு சேர்ந்தார். மூன்று நான்கு மாதங்களிலேயே எனக்கும் அவருக்கும் ஆழ்ந்த நட்பு. 1952-ம் வருடம் தீபாவளித் திருநாளில் 'பராசக்தி' படத்தின் மூலம் கதிரவன்போல் தோன்றினான். பாராட்டாத பத்திரிகைகளே இல்லை. அப்பப்பா! அவன் உதயமாவதற்குள், எத்தனை ஏச்சுகள், பேச்சுகள், கிண்டல்கள், கேலிகள், தடைகள்...
அதன்பிறகு தன்னிகரில்லா நடிகரானார். விருதுகள் பல பெற்றார். தன் சூரக்கோட்டைப் பண்ணையில் யானை கட்டிப் போரடித்தார். நாடகத்தின் மூலம் பொது ஸ்தாபனங்கள், கல்விக் கூடங்கள் சிவாஜி மன்றத்தின் நாடகத்தின் வாயிலாக பல தர்ம காரியங்களுக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் உதவி வந்தார் கணேஷ்.
சிவாஜி மற்றவர்களைவிட தன் உழைப்பால் சம்பாதித்த பணத்தைக் கொடுத்தார். பெரும் பகுதி இழந்தார். இழந்தும் அவருக்கு நல்ல பெயர் சொல்ல ஆள் இல்லை. காரணம்? நிலம் பார்த்து, மக்களின் தரம் பார்த்து அதை விதைக்கவில்லை. சிவாஜி செய்த தவறுகள் எல்லாம்... யாருக்குக் கொடுத்தால் மனம் நிறைவு பெற்று வாழ்த்துவார்களோ, நாடெல்லாம் புகழ்ந்து உரைப்பார்களோ, அவர்களை சரியாக அடையாளம் காண்பதில் தவறு செய்துவிட்டார். ஈரமனம் உள்ள நலிந்த ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் பணத்தை அள்ளி வீசித் தெளித்திருந்தால், பலன் தானாக இவர் கேட்காமலே வந்து சேர்ந்திருக்கும். அவர் கொடுத்ததெல்லாம் அரசியலுக்கும், அரசியல்வாதிகளுக்கும், சுயநலவாதிகளுக்கும்தான். நீலிக் கண்ணீர் வடித்தவர்கள் எல்லாம் சிவாஜியைக் கவிழ்த்துப்போட்டு, முதுகின் மேல் ஏறி மிதித்து மேலேறிப் போய்விட்டார்கள்.
1967 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக சிவாஜி பிரசாரத்தில் ஈடுபட்டார். சிவாஜி பேச்சுத் துணைக்கு குருமூர்த்தியையும், என்னையும் அழைத்துச் சென்றார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றது. தோற்றதற்குக் காரணம் சிவாஜிதான் என்று ஏளனமாக பேசப்பட்டது. அப்போது நான் நினைத்தேன். 'ஐயோ, இந்த அரசியல்வாதிகளுக்கு, எம்.எல்.ஏ-க்களுக்கு கொடுத்த பணத்தை ரோடு ஓரங்களில், வயல்களில்... ஏர் உழுது பாடுபடும் ஏழை விவசாயப் பெருமக்களுக்கு ஆளுக்கு 100, 200 என்று கொடுத்திருந்தால், 'மகாராசன்... நீ நல்லாயிருக்கணுமய்யா!' என்று வாயார... மனமார வாழ்த்தி இருப்பார்களே! மொத்தத்தில் சிவாஜி காங்கிரஸ் கட்சிக்காக பாடுபட்டதும், செலவழித்த பணமும் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது!
'அக்கரைப் பச்சை', 'இளைய தலைமுறை' போன்ற திரைப்படங்களைத் தயாரித்த தர்மராஜ், திரைப்படத் தயாரிப்பாளர் என்ற நிலையில் இருந்து மாற்றம் அடைந்து மாபெரும் ஜோசியர் ஆகிவிட்டார். அவரை அழைத்துக்கொண்டு சிவாஜியை சந்தித்தேன். வெற்றிலை வைத்து சோதிடம் பார்த்தார். 'உங்கள் அரசியல் பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து நல்லபடியாக நடக்க வேண்டுமானால் திருச்செந்தூர் சென்று முருகனுக்கு 100 லிட்டர் பால் அபிஷேகம் மற்ற அபிஷேகங்களும் செய்யவேண்டும். அதோடு, 50 ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்யவேண்டும். உங்கள் ஹெல்த் பாதிக்காமல் இருக்க நான் சொல்றபடி நவரத்தினக் கற்கள் பதித்த தங்கத்திலே ஒரு டாலர் செய்து கழுத்தில் செயினாக போட்டுக்கொள்ள வேண்டும்...' என்றார்.
'கமலா! தர்மு சொல்றபடி எல்லாத்தையும் செய்து முடிச்சிடு' என்று சிவாஜி சொன்னார். 'ஏங்க இதுக்கெல்லாம் எவ்வளவு செலவு ஆகும்?' என்று கமலாம்மா கேட்டார். சொன்னார் தர்மராஜ். 'நாளைக்கு காலையிலே ஆச்சாரியாரை கூட்டிட்டு வாங்க. பவுனு தர்றேன்...'' என்று கமலாம்மா என்னிடம் சொன்னார்.
காரில் போகும்போது தர்மராஜ் என்னிடம் சொன்னார். 'சிவாஜி அண்ணனோட ஹெல்த் இன்னும் 20 நாளைக்குள்ளே பாதிக்கும். அதனால், இந்த பரிகாரத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அதை நீங்கதான் செய்து முடிக்கணும்...' என்றார். மறுநாள் மாம்பலம் பொற்கொல்லரை அழைத்துக்கொண்டு சகோதரி கமலாம்மாவை சந்தித்தேன். ஐந்து பவுனாக பழைய நகைகளைக் கொடுத்து, 'இதை அழித்து டாலர் செய்யுங்கள். மற்றவைகளுக்கு நாளை மறுநாள் தருகிறேன்...' என்றார். மறுநாள் அவரைப் பார்த்தேன். 'இன்னும், அலமேலு வரலை. அவகிட்டதான் பணம் இருக்கு...' என்றார். மறுநாள் சென்றேன். அன்றும் இதே வார்த்தை. அடுத்து மறுநாள் சென்றேன். வைரக்கல் ஒன்றைக் கொடுத்தார். ஏதோ பழைய நகையில் இருந்து எடுத்ததாகத் தெரிந்தது. பொற்கொல்லரிடம் கொடுத்தேன். 'இந்த கல்லில் கரும்புள்ளி இருக்கு. வேறு தாருங்கள்...' என்று திருப்பித் தந்தார். கமலாம்மாவிடம் கொண்டுபோய் கொடுத்தேன். 'நாளைக்கு வாங்க...' என்று அனுப்பினார். மறுநாள் சென்றேன். 'அலமேலு வரவில்லை' என்றார்.
பயம் என்னைக் கவ்விக்கொண்டே இருந்தது. நடக்க இருக்கும் விபரீதத்தை அவர்களிடம் சொல்லவும் முடியவில்லை; மெல்லவும் முடியவில்லை. மறுநாள் போனேன். 'ஹாலில் உட்காருங்கள். இதோ வருகிறேன்...' என்று சொல்லிச் சென்றார். அரை மணி நேரம் கழித்து வேறு ஒருவர் வந்தார். 'நீங்க ஏதோ பூஜை போடணும்னு சொன்னீங்களாமே! இதுவரை எங்க குடும்பத்தில் 35 வருஷமா இல்லாத புதுப் பழக்கமா? யார் இந்த தர்மராஜ்? இதை சொல்றதுக்கு நீங்க யார்?'' என்று பொரிந்து தள்ளினார். சிவாஜியின் வீட்டைவிட்டு வெளியேறினேன். நேராக மாம்பலம் பொற்கொல்லரிடம் சென்று வைரக்கல்லை வாங்கிவந்து, சகோதரி கமலாம்மாவிடம் கொடுத்தேன். 'இனி இந்தக் கண்ணன் இந்த வீட்டுப் பக்கம் வரமாட்டான்...' என்று சொல்லிவிட்டு வெளியேறினேன்.
இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் இருக்கும்... காலை தந்தி பத்திரிகையின் முதல் பக்கத்தில் சிவாஜி கணேசன் நெஞ்சுவலி காரணமாக விஜயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற செய்தியைப் படித்தேன். துடிதுடித்துவிட்டேன். சபதத்தைத் தூக்கி எறிந்துவிட்டு சிவாஜி வீட்டுக்குப் போனேன்.
சிவாஜியின் தம்பி சண்முகத்தைப் பார்த்து, 'ஒழுங்கா திருச்செந்தூர் சென்று பரிகாரத்தை செய்துவிட்டு வந்துடுங்க. நான் சொல்றது புரியுதா?' என்று காட்டுக் கத்தல் கத்திவிட்டு வந்துவிட்டேன். ஆறு ஏழு மாதம் கடந்து, சண்முகம் மறைந்தார். இதுவும் தர்மராஜ் ஜோசியம் சொன்னதுபோலவே நடந்துவிட்டது. மேற்கண்ட நிகழ்வுகளில் எனக்கும், சிவாஜிக்கும் உள்ள 40 வருட தொடர்பு அறுந்துபோனது.
கடைசியாக, அவர் மருத்துவமனையில் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்ற செய்தியைப் பத்திரிகையில் படித்தேன். அடுத்த நாள் காலையில் போய் பார்க்கலாம் என்று நினைத்தேன். முக்கியச் செய்தியாக தொலைக்காட்சியில் ஓடியது: 'நடிகர் திலகம் மரணம்!' அவரது உடலைப் பார்த்து கதறினேன்.
'டேய் கண்ணா, நான் உங்களுக்கு முன் செத்துட்டேன்னா சவுக்குக் கட்டைக்குப் பதிலாக சந்தனக் கட்டையை வெச்சு எரிக்கச் சொல்லுங்கடா...' என்று சிறு வயதில் சிவாஜி ஒரு முறை சொன்னது ஞாபகம் வந்தது. இதை நான் சொன்னேன். 'பெசன்ட் நகர் எலெக்ட்ரிக் சுடுகாட்டில் எரிக்க எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாங்க...' என்று சொல்லி விட்டார்கள். .
சிவாஜி உயிரோடு இருக்கும்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி தனக்குக் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அது கிடைக்கவில்லை. தான் செத்தபிறகு தனக்கு நடக்க வேண்டுமென்று ஆசைப்பட்டதும் நடக்கவில்லை!''
- தொகுப்பு: பதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக