வியாழன், 11 நவம்பர், 2010

வார்த்தைகள் புரியாததற்கு பாடகர்களைக் குறை சொல்லாதீர்கள்!-பி.சுசீலா

P Suseelaசென்னை: புதிய பாடல்களில் வார்த்தைகள் புரியாமல் போவதற்குக் காரணம் இசையமைப்பாளர்களே. பாடகர்களைக் குறை சொல்லாதீர்கள், என்றார் பிரபல பாடகி பி சுசீலா.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பல மொழிகளில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடி சாதனை புரிந்தவர், பி.சுசீலா. இன்றும் தன் குரல் வளத்தை பேணி வருகிறார். தற்போது தனது பெயரில் ஒரு அறக்கட்டளையை உருவாக்கி, அதன் மூலம் கலைத்திறன் மிக்கவர்களையும், சாதனையாளர்களையும் ஊக்குவிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இந்த அறக்கட்டளை சார்பில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி, அதில் பின்னணி பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன், பி.பி.சீனிவாஸ், கே.ஜே.ஜேசுதாஸ் ஆகியோரை கவுரவிக்கிரார்.

டி.எம்.சௌந்தரராஜன், பி.பி.சீனிவாஸ் இருவருக்கும் 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்படுகிறது.

இதற்கான விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், வருகிற 14-ந் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது.

இதையொட்டி பி.சுசீலா, சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "பழைய பாடல்களில் உள்ள இனிமை, புதிய பாடல்களில் இல்லையே என்கிறார்கள். அப்படி ஒரேடியாக சொல்லிவிட முடியாது. புதிய பாடல்களில் கூட சில இனிமையான பாடல்கள் வரத்தான் செய்கின்றன.

பாடல்களில் வார்த்தைகள் புரியாமல் போவதற்கு பாடகர்-பாடகிகளை குறை சொல்லக் கூடாது. இசையமைப்பாளர்கள்தான் காரணம். இசையமைப்பாளர்கள் எப்படி பாடச் சொல்கிறார்களோ, அப்படித்தான் பாடகர்-பாடகிகள் பாட முடியும். இன்றைக்கு ஏராளமான புதிய கருவிகள் வந்துவிட்டன. ஆனால் அன்றைக்கு 'கீ போர்டு' இல்லை. சிதார், வீணை போன்ற கருவிகள் மட்டுமே இருந்தன.

என்னைப் பொருத்த வரை பாடகர்களில் மிகச் சிறந்தவர் டி.எம்.சௌந்தரராஜன். அதற்காகத்தான் அவருக்கு விருது கொடுக்கிறோம்.

எங்களைப் போல இளம் பாடகர்கள் நிலைக்க முடியாமல் போவதற்குக் காரணம், இசையமைப்பாளர்களுக்கு புதுசு புதுசாக பாடகர்-பாடகிகள் தேவைப்படுவதுதான். பழைய பாடகர்-பாடகிகளே இருந்து கொண்டிருந்தால் எப்படி? புதியவர்கள் வரவேண்டாமா? அப்படித்தான் நாம் நினைத்துக்கொள்ள வேண்டும்.

இசைத்துறையில், எனக்கிருந்த நிறைவேறாத ஆசை, என் பெயரில் அறக்கட்டளை அமைத்ததன் மூலம் நிறைவேறி விட்டது.

நான் பாடிய பழைய பாடல்களான, 'மலர்ந்தும் மலராத,' 'உன்னை காணாத கண்ணும்,' 'நாளை இந்த வேளைப்பார்த்து' போன்ற பாடல்களை டி.வி.யில் பார்க்கும்போது, இப்போதும் கண்ணீர் வருகிறது...." என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக