புதன், 3 நவம்பர், 2010

அமெரிக்க மாகாண கவர்னராக இந்திய வம்சாவளி பெண் தேர்வு


அமெரிக்காவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கவர்னர்கள் மற்றும் நாடாளுமன்ற கீழ்சபை மற்றும் மேல்சபை பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான இடைத்தேர்தல் அண்மையில் நடந்தது.

வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்றோர் விவரங்கள் இன்று காலை முதல் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் தெற்கு கரோலினா மாகாண கவர்னர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே என்ற பெண் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மொத்தம் பதிவான 75 சதவீத வாக்குகளில் 52 சதவீத வாக்குகளை பெற்று இவர் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஒபாமாவின் ஜனநாயக கட்சி வேட்பாளர் வின்சென்ட் ஷீஹன் 46 சதவீத வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

நிக்கி ஹாலே இரண்டாம் தலைமுறை அமெரிக்க இந்தியர் ஆவார். இவரது பெற்றோர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். தெற்கு கரோலினா மாகாணத்தின் முதல் பெண் கவர்னர் என்ற பெருமையும் நிக்கி ஹாலேக்கு கிடைத்துள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அமெரிக்க மாகாண கவர்னராவது இது இரண்டாவது முறையாகும். அமெரிக்க இந்தியரான பாபிஜின்டால் லூசியானா மாகாண கவர்னராக ஏற்கனவே பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த இடைத்தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் கீழ் சபையில் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக