வியாழன், 25 நவம்பர், 2010

ஆ.ராசா விவகாரம்:சுப.வீரபாண்டியன், ஏ.எஸ்.பன்னீர்செல்வன் பேச்சு


தமிழ் ஊடகப்பேரவை சார்பில்   சென்னை சர்.பி.டி. தியாகராயர் அரங்கத்தில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது.
ஆ.ராசா மீது சில ஊடகங்களின் வேட்டை ஏன்? என்ற தலைப்பில் இந்த கூட்டம் நடந்தது.  விடுதலை- ஆசிரியர் கி.வீரமணி இக்கூட்டத்திற்கு தலைமையேற்றார்.
கருஞ்சட்டை தமிழர்- ஆசிரியர் சுப.வீரபாண்டியன், பேனாஸ் சவுத் ஏசியா ஊடக அமைப்பு செயல் இயக்குநர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன், தமிழ் மையம் நிறுவனர் ஜெகத்கஸ்பார், தொலைக்காட்சி ஊடகவியலாளர் ரமேஷ்பிரபா ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
இக்கூட்டத்தில் ஏ.எஸ். பன்னீர்செல்வன் பேசுகையில்,

ஸ்பெக்ட்ரம் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட இந்திய தணிக்கை குழு அறிக்கை (சிஏஜி அறிக்கை) உள்ள செய்திகள் என் கையில் வைத்துள்ளேன். 
இதில் 2002ஆம் ஆண்டு முதல் 2010 வரை உள்ள அறிக்கை. ஆனால் 2008 ஆம் ஆண்டு மட்டும் இந்த அறிக்கை பெரிதுபடுத்திச் சொல்கிறது. மற்ற ஆண்டுகளைப் பற்றி இந்த அறிக்கையில் ஒரு வார்த்தை கூட இல்லை. இந்திய தணிக்கை அதிகாரி எதை வேண்டுமானாலும் சொல்ல வேண்டும், நாங்கள் அதை நம்பவேண்டுமா?

எனக்குத் தோன்றியதை எழுதினேன்
சி.ஏ.ஜி. ரிப்போர்ட்டை தாக்கல் செய்த சி.ஏ.ஜி. அதிகாரி, எனக்குத் தோன்றியதை நான் இந்த அறிக்கையில் எழுதியிருக்கின்றேன் என்று சொல்லியிருக்கின்றா
அதாவது எதையும் படிக்காமல், எந்த ஆதாரத்தையும் வைக்காமல், எந்த புள்ளி விவரத்தையும் படிக்காமல் எனக்குத் தோன்றியதை எழுதியிருக்கிறேன் என்று சொல்லுகின்றார்.
அதாவது தான் தோன்றித்தனமாக இந்திய கணக்கு தலைமை அதிகாரி ஓர் அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார் என்று நான் குற்றம் சுமத்துகிறேன். ஸ்பெக்ட்ரல் மார்க்கெட்டிங் முதலீடே ரூ. இரண்டு லட்சம் கோடி. ஆனால் ரூ.1,76,000 கோடி எப்படி ஊழல் நடைபெற்றிருக்கும்? வேடிக்கையாக இருக்கிறது.
தொலை தொடர்புத்துறை 2002ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அமைச்சகத்தில் பிரமோத் மகாஜன், அருண் ஷோரி, தயாநிதி மாறன், சுக்ராம் ஆகியோர் எல்லாம் அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள்.
ஆனால் அவர்களைப் பற்றி எல்லாம் சொல்லாமல் இராசாவை மட்டும் குறிவைத்துத் தாக்குவது ஏன்?
தொலை தொடர்புத் துறையை ஒரு சமூக சேவைத் துறையாகப் பார்க்க வேண்டும். டிராய், மத்திய அமைச்சரவை எடுத்துதான் எல்லா முடிவுமே செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தத் துறையில் நட்டம் வரத்தான் செய்யும். அது பொது மக்களுக்கு இலாபமாகத்தான் இருக்கும்’’என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சுப.வீரபாண்டியன்,

’’கஸ்பார் பேசும் பொழுது சொன்னார். இரண்டு காரணங்களுக்காக இராசாவை எனக்குப் பிடித்திருக்கிறது என்று. அதே இரண்டு காரணங்களுக்காகத்தான் பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும் அவரை வெறுக்கின்றன. தி.மு. க.வை அழித்த கறுப்பு அடையாளம் என்று சொல்லி தாக்கினார்கள். ஆ.இராசாவும் பதவி விலகினார்.

கறுப்பு அடையாளம் பெரியார் கொடுத்தது. எனவே அது உங்களுக்கு கொஞ்சம் கசக்கத்தான் செய்யும். தி.மு.க., காங்கிரஸ் ஊழல் கட்சிகள் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள் என்று உயர்ஜாதி ஊடகம் தெரிவித்திருக்கிறது.

விடுதலையில் நாளைக்கு கருத்துத் தெரிவிக்கட்டுமா? நூற்றுக்கு நூறு சரியான கூட்டணி என்று.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் எதுவுமே இன்னும் நீதி மன்றத்திற்கு வரவில்லை. தலித் மக்களின்  கொள்கை வீரன் ராசா என்று கலைஞர் குறிப்பிட்டிருக்கிறாரே.

அய்யா வீரமணி மிக அருமையாக எழுதியிருக்கிறார்

இன்றைய விடுதலையில் நம்முடைய ஆசிரியர் வீரமணி  மிகச்சிறப்பானதொரு அறிக்கையை, மிகச் சரியானதொரு தருணத்தில் எழுதியிருக்கின்றார்.

திமுக பிரச்சாரப் படை தமிழகமெங்கும் கிளம்பட்டும் என்று மிக அருமையாக எழுதியிருக்கின்றார். தமிழர்களே புறப்படுங்கள் நாடெங்கும் நமது பிரச்சாரத்தை கிளப்பிடுவோம். ஆ.இராசாவின் மீது பூசப்பட்ட கறையைத் துடைப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

சுப்பிரமணிய சாமியை கைது செய்யுங்கள்

சுப்பிரமணியசாமி சொல்லுகிறார். இராசா உயிருக்கு ஆபத்து - யாரோ கொல்லப்போகிறார்கள் என்று சொல்லுகிறார்கள். அப்படியானால் இராசாவை யாரோ கொலை செய்யப் போகிறார்கள் என்ற செய்தி உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. எனவே முதலில் சுப்பிரமணிய சாமியை கைது செய்யுங்கள்.

எந்தக் காலத்திலும் எதற்கும் கலங்காதவர் தான் கலைஞர். இராசாவுக்கு நடத்துகின்ற முதல் கூட்டமல்ல இது. தமிழகம் முழுக்க இந்தக் கூட்டம் சுழன்றடிக்க வேண்டும்’’என்று  பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக