வெள்ளி, 12 நவம்பர், 2010

சசிகலாவுடன் ஜெயலலிதா மீண்டும் கொடநாடு பயணம்

சென்னை: சட்டசபைக் கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று மீண்டும் கொடநாடு எஸ்டேட்டுக்கு கிளம்பிவிட்டார்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை, போலீஸ் சரியில்லை, குழந்தைகள் கடத்தல் நடக்கிறது என்று நாளொன்றுக்கு இரண்டு அறிக்கைகள் வெளியிட்டு வரும் ஜெயலலிதா, இந்த விவகாரங்களை சட்டசபையில் போய் கிளப்பாமல் மீண்டும் ஓய்வெடுக்க கொட நாடு இன்று சென்றார்.

வழக்கமாகவே வருடத்தில் பெரும்பாலான நாட்களை கொடநாட்டில் கழிக்க ஆரம்பித்துவிட்ட அவர், சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதால், கோவை, திருச்சி மதுரையில் தனது தலைமையில் பொதுக் கூட்டங்கள் நடத்தினார்.

இதற்கு வந்த, வரவழைக்கப்பட்ட கூட்டத்தை வைத்து ஜெயலலிதாவுக்கு மக்கள் ஆதரவு பெருமளவு அதிகரித்துவிட்டதாக அவரையே ஏமாற்றும் வகையில், செய்திகளை அவருக்கு வேண்டிய ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

இந் நிலையில் மீண்டும் தனது தோழி சசிகலாவுடன் கொடநாடு கிளம்பினார் ஜெயலலிதா. சென்னையிலிருந்து தனி விமானத்தில் கோவை வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கொடநாடு எஸ்டேட்டுக்கு செல்கிறார்.

கொடநாடு எஸ்டேட் வளாகத்துக்குள் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு நீலகிரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கொடநாட்டில் ஜெயலலிதா 10 நாள் வரை தங்குவார் எனத் தெரிகிறது.

கடந்த ஜூன் 18ம் தேதி ஜெயலலிதா கொடநாட்டில் இருந்தபோது அவரை தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பல முறை வந்து சந்தித்து கூட்டணி குறித்து பேசியதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக