டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் விஸ்வரூபம் எடுத்திருப்பதால் அதுகுறித்த ஒரு முடிவுக்கு வர வேண்டிய நெருக்கடி மத்திய அரசுக்கு வந்திருப்பதால், பிரதமர் தனது தென் கொரிய பயணத்தை முடித்துக் கொண்டுதிரும்பிய பின்னர் அமைச்சர் ராஜா நீக்கம் குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஏல ஊழல் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமைச்சர் ராஜாவின் அணுகுமுறையால் நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 73 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்கு தணிக்கை அதிகாரி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் ராஜா விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்றத்திடம் கடுமையான வசவை வாங்கிக் கட்டிக் கொண்டுள்ள மத்திய அரசு, அடுத்த முறை வழக்கு விசாரணைக்கு வருவதற்குள் உறுதியான நடவடிக்கை எடுத்தாக வேண்டிய நிலையில் உள்ளது.
இதனால் ராஜா குறித்து இறுதி முடிவு எடுக்க காங்கிரஸ் மேலிடமும், மத்திய அரசும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் தற்போது பிரதமர் மன்மோகன் சிங் ஜி20 மாநாட்டில் பங்கேற்க தென் கொரியா சென்றுள்ளதால் அவர் நாடு திரும்பியதும் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என அரசுத் தரப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளைதான் பிரமதர் நாடு திரும்புகிறார். எனவே இந்த வாரஇறுதிக்குள் ராஜா தொடர்பாக ஏதாவது முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக