சனி, 20 நவம்பர், 2010

போராளிகளை பிளவுபடுத்தியதே கருணாநிதிதான்! பொங்குகிறார் பழ.நெடுமாறன்

பழ. நெடுமாறனுக்கு உதயராசாவின் பதில்
பழம்பெரும் அரசியல்வாதியான நெடுமாறன் அவர்கள் 24 ஒக்டோபர் 2010 இல் இணையங்களுக்கு கொடுத்த செவ்வி, பல பத்திரிகைகளில் குறிப்பாக இலங்கை தமிழ் பத்திரிகைகளில் பிரசுரிக்கப் பட்டிருந்தது. அதில் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் ( கலைஞர் மற்றும் எம்.ஜி.ஆர்) அன்று ஏற்பட்ட மோதல்கள், தமிழ் அமைப்புக்களின் மத்தியில் விரிசல்களுக்கு காரணமாக அமைந்து விட்டன என்ற தொனியில், கலைஞரை குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு வலு சேர்க்க, சொற்சுவை பொருட்சுவையாக, டெலோ அமைப்பையும், அதன் பெரும் மதிப்புக்குரிய மறைந்த தலைவர் சிறி சபாரத்தினத்தையும் சினிமா பாணியில் வரும் வில்லன்கள் கணக்காக விபரித்திருந்தார். அவருடைய இந்த செயலுக்கு எமது ஆழ்ந்த மன வருத்தத்தினை நாம் தெரிவிக்கிறோம். எதை தவறு என்று செவ்வியில் கூறியிருந்தாரோ, அதே தவறினை இன்று அவர் அதே அரசியல் காரணங்களிற்காகச் செய்திருப்பது வேடிக்கையானது.
 இலங்கையில் சகோதர யுத்தம் நடக்காமல் இருந்திருந்தால், வரலாறு வேறு வடிவம் பெற்றிருக்கும் என முதல்வர் ஆதங்கப்படுவதில் மிக ஆழ்ந்த உண்மை இருக்கிறது. இக்கேள்வியை சரியாக புரிந்து கொள்ளாமல், நெடுமாறன் புலிகளிற்காக வக்காலத்து வாங்கியிருப்பதும்,  அதற்கு உண்மைக்கு புறம்பான செய்திகளையும், வரலாற்றினை திரிபு படுத்தியும் டெலோ அமைப்பை கேவலப் படுத்தி இருப்பது எமக்கு மிகுந்த மன வேதனை அளிக்கிறது.
புலிகள், 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் சந்தித்த ஈழப் போராட்டத்தின் முடிவிற்கு, 1986 மே மாதம் நடந்த டெலோ- புலி சகோதர யுத்தமே ஆரம்பமாக அமைந்தது என்பதில், ஈழத் தமிழர் எவருக்குமே இருவேறு கருத்துக் கிடையாது. அது அரசியல் வாதிகள், புத்தி ஜீவிகள், மற்றைய இயக்கத்தினர், அவதானிகள், ஆராய்ச்சியாளர், மற்றும் பொது மக்கள் எவராயினும் இருவேறு கருத்துக்கள் இருப்பதற்கு சாத்தியம் இல்லை. புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் பலர், அன்று இந்த சகோதர யுத்தத்தினை எதிர்த்ததோடு, பின்னர் பிரிந்தும் சென்றனர். டெலோ மட்டும் அல்லாது, ஈ.பி.அர்.எல்.எஃப், ஈரோஸ் மற்றும் புளட் இயக்கங்களின் உறுப்பினர்களும் புலிகளால் கொல்லப் பட்டமை கூட சகோதர யுத்தமே.
“டெலொவிற்கு எதிராக புலிகள் ஆயுதம் தூக்கியதன் மூலம், ஈழ்க் கோரிக்கை தமிழ் மக்களின் கனவாகவே போய் விட்டது….”- வரதராஜப் பெருமாள்- (ஈ.பி.அர்.எல்.எஃப்) முன்னாள் வடக்கு-கிழக்கு மாகாண முதலைமைச்சர்- இலங்கை.
முதல்வர் கலைஞர் அவர்கள், தீர்க்கதரிசனம் மிக்க, சாணக்கியம் மிகுந்த, சூட்சுமமான ஈடு இணையற்ற ஒரு தனிப் பெரும் தலைவர். ஈழ விடுதலை இயக்கங்கள் பல இருந்தமையும், அவர்கள் ஆயுதம் தரித்திருந்தமையும், அவற்றின் தலைவர்கள் பலர் மிகவும் இளைஞர்களாக இருந்த காரணத்தினாலும் அவர்களுக்கிடையில் ஏதாவதொரு காரணத்தினால் மோதல் நிலை ஏற்பட்டால், அதை கட்டுப்படுத்துவது முடியாத காரியமாகி விடும். அப்படியானால், ஈழப் போராட்டம் திசை மாறிவிடும். பிசுபிசுத்துவிடும். எல்லா முயற்சியும் வீணாகிவிடும் என்பதை அப்போதே நன்கு அறிந்திருந்தார். அதனால் தான் அவர் இந்த அமைப்புகளை அடிக்கடி சந்தித்து ஒற்றுமையின் அவசியத்தை வலியுறித்தினார். அரசியல் லாபம் தேடுவதற்கல்ல. டெலோ-புலி யுத்தம் ஆரம்பமான நேரத்திலிருந்தே அதைத் தடுப்பதற்கு பல முயற்சிகளை முன்னெடுத்தார். எல்லாமே புறக் குடத்தில் வார்த்த நீர் போலாயிற்று. கடைசியில் அந்தப் பெருமகனார் பயந்த மாதிரியே, புலிகள் ஈழப் போராட்டத்தை கடைசிவரைக்கும் திசை திருப்பி, எக்காலத்திலும் ஈடு செய்ய முடியாத அழிவுப் பாதையில் இட்டுச் சென்றதோடு, மக்களையும் நிற்கதியாக்கி மற்றைய தமிழ் அரசியல் தலைமைகளையும் அழித்து விட்டார்கள். எஞ்சி இருப்பவர்களுக்கு துரோகிப் பட்டம் சூட்டி, மக்களை குழப்பிவிட்டார்கள். இந்தக் குழப்பத்தில் நெடுமாறன் மாட்டிக்கொண்டது தான் வியப்பை அளிக்கிறது.
ஈழப் போராட்டத்தினை ஆதரித்ததால் தனது ஆட்சியையும் ஒருமுறை இழந்தவர், மாண்பு மிகு முதல்வர் கலைஞர் அவர்கள் என்பதை, தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் மறக்காது நன்றியோடு நினைவு கூரும்.
லிங்கம்மான் கொலைதான் டெலோ-புலி மோதலுக்கு காரணம் என பலரையும் நம்ப வைத்துள்ளனர் புலிகள். எப்பொழுதும் வெற்றி பெற்றவரே வரலாறு எழுதுபவர். உண்மை என்ன என்பதை இத்தருணத்தில் விளக்க விரும்புகிறோம். திம்புவிற்குப் பின்னர் 1986ல் களமிறங்கி நின்ற ஒரே தலைவர், சிறி சபாரத்தினம் தான். டெலொவை மீழக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது மற்றைய அமைப்பு தளபதிகளுடன் ஒற்றுமையின் அவசியம், உறுப்பினர்கள் மத்தியில் புரிந்துணர்வு,  கள நிலவரங்கள், மற்றும் அரசியல் சூழல் பற்றி பேசி ஒருமித்த நிலைப்பாட்டை உருவாக்கும் முயற்சிகளில் சிறி அண்ணா இறங்கியிருந்தார். டெலோ மிகவும் வலிமையாகவும், பலராலும் ஏற்றுக் கொள்ளப் பட்ட அரசியல் அமைப்பாகவும் மாற்றம் பெற்றிருந்தது. இது புலித் தலமைக்கு பெரும் சிக்கலைக் கொடுத்தது. அந்த நேரத்தில் தான் புலிகள் சார்பில், களத்தில் மாத்தயா, கிட்டு போன்ற தளபதிகள் இருந்தும், லிங்கம்மான் டெலொவோடு பேசுவதற்கு அனுப்பி வைக்கப் பட்டார். ஆயுதம் இல்லாமல் வரவேண்டும் என்பது கட்டாயமான நிபந்தனை. இது சிறி அண்ணாவின் பாதுகாப்பையொட்டி ஏற்படுத்தப் பட்டிருந்த நிலைப்பாடு. ஆனால், புலிகள் எப்போதும் ஒரு ஆயுதத்தை வைத்திருப்பார்கள். பின்னாளில் மகத்தான தலைவர் அமிர்தலிங்கத்தைச் சந்திக்கும் பொழுதும், இதைப் புலிகள் கடைப்பிடித்தனர். இந்திய ராணுவத்தைச் சந்திக்கும் பொழுது “ஜொனி” என்ற புலித் தளபதி இதே தவறினால் உயிரிழக்க நேரிட்டது.
லிங்கம்மானும் நான்கு பேரும் வந்திறங்கி, டெலொவின் முகாமிற்குள் வரவும்,  அவர் இடுப்பில் இருந்த பிஸ்டல் வெளித்தெரிய, சிறி அண்ணாவின் மெய்ப்பாது காவலர், வேறு வழியின்றி, லிங்கம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள வேண்டிய, ஒரு துர்பாக்கிய சூழல் உருவாகியது. இது பின்னர் புலிகளாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டது. மற்றைய புலிகள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப் பட்டனர். இச்சம்பவத்திற்கும் டெலோ- புலி மோதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நீண்ட நாட்களுக்குப் பின்னர் மோதலை புலிகளே தொடக்கினர்.
ஆக தமிழ் ஈழ விடுதலை இயக்கத் தலைவர் சிறி சபாரத்தினம் புலிகள் இயக்கத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்து அவரின் கண்களைத் தோண்டினார், என ஈழ வரலாற்றில், தனது கைச்சரக்கையும் சேர்த்து கதை அளந்துள்ளார் நெடுமாறன். இப்படியான அளப்புகளும் ஈழப் போராட்டத்தினை தவறான பாதைக்கு இட்டுச் சென்ற சாதனையை படைத்ததோடு, தவறான கண்ணோட்டத்தினையும் உலக அரங்கிலே உருவாக்கியுள்ளது.
ஈழ அரசியல், காலத்துக்கு காலம் தமிழக அரசியலால் தொட்டுக்கொள்ளப்படுவது ஒரு புதிய நடைமுறை இல்லை என்பதையும் நாம் நன்கறிவோம். இருந்தும் பழ நெடுமாறனின் கலப்படமில்லாத கட்டுக் கதைக்கு இனி ஆயுள் இல்லை என்பதையே இங்கு இடித்துரைக்க விரும்புகிறோம்.
ப. உதயராசா
செயலாளர் நாயகம்
சிறி ரெலோ.
மூலம்/ஆக்கம் : TELOnews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக