செவ்வாய், 16 நவம்பர், 2010

கலைஞர்: மகிழ்ச்சிக் கூத்தாடுபவர்களுக்கு கடைசி எச்சரிக்கை:

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 11 ஆயிரம்  கோடி ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டதாக தணிக்கை குழு அறிக்கை வெளியிட்டதற்காக அவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாரா என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அலைவரிசை ஒதுக்கீட்டு விவகாரம் குறித்து ஜெயலலிதா வெளியிட்டிருக்கும் அறிக்கைக்கு பதில் அளித்துள்ள முதலமைச்சர் கருணாநிதி,  ‘’லட்சக்கணக்கான கோடி இழப்பீடு என்பதெல்லாம் அனுமானத்தில் சொல்லப்படும் கருத்து என்று தணிக்கை துறை தெரிவித்துள்ளது.  அனுமானத்தில் சொல்லப்படும் கருத்தின் அடிப்படையில், இறுதித் தீர்ப்பை எழுத முற்படுவது முறைதானா?
அதிமுக ஆட்சியில் 2001-2002ல் 3,390 கோடி ரூபாய்,  2002-2003 ல் 2,982 கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா ஆட்சியில் 11 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அப்போது நாளேடுகளில் செய்தி வெளியானது.  இதையடுத்து ஜெயலலிதா ராஜினாமா செய்தாரா?
இந்த பிரச்சனையை அடிப்படையாக வைத்து ஜெயலலிதா நாடு முழவதும் வெளியிட்ட முழுப்பக்க விளம்பரத்துக்கு தமிழக மக்களின் வரிப்பணம் சுமார் ஒரு கோடியே 22 லட்சம் ரூபாய் வரை கொட்டி அழப்பட்டது.

அந்த விளம்பரத்தில் இந்திய தணிக்கைத்துறை தலைவரின் கருத்தறிவிப்புகளை மட்டும்தான் இந்த அறிக்கை கொண்டுள்ளது.

அதைப்பற்றி பொதுக்கணக்குக் குழுவால் விவாதிக்கப்பட்ட பிறகே இது முழுமை அடையும்.
ஜெயலலிதா மீது தணிக்கைத் துறை குற்றஞ்சாட்டியபோது இப்படி எல்லாம் வியாக்கியானம் செய்தவர்,  தற்போது எப்படியெல்லாம் தன் தோற்றத்தை மாற்றிக்கொண்டுள்ளார்.

வருமான வரி வழக்கில் நீதிமன்ற நடவடிக்கைகளை கேலிக்கூத்தாக்குவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யாரைப்பற்றி கூறினார்கள்?

அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தை திருப்பி ஒப்படைக்கும் நிர்ப்பந்தம் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது.  முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பு 1991 ல் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு 2 கோடி ரூபாயாக இருந்தது.  1996ல் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு 66 கோடியே 45 லட்சம் ரூபாய் ஆக  உயர்ந்தது என்றால் அன்றாடம், ஊழலையே வாழ்க்கை முறையாக கொண்டிருப்பது ஜெயலலிதாவா, நானா?

உச்சநீதி மன்றம் குற்றவாளி என தீர்ப்பு அளித்தால் மட்டுமே குற்றவாளி. அதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்தான் என தெரிவித்த ஜெயலலிதா,  எவ்வளவு பெரிய பித்தலாட்டக்காரர்.  இத்தனை உண்மைகளையும் மக்கள் மறந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில், மனுதர்ம ஆட்சியை மீண்டும் கொண்டு வரலாம் என மகிழ்ச்சிக்கூத்தாடுபவர்களுக்கு கடைசி எச்சரிக்கை என்னவென்றால் மனுதர்மத்திற்கு தமிழகத்தில் மறுபிறவி கிடையாது’’என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக