ஞாயிறு, 14 நவம்பர், 2010

நண்பர் மொன்றியலில் நடக்கும் உலகப் பொறியியலாளர் மாநாட்டுக்கு வந்திருந்தார். ரொறொன்ரோவிலிருந்து

அ. முத்துலிங்கம
எனக்கு வரும் பதற்றம் நானாக உருவாக்குவதில்லை. பக்கத்தில் இருப்பவர் அதை உருவாக்குவார். நேபாளத்திலிருந்து நண்பர் வந்து ரொறொன்ரோவில் இறங்கியதும் அது ஆரம்பித்தது. இவருடைய வேலை தேசம் தேசமாகச் சுற்றிக்கொண்டிருப்பது. உலகத்து நாடுகளில் 72 நாடுகளுக்குப் பயணித்திருக்கிறார். கனடாவுக்குப் பல தடவை வந்து போயிருக்கிறார். கையில் எதை எடுத்தாலும் அதை முதல் காரியமாகத் தொலைத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். அவர் வந்து இறங்கிச் சில நிமிடங்கள்கூட ஆகாதபோது ‘என்னுடைய செல்பேசியைக் கண்டீர்களா?’ என்று கேட்பார்.
அவர் உட்கார்ந்ததும் தன்னைச் சுற்றிப் பொருட்களைப் பரவி விட்டுக்கொள்வார். அவருடைய மேல்கோட்டைக் கழற்றி கதிரையின் பின்பக்கத்தில் கொழுவுவார். கால்சட்டை பைகளில் இருந்து செல்பேசி, பணப்பை, சாவிக்கொத்து முதலியவற்றை வெளியே எடுத்து தனித்தனியாக வைப்பார். மடிக்கணினியை சுவரில் இருக்கும் ஏதோ ஒரு மின்னிணைப்பில் சொருகுவார். மூக்குக்கண்ணாடியும் பேனையும் தேவைக்கு தக்கமாதிரி அவ்வப்போது அவர் உடம்பிலும் சமயங்களில் மேசையிலும் தங்கும். வந்து இறங்கிய சில நிமிடங்களில் என்னுடைய முழு வீடும் அவருக்குச் சொந்தமாகிப் போகும். ஒரு வேலை செய்து பாதியில் இன்னொரு வேலையை ஆரம்பிப்பார். செல்பேசியில் வந்த ஒரு தகவலை சட்டைப் பையில் குத்தியிருந்த பேனாவால் குறிப்பெடுப்பதற்கு மூக்கு கண்ணாடியை அணிவார். பின்னர் மடிக்கணினியில் எதையோ அவசரமாகப் பார்ப்பார். சாவியை எடுத்து சூட்கேசைத் திறந்து அவர் கலந்து கொள்ளப் போகும் மாநாட்டின் நிகழ்ச்சிநிரலை ஆராய்வார். பின்னர் மூக்குக் கண்ணாடியையும் சாவிக்கொத்தையும் தேடுவார்.
இவர் என் வீட்டில் காலடி வைத்த மறு கணத்திலிருந்தே நான் அவர் சேவகனாக மாறிவிடுவேன். ஓர் இடத்திலிருந்து வேலை செய்யும் பழக்கம் அவரிடம் கிடையாது. சாப்பாட்டு மேசையில் வைத்துக் குறிப்புகள் எடுப்பார். அவருடைய சூட்கேஸ் படுக்கை அறையில் இருக்கும். செல்பேசியில் பேசும்போது நடந்து நடந்து ஓய்வெடுக்கும் அறைக்குள் போய்விடுவார். என்னுடைய வேலை அவருடைய பொருள்களைக் காபந்து பண்ணுவதுதான். அது தெரிந்தோ என்னவோ அவர் அவற்றைப்பற்றிக் கவலைப்படாமல் மிக அமைதியாகத் தன் வேலைகளைக் கவனிப்பார்.
நண்பர் மொன்றியலில் நடக்கும் உலகப் பொறியியலாளர் மாநாட்டுக்கு வந்திருந்தார். ரொறொன்ரோவிலிருந்து மொன்றியல் 500 கி.மீட்டர் தூரம். அவர் வாடகை கார்பிடித்து அங்கே போய் இரண்டு நாள் தங்கி மாநாட்டில் கலந்துவிட்டுத் திரும்ப வரப்போகிறார். ‘நீங்களும் வருகிறீர்களா?’ என்று கேட்டார். நான் என்ன சொல்லியிருக்கவேண்டும். மாட்டேன். அப்படிச் சொல்லவில்லை.
ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் அல்லவா? நானும் புறப்பட்டேன். மறக்கமுடியாத இரண்டு நாள்களாக அது அமைந்தது அப்படித்தான். நண்பரின் வேலையாளாக, காரியதரிசியாக, உதவியாளராக, எடுபிடியாக நான் செயல்பட்டேன். அந்த வேலையில்கூட எனக்கு வெற்றி கிடைக்காமல் அவர் பார்த்துக்கொண்டார்.
மொன்றியலுக்கு போகும் வழியில் நண்பர் காலைச் சாப்பாடு என்றார். ஒரு மணிநேரம் முன்புதான் அப்படி ஒன்றைச் சாப்பிட்டிருந்தோம். காரை நிறுத்தி உணவகம் ஒன்றில் மீண்டும் சாப்பிட்டுவிட்டு நெடுஞ்சாலையில் பயணித்தோம். 60 கி.மீட்டர் கடந்த பின்னர்தான் கடன் அட்டையை உணவகத்தில் விட்டுவிட்டது அவருக்த் தெரிந்தது. வந்தவழியே திரும்பவும் 60 கி.மீட்டர் பயணித்து கடன் அட்டையை மீட்கவேண்டியிருந்தது. ஹொட்டல் அறையில் தங்கியிருந்த ஒவ்வொரு பத்து நிமிடமும் நான் பதற்றத்தின் உச்சியில் இருந்தேன். ஹொட்டல் அறைக் கதவைத் திறக்கும் மின் அட்டையை அடிக்கடி மறந்துவிடுவார். ஹொட்டல் மனேஜர் வந்து திறந்துவிடுவார். இவருக்கு நினைவூட்டுவதும், இவர் தொலைப்பதை எடுத்துக்கொடுப்பதும், இருப்பதைத் தொலைக்காமல் பாதுக்காப்பதுமே என் முழுநேர வேலையாக மாறியது. மூக்குக்கண்ணாடியைக் கைமாறி வைப்பது இவருடைய பொழுதுபோக்கு. மூக்குக்கண்ணாடி மூக்கிலேயே இருக்கவேண்டியதுதானே. என்ன பிரச்சினை? அடிக்கடி கழற்றி வைப்பார். பின்னர் தேடுவார். நான் நினைவூட்டும்போது அவர் சொல்லும் வாசகம் ‘நான் 72 நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறேன்’ என்பது.
இவர் ஏதாவது பொருளை உங்களிடம் கடன் கேட்டால் அதை ஒருமுறை கடைசித் தடவையாக கண்டுகளித்துவிட்டு நீங்கள் கொடுத்தால் நல்லது. அது திரும்பி வரப்போவதில்லை. அதை பாவித்துவிட்டு அதே இடத்தில் விட்டுவிட்டு நகர்ந்துவிடுவார். நீங்கள்தான் தேடி எடுக்கவேண்டும். மொன்றியலில் இருந்த நாள்களில் இவர் காரிலிருந்து இறங்கியதும் கார் சாவியைப் பறித்து நான் வைத்துக்கொள்வேன். ஆரம்பத்தில் சாவியைத் தொலைப்பதும் தேடுவதுமாகவே இருந்தார். சாவியைக் கேட்டதும் எடுத்துக் கொடுப்பேன். பின்னர் பார்த்தால் அவரைச் சுற்றியிருக்கும் என்ன பொருள் தேவையென்றாலும் என்னைக் கேட்க ஆரம்பித்தார். ஆகவே இவருக்குப் பக்கத்தில் வீணே என் வயதை அதிகரித்தபடி எந்த நேரமும் நான் நிற்கவேண்டி நேர்ந்தது. மாநாட்டில் பேச அழைத்ததும் மேடையில் நின்றபடி இரவு முழுக்க தயாரித்த குறிப்புகளை சட்டைப் பையிலும், கால் சட்டையிலும், கோட்டுப் பைகளிலும் தேடினார். கிடைக்கவில்லை. ஆனால் அன்றைய அவருடைய பேச்சு தடங்கல் இல்லாமல் ஒரு சிறந்த பேச்சுக்கு உதாரணமாக அமைந்தது.
மாநாடு ஒருவாறாக முடிந்து ரொறொன்ரோ வந்த பின்னர்தான் அவருடைய செல்பேசி charger ஐ ஹொட்டலில் விட்டுவிட்டு வந்தது தெரிந்தது. ஒரு நாள் முழுக்க ரொறொன்ரோ கடைகளில் அலைந்து இன்னொன்று வாங்கவேண்டியிருந்தது. நண்பர் தன்னை செயல்திறன் மிக்கவராக நினைக்கிறார். இவருடைய நேரத்தில் பாதி நேரம் தொலைத்தவற்றை மீட்பதில் செலவாகுகிறது. ஆனால் அவர் அப்படி நினைக்கவில்லை. ஒரே சமயத்தில் தன்னால் பல காரியங்களை ஆற்றமுடியும் என்கிறார். பல பொருட்களை ஒரே நேரத்தில் தொலைப்பதைச் சொல்கிறாரோ தெரியாது. இவர் எப்படி தன்னுடைய கடவுச்சீட்டுகளையும், விமான டிக்கட்டுகளையும் செல்பேசியையும் மடிக்கணினியையும் தொலைக்காமல் வெற்றிகரமாகப் பயணம் செய்து திரும்புகிறார் என்பது என்னால் எப்பவுமே அவிழ்க்கமுடியாத புதிர்தான்.
இவர் மாத்திரமல்ல. நிறைய பயணம் செய்யும் மற்றவர்களிடமும் இதே குணம் இருப்பதை நான் அவதானித்திருக்கிறேன். எல்லாவற்றையும் தொலைப்பார்கள், ஆனால் எப்படியோ உலகத்தை சுற்றி வருவார்கள். அதிக எச்சரிக்கை அறிவு உள்ளவர் பயணம் செய்வதே கிடையாது. எனக்கு ஜெகன் என்று ஒரு நண்பர் இருக்கிறார். இவர் தண்ணீரில் கடந்த தூரம் நிலத்தில் கடந்த தூரத்திலும் பார்க்க அதிகம். மறதி மன்னர். உலகத்தின் பல பாகங்களுக்கும் சென்று தன்னுடைய கம்பனி விற்பனையை அதிகரிப்பது இவர் தொழில். ஒருமுறை சான்பிரான்சிஸ்கோவில் வாடகை காரை எடுத்து நீண்ட தூரம் பயணம் சென்றபோது காரிலே பெற்றோல் தீர்ந்ததால் எதிரில் வந்த நிலையத்தில் பெற்றோல் போட்டுக்கொண்டு காரை ஓட்டினார். ஆனால் பத்து மைல் தூரம் போவதற்குள் அவரை இரண்டு பொலீஸ்கார்கள் துரத்தின. இவர் காரை நிறுத்தினார். பார்த்தால் பெற்றோல் போட்ட இடத்தில் காசைக் கட்டிவிட்டு காரை எடுத்திருக்கிறார், ஆனால் பெற்றோல் போட்ட ட்யூபை அகற்ற மறந்துவிட்டார். பத்து மைல்தூரம் அதை அறுத்து ரோட்டில் இழுத்துக்கொண்டு காரை ஓட்டிய கதையை அவர்தான் சொன்னார்.
ஜெகனுடைய தந்திரம் எந்த நெருக்கடியான சந்தர்ப்பத்திலும் சமநிலை இழக்காமல், அமைதியாக இருப்பது. விமான நிலையத்தில் ஒரு மணிக்கு நிற்கவேண்டுமென்றால் இவர் மிகத்தாமதமாக ஆசுவாசமாக வெளிக்கிடுவார். அவரைச் சுற்றியிருப்பவர்கள் அந்தரப் படுவார்கள். பதகளிப்பார்கள். விமானம் தவறிவிடுமோ என்று தவிப்பார்கள். ஜெகன் அசையவே மாட்டார். அவர் செய்யும் காரியம் எல்லாம் பக்கத்திலிருப்பவரைப் பதற்றமடைய திட்டமிட்டுச் செய்வதுபோலவே இருக்கும். ஒரு சப்பாத்துக் கயிற்றைக் கட்டிவிட்டு மற்றதைக் கட்டாமல் உங்களுடன் பேசுவார். சாப்பாட்டுக் கரண்டியை வாய்க்கு கிட்ட கொண்டுபோவார், ஆனால் வாயை திறக்கமாட்டார். கார் சாவியை சாவி துவாரத்தினுள் நுழைப்பார், ஆனால் காரை கிளப்பமாட்டார். இவரைப் போன்றவர்களின் வெற்றியின் ரகஸ்யம் தங்கள் பதற்றத்தை மற்றவர்களுக்கு கடத்தி, தங்கள் பதற்றத்தை இல்லாமல் செய்வது என்றுதான் நினைக்கிறேன்.
அடிக்கடி பயணம் செய்பவர்களின் குணாம்சம் பொதுவானதாகவே இருக்கிறது. நேபாள நண்பர் போகும்போது நடந்ததையும் சொல்லிவிடுகிறேன். அவர் தன்னுடைய சாமான்களை எல்லாம் வீட்டின் பல பாகங்களிலுமிருந்து சேகரித்து சூட்கேசில் அடுக்கிப் பூட்டிய பிறகு, ஏதாவது தவறவிட்டிருப்பாரோ என்று பயந்து நான் மறுபடியும் வீட்டை சோதனை செய்தேன். நண்பர் சிரித்தபடி சொன்னார். ‘நான் சாமான்கள் அடுக்குவதில் திறமைசாலி. கொண்டுவந்த பொருட்களை திரும்ப ஒரு சூட்கேசில் போட்டு மூடுவதற்கு புத்திக்கூர்மை எண் ஐம்பது இருந்தாலே அதிகம். நண்பரே, பதற்றம் வேண்டாம். அமைதியாக இருங்கள். நான் 72 நாடுகள் பயணம் செய்திருக்கிறேன்.’ எப்படியோ அவரை விமான நிலையத்தில் கொண்டுபோய் ஏற்றிவிட்டு திரும்பவும் வீடு வந்து சேர்ந்தேன். பள்ளிக்கூடம் விட்டுப் பிள்ளைகள் எல்லாம் போனபிறகு காட்சியளிக்கும் வகுப்பறை போல வீடு வெறுமையாகவும் அமைதியாகவும் இருந்தது. என் நெஞ்சு படபடப்பு அடங்க ஒரு மணி நேரம் எடுத்தது. ஆனால் கதை முடியவில்லை என்பதை ஊகித்திருப்பீர்கள்.
நண்பரிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது. ‘அனைத்துலக பொறியியலாளர் மாநாட்டின் மலரை எங்கேயோ கைமாறி வைத்துவிட்டேன். அது மிகவும் முக்கியமானது. ரொறொன்ரோ தலைமையகத்துக்கு சென்று ஒரு மலரைப் பெற்று அதை உடனடியாக எனக்கு அனுப்பினால் நல்லது. நான் பயணத்திலிருக்கிறேன். 12 – 14ம் தேதிக்குள் எனக்கு கிடைக்குமென்றால் இந்த விலாசத்துக்கும், 15 – 18ம் தேதிக்குள் கிடைக்குமென்றால் இந்த விலாசத்துக்கும், 19ம் தேதிக்குப் பின்னர் என்றால் இந்த விலாசத்துக்கும் அனுப்பிவிடுங்கள்.’ இந்தக் குறுஞ்செய்தியை அவர் விமானத்தில் ஏறிய பின்னர் அனுப்பியிருந்தார்.
எனக்கும், உலகப் பொறியியலாளர் தலைமையகத்துக்கும், தபால் கந்தோருக்கும் பெரிய தலையிடியைக் கொடுத்துவிட்டு நண்பர் 35,000 அடி உயரத்தில் அமைதியாகப் பறந்துகொண்டிருந்தார். விமானத்தின் முதல் வகுப்பு இருக்கையைப் பின்னால் நல்லாய் சாய்த்துவிட்டு, திரையில் ஓடும் படத்தைப் பார்த்தபடி, கால்களை நீட்டி, வெள்ளை வைன் அருந்தியவாறு அவருடைய பொழுது ஆனந்தமாய்ப் போய்க்கொண்டிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக