சனி, 27 நவம்பர், 2010

கூட்டணி உண்டா... இல்லையா?’ முதல்வரின் பேச்சு டெல்லி தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது

நாங்கள் திட்டவட்டமாக, தெளிவாக இருப்பதற்கு எங்களுக்கு தயவு செய்து வழிவிடுங்கள்.’’

-முதல்வர் கருணாநிதி கடந்த புதனன்று சென்னையில் நடந்த வேளாண் கருத்தரங்க அலுவலர் மாநாட்டில் சொன்ன வார்த்தைகள்,அரசியல் அரங்கில் ஏகப்பட்ட அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சி தலைமைக்கு ‘கூட்டணி உண்டா... இல்லையா?’ என்று தனது இறுதிக் கேள்வியைக் கேட்டுள்ளார் முதல்வர்.

காங்கிரஸ் தலைவர்களைத் தாக்கிப் பேசிய பேச்சாளரை கட்சியில் இருந்து நீக்கினார். ஆனால், தொடர்ந்து தி.மு.க.வை விமர்சித்து வந்த இளங்கோவன்,யுவராஜ் மீது இதுவரை காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. கூப்பிட்டு கண்டிக்கக்கூட இல்லை. இந்த நிலையில், முதல்வர் பேசியிருப்பது கவனிக்கத்தக்கது.

கருணாநிதி திடீரென இப்படிப் பேச என்ன காரணம்? இதுவரை அமைதி காத்த அவர், பீகார் தேர்தல் முடிவுகள் வந்த நேரத்தில் பேசியிருப்பது யோசிக்க வேண்டிய விஷயம்.

கடந்த அக்டோபர் 2-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளையில்இருந்து இளைஞர்காங்கிரஸார் பாதயாத்திரையைத் தொடங்கினர்.

இதில் பங்கேற்ற இளைஞர்கள் வரும்வழியில் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் எப்படி செயல்படுகிறது என்று பார்த்து வந்தனர். 108 ஆம்புலன்ஸ், இந்திரா காந்தி வீட்டுவசதித் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை எடுத்துக் கூறியதுடன், மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் பங்களிப்பு குறித்து விளக்கம் கொடுத்து வந்தனர்.

‘துணை முதல்வர், பத்து அமைச்சர் பதவி வேண்டும். மாநில அமைச்சர்களின் சொத்துப்பட்டியலை இணையதளத்தில் வெளியிட வேண்டும்’என்று தி.மு.க.அரசை கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர்.

இளைஞர் காங்கிரஸாரின் இந்த செயலால்,கோபம் வந்தாலும் வெளிக்காட்ட முடியாமல் தவித்தது தி.மு.க.

இதற்கிடையில், திருச்சியில் நடந்த காங்கிரஸ் முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட சோனியா காந்தியை விமான நிலையத்துக்குச் சென்று சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் கருணாநிதி. ராசா விவகாரத்தில் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்து ஜெயலலிதா அளித்த பேட்டியும் தி.மு.க.வின் தூக்கத்தைக் கலைத்தது.

மெல்லவும் முடியாமல்,விழுங்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்த தி.மு.க.வுக்கு பீகார் தேர்தல் முடிவுகள் ‘ஹார்லிக்ஸ்’ குடித்தது போல் அமைந்துவிட்டது.

பீகார் தேர்தலில் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று காங்கிரஸ் அதிர்ச்சியில் இருக்க..தி.மு.க தரப்போ...உற்சாகமானது.

இந்தத் தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் தலைவர்களிடம் பேசியபோது, ‘ராகுல் ஃபார்முலாவினால், பீகாரில் குறைந்தது 25 முதல் 30 சீட்டுகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தோம். அந்த வெற்றியின் அடிப்படையில் தமிழகத்திலும் ராகுல் ஒரு ஃபார்முலாவை கடைப்பிடிக்க இருந்தார்.

குறிப்பாக, கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத காங்கிரஸை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த திராவிட கட்சிகளுக்கு எதிராக மூன்றாவது அணியை 2011 தேர்தலில் களம் இறக்குவதுதான் ராகுலின் திட்டமாக இருந்தது. இதன் அடிப்படையில்தான், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, சில மாதங்களுக்கு முன்பு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், பீகார் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சியில் இருந்து ராகுல் உட்பட காங்கிரஸார் எவரும் மீளவில்லை. இதனால், ‘யுவபாத்’ நிறைவு விழாவிற்கு ராகுல், அகில இந்திய செயலாளர்கள் யாரும் வரவில்லை.ஒப்புக்காக மத்திய இணை அமைச்சர் அருண் யாதவ் வந்திருந்தார். இந்த யாத்திரை கோயம்பேட்டில் இருந்து அண்ணாநகர், நெல்சன்மாணிக்கம் ரோடு வழியாக காமராஜர் அரங்கம் வருவதாக திட்டமிட்டிருந்தனர்.நான்கு மணிக்கு நிகழ்ச்சிகள் நடக்கும் என்று சொல்லப்பட்டிருந்தது.

அண்ணா மேம்பாலம் கீழே அமைக்கப்பட்டிருந்த செம்மொழிப் பூங்கா திறப்பு மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் வேளாண் கருத்தரங்கம் மற்றும் அலுவலர் மாநாட்டில் முதல்வர் பங்கேற்பதால், இளைஞர் காங்கிரஸுக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டது.

அத்துமீறி நகருக்குள் பிரவேசிப்போம் என்று பதிலடி தந்தனர் இளைஞர் காங்கிரஸார். வேறு வழியின்றி அனுமதி தரப்பட்டது.

அதேநாள்... அதே நேரம்.. கருணாநிதியின் இரண்டு நிகழ்ச்சிகள் நடக்க இருந்ததால் இளைஞர் காங்கிரஸார் நடைபயணத்தை வேகமாக முடிக்க வேண்டும் என்று போலீஸார் கூறினர். ஆனால், அதற்கு இளைஞர் காங்கிரஸார், ‘நாங்கள் காரில் செல்லவில்லை. நடந்துதான் செல்கிறோம்.

காமராஜர் அரங்கிற்குச் சென்ற பிறகுதான் நாங்கள் நிகழ்ச்சியைத் தொடங்க முடியும். முதல்வரை வேண்டுமானால் நேரத்தை மாற்றிக் கொள்ளச் சொல்லுங்கள்’ என்று ஆவேசப்பட்டனர். அதோடு விழாவில் பேசிய யுவராஜ், ‘ராசா மீது தி.மு.க. நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று பேசினார்.இத்தகவல் உளவுத்துறை மூலம் கருணாநிதி காதில் ஊதப்பட்டது.

இதனால்தான் கோபத்தின் உச்சிக்குச் சென்றார் முதல்வர். ஏற்கெனவே இளைஞர் காங்கிரஸின் பிரசாரத்தால் கொதித்துபோய் இருந்த முதல்வரின் கோபம் காட்டாற்று வெள்ளம்போல பீரிட்டு வந்தது.

செம்மொழிப் பூங்கா திறப்பு விழாவிற்கு நான்கு மணிக்கு முதல்வர் வருவதாக இருந்தது. ஆனால் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தார், முதல்வர்.வந்ததும் பூங்காவைத் திறந்து வைத்துவிட்டு சுற்றிப் பார்க்காமல் விழாவுக்குப் போய்விட்டார்.

‘‘எட்டடி பாய்ந்தால், நாங்கள் பதினாறடி பாய்வோம். நான் கணக்கில் அவ்வளவு முட்டாள் அல்ல.அந்த எட்டடியோடு சேர்த்துதான் பதினாறு என்று நான் சொல்கிறேன். நாங்கள் தனியாக பதினாறு அடி பாயவேண்டும் என்று விரும்பவில்லை. சேர்ந்தே பதினாறு அடி பாய்வோம் என்றுதான் அவர்களை நம்பி சேர்ந்தே இருக்கிறோம்.

‘சேர்ந்தே இருப்பது தீது’ என்றால் சொல்லுங்கள்... யோசிக்கிறோம்’’ என்று ஆவேசமாகப் பொரிந்து தள்ளினார் முதல்வர்.

இது குறித்து தி.மு.க. எம்.பி.யும் அமைப்பு செயலாளருமான டி.கே.எஸ். இளங்கோவனிடம் பேசியபோது, ‘‘சிலர் தவறான தகவல்களை திரும்பத் திரும்ப சொல்லி வந்ததால் அவர்களை எச்சரிக்கவே, முதல்வர் அப்படிப் பேசினார். பீகார் தேர்தல் முடிவுகள், தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தி.மு.க. நம்பவில்லை. காங்கிரஸார் மிகுந்த ஆசையில் இருந்தனர். அதில் மண் விழுந்துவிட்டது’’ என்றார்.

ஜி.கே.வாசன் ஆதரவாளரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான கோபண்ணாவிடம் பேசியபோது,‘‘மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசுதான் செயல்படுத்தி வருகிறது. எனவே, இது மத்திய அரசு திட்டம்,மாநில அரசு திட்டம் என்று யாரும் பிரித்துப் பார்க்கக்கூடாது. முதல்வர் சரியாகத் தான் பேசியுள்ளார். பீகார் தேர்தல் முடிவை வைத்து அவர் அப்படிப் பேசியதாக நான் கருதவில்லை’’ என்றார்.

‘முதல்வரின் பேச்சு டெல்லி தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.ஜெயலலிதாவின் அழைப்பை காங்கிரஸ் ஏற்கவில்லை. இப்போது தி.மு.க.வை விட்டால் காங்கிரஸுக்கு வேறு வழியில்லை. தி.மு.க.கொடுப்பதைப் பெற்றுக் கொண்டு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க. நினைக்கிறது. ஆனால், காங்கிரஸ் வேறு மாதிரி ரியாக்ட் பண்ண ஆரம்பித்துள்ளது. விரைவில் அது தெரியவரும்’ என்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர்.

‘‘காங்கிரஸ் உறவு வேண்டுமா என்று கலைஞரே முடிவு செய்யட்டும்’’

- இளங்கோவன் பதிலடி காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் பேசினோம்.

‘‘பீகார் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு முதல்வர் என்னவெல்லாமோ பேசியிருக்கிறார்.தமிழக அரசியல் வரலாற்றை ஒருமுறை திருப்பிப் பார்த்தால் அவருக்கே தெரியும்.ஒரு தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற கட்சி 6 மாதங்களுக்குப் பிறகு மற்றொரு தேர்தலில் காணாமல் போயிருக்கிறது.தோல்வி அடைந்த கட்சி மீண்டும் வெற்றி பெற்ற வரலாறும் உண்டு என்பதை அவர் மறந்துவிடக் கூடாது. அவருடைய பேச்சில் அரசு,சிற்றரசு,பேரரசு என்றெல்லாம் தன் மங்காத சொல்லாற்றலைக் காட்டி உள்ளார்.

தனித் தமிழ்நாடு, திராவிட நாடு என்றெல்லாம் நினைவு கூர்ந்துள்ளார். அவர் எதை நோக்கிச் செல்கிறார் என்பதை அவரைப் பற்றி முழுமையாகப் புரிந்தவர்கள்தான் உணரமுடியும்.‘மத்திய அரசின் திட்டங்கள் என்றெல்லாம் ஏன் வேறுபாடு’ என்று கேள்வி கேட்கிறார்.

துணை முதல்வர் ஸ்டாலின் மகளிர் சுயஉதவிக் குழுக்களை தாங்கள் தான் உருவாக்கினோம், ‘99மணிநேரம் நின்று கொண்டே சுழல்நிதி கொடுத்தோம்’ என்றெல்லாம் சொல்கிறார். அந்தச் சுழல் நிதி வழங்குவது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளால்தான். அப்படியென்றால் மத்திய அரசின் உதவியும் இதிலிருக்கு என்பதை ஒருவரிகூட சொல்வதில்லையே ஏன்?

சில விஜயங்களை மறைத்து உங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்கிறீர்கள்.அதை நாங்கள் சுட்டிக் காட்டினால்,தட்டிக்கேட்டால் உங்களுக்குக் கோபம் வருகிறது. இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? இப்போது உறவு வேண்டுமா? வேண்டாமா? என்று கேள்வி எழுப்புகிறீர்கள். அந்த முடிவை எடுக்க வேண்டிய இடத்தில் இருப்பவர் நீங்கள்தான். காங்கிரஸ்காரர்கள் யாருடைய உறவுக்காகவும் என்றைக்கும் ஏங்கியது இல்லை. உதவி கேட்டு யார் கதவையும் தட்டியதும் இல்லை’’ என்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக