சனி, 27 நவம்பர், 2010

தயாளுவுக்கு 600 கோடி ரூபாயை மாறன் கொடுத்ததாக நம்புகிறேன்...''

ஆ.ராசா தொடங்கி... அத்துறையில் முக்கியப் பதவிகளை வகித்த அதிகாரிகள் வரை வரிசையாகப் பட்டியல் எடுத்து... அவர்களின் ஜாதகங்களை சி.பி.ஐ. அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறது. 2008-10 இடைப்பட்ட காலகட்டத்தில் இத்துறைக்குள் துள்ளி நுழைந்த திடீர் கம்பெனிகள், அதிரடிப் பணக்காரர்கள், இவர்கள் வாங்கிப் போட்ட சொத்துகள் போன்ற விவரங்களும் திரட்டப்படுகின்றன. சி.பி.ஐ-யின் குற்றப்பத்திரிகை தயாராகி, கைதுப் படலம் ஆரம்பமாகும்போது, சென்னை - திருச்சி மார்க்கமாக, மும்பை வழியாகப் போய் அது டெல்லியைத் தொடலாம் என்கிறார்கள்.

''சி.பி.ஐ-யின் குற்றப்பத்திரிகைக்கு லட்டு மாதிரி கிடைத்திருக்கும் டேப் ஆதாரம்தான் கடந்த சனி, ஞாயிறு கிழமைகளில் தி.மு.க மேலிடம் வரை பரபரப் பாக அலசப்பட்டது...'' என்கிறார்கள் உள்விஷயம் அறிந்த வர்கள்.



கடந்த 2009-ம் ஆண்டு மே மாதத்தின் இறுதியில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு பொறுப்பேற்கும்போது தி.மு.க. தனக்குத் தேவையான துறைகளைக் கைப்பற்றத் துடித்த நிகழ்வுகள் அனைவரும் அறிந்ததுதான். டெல்லிக்குப் பயணம் போன முதல்வர் கருணாநிதி, ஒரு வார காலம் அங்கேயே தங்கியிருந்தார். மத்திய தொலைத் தொடர்புத் துறை தனக்குத்தான் வேண்டும் என்று கோரிக்கை வைத்த தயாநிதிமாறனுக்கு அது தரப்படவில்லை. மாறாக ஆ.ராசாவுக்கே அத்துறை வாங்கித் தரப்பட்டது.

தன்னுடைய கட்சிக்கு எந்தெந்தத் துறைகளை வாங்குவது என்பதும்... அவற்றை யாருக்குத் தருவதுஎன்பதும் கட்சித் தலைமையின் தனிப்பட்ட உரிமை. ஆனால், மீடியாக் களில் பரப்பப்படும் தொலைபேசி உரையாடல்கள் நிஜமாக இருக்கும்பட்சத்தில்... தி.மு.க-வின் தலைவரையும் தாண்டி 'ஒரு அதிகார மையம்' இருந்து கொண்டு இலாகா ஒதுக்கீட்டை தீர்மானித்திருக்கிறது என்பது உறுதியாகி விடும்.

டெல்லியில் பிரபலமான பவர் புரோக்கர்களில் மிக முக்கியமானவர் நீரா ராடியா. பெரும் முதலாளிகள், கம்பெனிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் இவர் களுடன் வலியப் போய் நட்பை ஏற்படுத்திக் கொண்டு, இடைத் தரகு செய்து, வேலைகளை முடித்துக் கொடுக்கும் 'லாபியிஸ்ட்'டாகவே நீரா ராடியா இப்போதும் வலம் வருகிறார். சாதாரண எம்.பி-க்கள் முதல் பிரதமர் அலுவலகம் மற்றும் சோனியா வீடு வரை இவருக்கு சொந்தங்கள் உண்டு என்கின்றன டெல்லி வட்டாரங்கள். யாருக்கு மந்திரி பதவி, எந்தத் துறைக்கு எவர் மந்திரி என்று டெல்லி தமிழ்நாடு ஹவுஸில் கருணாநிதி மண்டையை உடைத்துக் கொண்டிருந்தபோது, 'ஆ.ராசாதான் தொலைத் தொடர்புத் துறை மந்திரி' என்று உறுதிபட போனில் தகவல் சொல்கிறது நீரா ராடியாவின் குரல்! தயாநிதிமாறன் கைக்கு அந்தத் துறை வந்துவிடக் கூடாது என்று நீரா ராடியாவும் துடித்திருக்கிறார்.

இப்படிச் சொல்லவைக்கும் ஒன்றரை மணி நேர டேப் ஒன்றில் இருப்பவை நீரா ராடியா, ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோரின் தொலைபேசிப் பரிவர்த்தனைகள்தான் என்பது மீடியாக்களில் வந்த தகவல். டெல்லி சேனலின் பவர்ஃபுல் பத்திரிகையாளர் பர்க்கா தத் என்பவர் பேசியதாகவும் சில பதிவுகள் காட்டப்படுகின்றன.

இது தொடர்பான விவரங்கள் 12.05.2010 தேதியிட்ட ஜூ.வி-யிலும் வெளி யாகி இருந்தது. ஆனால், அப்போது வெளியில் கசிந்தது சில நிமிடம் ஓடிய டேப்தான். ஆனால், இப்போது வடக்கு மீடியாவில் அதுவே முழுமையாக வெளிவர ஆரம்பித்துள்ளது. ''வருமான வரி ஏய்ப்பு தொடர்பான விசாரணை அதிகாரிகள் ரகசியமாக சில தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பார்கள். தொழி லதிபர்களோடு தொடர்புடையவர் என்பதால், நீரா ராடியாவின் போன் டேப் செய்யப்பட்டுள்ளது!'' என்கிறார்கள் டெல்லியில்.

தனியார் இணையதளம் ஒன்றில் இந்த உரையாடல் வெளியாகி... டி.வி-க்களும் கடந்த வெள்ளிக்கிழமை இதை கபளீகரம் செய்யத் துவங்கின! விவரங்களை அறிந்தபோது முதல்வர் கருணாநிதி அதிர்ச்சி அடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு முந்தைய நாள்தான் மதுரை திருமண விழாவில் பேசிய பிரணாப் முகர்ஜி, ''தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது!'' என்று சொன்ன வார்த்தைகளில் தெம்பாகியிருந்தார் கருணாநிதி! இந்த முழுநீள டேப் விவகாரம் அவர் மகிழ்ச்சியை மறுபடி சிதைத்துவிட்டது என்கிறார்கள்.

இது பற்றி கனிமொழியிடம் கருணாநிதி கோபப்பட்டுக் கேட்டதாகவும் தி.மு.க. வட்டாரத்தில் செய்திகள் உலவுகின்றன. இதுபற்றிச் சொல்பவர்கள், ''அப்படிக் கனிமொழியிடம் தலைவர் கேட்டதைத் தொடர்ந்து, 'இப்படியெல்லாம் நியூஸ் வெளியே வந்ததுக்குக் காரணமே தயாநிதி மாறன்தான்' என்று தலைவரிடம் சிலர் சொல்லிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், தலைவரோ அவசரப்பட்டு இதை நம்பி இன்னுமொரு குடும்பச் சண்டைக்கு கால் கோள் விழா நடத்தத் தயாராக இல்லை. எனவே, தயாநிதிமாறனையே அழைத்துப் பேசியிருக்கிறார். எதற்கு அழைப்பு என்று புரிந்து, இந்த டேப் ஆதாரத்தில் உள்ள பேச்சுகள் அத்தனையையும் வரிக்கு வரி தமிழில் மொழிபெயர்ப்பு செய்து எடுத்துச் சென்றிருக்கிறார் தயாநிதிமாறன். இதில் நீரா ராடியாவுடன் ஆ.ராசா, கனிமொழி, பத்திரிகையாளர்கள் வீர்சங்வி, பர்கா தத் ஆகியோர் பேசியதாகக் கூறப்படும் விவரங்கள் தெளிவாக வரிசைப்படுத்தப்பட்டு இருந்ததாம்...'' என்று கூறுகிறார்கள்.

ஆ.ராசா, கனிமொழி, பர்கா தத் ஆகிய மூவரும் 22.5.2009-ம் தேதியன்று காலையில் பேசியதாகச் சொல்லப்படும் விஷயங்கள் பற்றியே தயாநிதி மாறன் முழுமையாக டைப் செய்து கொண்டு போயிருந்தாராம். அன்றைய தினம் கருணாநிதி டெல்லியில்தான் இருந்தார். இன்னும் யாருக்கு எந்தத் துறை என்று ஒதுக்கப்படாத நேரம் அது. அந்தத் தருணத்தில்தான் தொலைத் தொடர்புத் துறை ஆ.ராசாவுக்கே என்று வாக்குறுதி தருகிறது நீரா ராடியாவின் குரல்.

இந்த டேப் உரையாடல், மீடியாவிலிருந்து மறு முறை பதிவு செய்யப்பட்டு முதல்வருக்கு போட்டுக் காண்பிக்கப் பட்டதாகவும், ஆனால் அதில் சில இடங்கள் முழுமையாக இருக்காது என்று தெரிந்தே தயாநிதிமாறன் அதன் தமிழ் மொழிபெயர்ப்பை எடுத்துச் சென்று காட்டியதாகவும் சிலர் சொல்கிறார்கள். அவருடன் கருணாநிதியின் மகள் செல்வியும் உடனிருந்ததாகக் கூறப்படுகிறது.

''சுமார் 35 நிமிடம் எடுத்துக்கொண்டு இந்த உரையாடல் களை கருணாநிதி உன்னிப்பாகப் படித்துப் பார்த்தார். 'இதை முழுசா படிச்சுட்டு யாரு மேல தப்புன்னு தீர்ப்பு சொல்லுங்கப்பா!' என்று செல்வி சொல்லியிருக்கிறார். படித்து முடித்த கருணாநிதி, 'இதுக்கு என்ன தீர்ப்பை என்னால சொல்லமுடியும்?' என்று கம்மிய வார்த்தைகளில் மறுக... 'இல்லப்பா... எப்படியெல்லாம் நடந்திருக்குன்னு பாருங்க. உங்களை மீறி நடந்துகொள்வது யாருனு நீங்களே பாருங்க...' என்று சொன்னாராம் செல்வி.

'யாரும்மா இந்தப் பெண்மணி... இவங்க நினைச்சா என்ன பதவியும் வாங்கித் தரமுடியுமா?' என்று கேட்ட கருணாநிதி, 'மொத்தத்தில் நீங்க யாருமே என்னை நம்பல. இந்தப் பெண்ணையும் வேற யார் யாரையோவும்தான் நம்புறீங்க...' என்று பொதுவாகச் சொல்லிக் கண் கலங்கி விட்டாராம்!

இப்படியெல்லாம் தற்போது பரவிக் கிடக்கிறது தி.மு.க-வின் முக்கிய வட்டாரங்களில்! நீரா ராடியாவுக்கும் பத்திரிகையாளர் வீர் சங்வீக்கும் நடந்ததாகச் சொல் லப்படும் உரையாடலில் வேறொரு விஷயமும்வருகிறது. ''மாறனுக்கு பதவி தரவேண்டும் என்ற நிர்பந்தம் எங்கிருந்து வருகிறது?'' என்று சங்வீயின் குரல் கேட்பதாகவும்... அதற்கு நீராவின் குரல், ''ஸ்டாலினும் அவரது சகோதரி செல்வியும் தான்... ஏனென்றால் ஸ்டாலினுடைய அம்மா தயாளுவுக்கு 600 கோடி ரூபாயை மாறன் கொடுத்ததாக நம்புகிறேன்...'' என்று கூறுவது போலவும் அந்த டேப்பில் வருகிறது!

இதை இந்தப் பேச்சுவார்த்தையின்போது கருணாநிதியிடம் தயாநிதிமாறன்சுட்டிக் காட்டியதாகச் சொல்கிறார்கள். ''பாட் டிக்கு (அதாவது தயாளுவுக்கு!) நான் பணம் கொடுத்துதான் இந்த பதவியை வாங்கினேன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்? என்னைக் கேவலப்படுத்துவதாக நினைத்து கட்சியையும் உங்களையும் கேவலப்படுத்துறது யாரு? இவங்களுக்கு யாரு இப்படியரு பொய்யான தகவலைச் சொல்லியிருக்க முடியும்?'' என்பது போன்ற அர்த்தத்தில் தயாநிதிமாறன் தரப்பிலிருந்து முறையீடு செய்யப்பட்டதாகவும்கூட சொல்கிறார்கள்.

தன்னைப் பற்றியும் அழகிரி குறித்தும் அடிக்கப்பட்டதாக அந்த டேப்பில் உள்ள கமென்ட்கள் கருணாநிதியை ரொம்பவே வருத்தமடைய வைத்துள்ளதாம். ஸ்பெக்ட்ரம் தொடர்பாக, தான் வெளியிட்ட அறிக்கையில் பயன் படுத்திய சில புகழ்ச்சியான வார்த்தைகளைக் குறிப்பிட்டு, ''இதையெல்லாம் நான் எழுதியிருக்கக் கூடாது...'' என்று சொல்லிக் கொண்டாராம்.

''எவ்வளவு சாதனைகள், எவ்வளவு திட்டங்கள் போட் டோம்! எந்தப் பிரச்னையும் வந்ததில்லை... எதிர்க்கட்சிகள் ஆயிரம் சொன்னாலும் மாநிலத்தில் நமக்கு மக்கள் ஆதரவு குறையலை. இங்கே நாம் செஞ்ச எல்லா சாதனையும் வேஸ்ட் என்கிற மாதிரியில்லே டெல்லி மீடியாக்கள் தகவல்களைக் கசிய விடுது!'' என்பதே கட்சித் தலைமையின் முக்கிய வருத்தமாக அமைந்துள்ளது என்றும் கூறுகிறார்கள்.

மாவட்டம்தோறும் அமைக்கப்பட்ட தேர்தல் பணிக் குழுச் செயலாளர்களை, அடுத்த நாள் சனிக்கிழமையன்று மதியம் அறிவாலயத்தில் ஒன்று கூட்டும்படி துணை முதல்வர் ஸ்டாலினிடம் சொல்லியிருந்தாராம் கருணா நிதி. ''உரிய ஆலோசனைகள் பெற்று அவர்கள் உடனடியாக களப் பணி தொடங்கட்டும்...'' என்றும் சொல்லியிருந்தாராம். ஆனால், ஏனோ அவருக்கே உற்சாக மனநிலை அன்று மாலை வரை ஏற்படவில்லை. ஆலோசனைக் கூட்டம் கருணாநிதி இல்லாமலேயே நடந்து முடிந்திருக்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக