ஞாயிறு, 28 நவம்பர், 2010

மேஜர் ஜெனரல் சந்திரசிறி யாழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். டக்ளஸ்

இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணா யாழ் மக்களுக்கு டக்டர் வண்டிகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் தேவானந்தா அங்கு அதியாக கலந்திருந்த வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி தமிழ் மக்களுக்கு கிடைத்ததோர் வரப்பிரசாதம் என புகழாரம் சூட்டிள்ளார்.

மேலும் அமைச்சர் அங்கு வந்திருந்த பிரமுகர்களை இவ்வாறு புகழ்ந்தார். இந்த நிகழ்வில் எமது அயலுலக நட்பு நாடாகிய இந்தியாவின் பிரதமர் கௌரவ திரு மன்மோகன் சிங் அவர்களின் நல்லெண்ண தூதுவனாக எஸ். எம் கிருஸ்ணா அவர்கள் வருகை தந்திருக்கின்றார். இலங்கை இந்திய ஒப்பந்த காலத்தின் ஆரம்பங்களில் இந்தியாவில் இருந்து சமாதான தூதுவனாக வந்திருந்தவர் திரு பார்த்தசாரதி அவர்கள். அப்போது எமது மக்கள் கீதை சொன்ன கண்ணன் வண்ண தேரில் வருகிறான் போன்ற பக்தி பாடல்களை எங்கள் தேசமெங்கும் இசைக்க விட்டு மகிழ்ச்சி ஆரவாரத்தோடு அதை வரவேற்றிருந்தனர். அது போலவே, இன்றும் இந்தியாவில் இருந்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் தூதுவனாக எம்மை நாடி வந்திருக்கிறார் எஸ்.எம்கிருஸ்ணா அவர்கள். உலகத்தின் ஒளியாகவும், சமாதான தூதுவனாகவும் யேசு பிரான் அவதரித்த நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நீதிக்காகவும், தர்மத்திற்காகவும் உபதேசம் செய்த கிருஸ்ண பரமாத்மாவின் வடிவமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம்.கிருஸ்ணா அவர்கள் இங்கு வருகை தந்திருக்கின்றார். அவரை ஈழத்தமிழர்கள் சார்பாகவும், எமது அரசாங்கத்தின் சார்பாகவும் நான் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன்.

அது மட்டுமன்றி. எமது மக்களுக்காக இனி வரப்போகின்ற அரசியலுரிமை சுதந்திரத்திற்காகவும், அழிந்து போன எமது தேசத்தை மறுபடியும் கட்டி எழுப்பும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் இன்னொரு வடிவமாகவும், அவரது பிரதிநிதியாகவும் எமது நண்பர் பசில் ராஜபக்ச அவர்கள் இங்கு வந்திருக்கின்றார்.

எப்போதுமே எம்மோடு ஒத்துழைத்து வட பகுதி மக்களின் துயரங்களோடும் துன்பங்களோடும் பங்கெடுப்பதோடு மட்டுமன்றி எமது மக்களுக்காக முன்னெடுத்து வருகின்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக இருப்பவரும், வட பகுதி மக்களுக்கு கிடைத்த மாபெரும் வரப்பிரசாதமாக திகழ்பவருமான வட மாகாண ஆளுநர் சந்திரசிறி அவர்கள் இங்கு வந்திருக்கின்றார்.

துணிச்சலான பெண்மணிகளாக எம்மோடு சேர்ந்து யாழ் மாவட்ட அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டு வரும் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் அவர்கள், மற்றும் எமது யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா அவர்கள், எமது சக பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று மக்களாகிய உங்களுக்கு நம்பிக்கை தரும் சகலரும் இங்கு வந்திருக்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக