கொழும்பில் வரதராஜபெருமாளுக்கு அரசாங்கம் வீடு ஒன்றை வழங்கியிருப்பதாக சிங்கள இணையத் தளம் ஒன்றில் வெளியான செய்தியென குறிப்பிட்டு வலம்புரி பத்திரிகையின் முன்பக்கத்தில் நேற்று (17.11.2010) வெளியிடப்பட்ட செய்தி உண்மையில்லை.
அச் செய்தியில் குறிப்பிட்ட சமிட் தொடர்மாடியில் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் இரண்டு அறைகள் மட்டும் உள்ள குடியிருப்பு ஒன்று எமது பயன்பாட்டில் உள்ளது. கடந்த காலத்தில் சுதந்திரமாக செயற்படுவதில் எமது கட்சிக்கிருந்த புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக, முன்னாள் முதல்வர் வரதராஜப்பெருமாளும் அவர் இல்லாத சமயங்களில் இதர முக்கிய தோழர்களும் இங்கு தங்குவது வழமை.. இது ஒன்றும் இரகசியமானதல்ல. இங்கு பல ஊடகவியலாளர்களும், இதர தமிழ், சிங்கள முஸ்லிம், மலையக கட்சிகளை சேர்ந்தவர்களும், அவசர, அவசிய தேவைகளின் நிமித்தம் பொதுமக்களும் கூட இங்கு வந்து சென்றிருக்கின்றனர். பாதுகாப்பின் நிமி;த்தம் பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் அரசாங்க அதிகாரிகள் இந்த பிரதேசத்தில் தங்கியிருப்பதும் ஒன்றும் புதுமையான விடயம் இல்லை.
ஆனாலும், குறித்த செய்தி எழுதியவர்களின் உள்நோக்கம் தெரியாததல்ல. பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இன் சர்வதேச பிராந்திய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரான்ஸ் சென்றிருந்த அண்மையில் முன்னாள் முதல்வரும் கட்சியின் மூத்த தலைவருமான வரதராஜப்பெருமாள் சுவிற்சர்லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்தது அங்குள்ள தோழர்கள், நண்பர்கள், பொதுமக்களுடனான பல சந்திப்புக்களையம், அரசிற் கலந்துரையாடல்களையும் நடாத்தியிருந்தார். அத்துடன் கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த தோழர்கள், நண்பர்களும் அவருடன் சந்தித்து கருத்துப்பரிமாறிக்கொண்டனர். இந்த சந்திப்புக்கள், கலந்துரையாடல்களின் போது அவர் எமது போராட்டத்தில் ஏற்பட்ட தவறுகள், எமது கோரிக்கைகள், எமது இன்றைய நிலை, எதிர்காலத்தில் நாம் செயற்பட வேண்டிய முறை என்பன குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டார். இக்கருத்துக்கள் கண்மூடித்தனமாக அரசாங்கத்தை ஆதரிப்பதாகவோ, தமிழ் மக்களின் கோரிக்கைகளை புறக்கணிப்பதாகவோ இருக்கவில்லை இது தொடர்பான செய்திகள் பல்வேறு இலத்திரனியல், அச்சு ஊடகங்களில் ஏற்கனவே வெளியாகியுள்ளன. ஆனால், அவரது இந்தக் கருத்துக்களை கொச்சைப்படுத்துவதே இச் செய்தியை உற்பத்தி செய்தவர்களின் கபட நோக்கமாகும். கருத்து ர்Pதியாக அவரது கருத்துக்களை எதிர்கொள்ள முடியாதவர்கள் அவரை அவதூறு செய்து அவரது கருத்துக்களை மதிப்பிழக்கச் செய்ய முனைந்திருக்கிறார்கள்.
எனவே தான் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்கு வரதராஜப்பெருமாளுக்கு அரசாங்கம் கொழும்பில் வீடு ஒன்றை வழங்கியிருக்கின்றது என்ற சோடிப்பை, சேறடிப்பை செய்திருக்கிறார்கள்.
இந்த செய்தியை கோர்த்து வெளியிட்டிருந்த தமிழ் இணையத்தளம் கடந்த காலத்தில் ஏகபிரதிநிதித்துவத்திற்கு ஆதரவாக செயற்பட்டதுடன் அனைத்து ஜனநாயக விரோத செயற்பாடுகளையம் நியாயப்படுத்தியும் வந்தது. ஏகபிரதிநிதித்துவத்திற்கு எதிரானவர்களை துணைப்படைகள் என்றும் துரோகிகள் என்றும் தூற்றியும் வந்த ஒன்றாகும். இவர்களுக்கு தோழர் வரதராஜப்பெருமாள் என்ற பெயரும், அவரது கருத்துக்களும் உவப்பானதாக இருக்க நியாயமில்லை. ஆனால், இவர்களின் சோடிப்புக்களும், திரிப்புக்களும் தமிழ் மக்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்த பின்னரும் அவர்கள் இவற்றை கைவிடுவதாக இல்லை என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
வலம்புரியும் இந்த வலையில் சிக்கி தனது நம்பகத் தன்மையை குறைவு படுத்தியிருக்கின்றது. தனி நபர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி அவர்களின் கருத்துக்களை சிறுமைப்படுத்தும், உதாசீனம் செய்யும் போக்குக்கு அறியாமல், துணை செய்திருக்கின்றது. இதனால் ஏற்படுத்தப்பட்ட தப்பபிப்பிராயத்தை போக்கும் வகையில் குறித்த செய்திக்கு வழங்கிய முக்கியத்துவத்தை இந்த மறுப்புக்கும் வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
மோகன் சிவராஜா
யாழ் பிராந்திய செயலாளர்
பத்மநாபா ஈபிஆர்எல்எவ்
யாழ் பிராந்திய செயலாளர்
பத்மநாபா ஈபிஆர்எல்எவ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக