திங்கள், 22 நவம்பர், 2010

பதவியிலிருந்து விலக எதியூரப்பாவுக்கு பாஜக மேலிடம் உத்தரவு

ரூ.500 கோடி நில ஊழலில் சிக்கிய எதியூரப்பாவை, முதல்வர் பதவியிலிருந்து விலகுமாறு பாஜக மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் பதவியிலிருந்து விலக எதியூரப்பா பிடிவாதம் காட்டி வருகிறார். நேற்று டெல்லியில் நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கும் அவர் வர மறுத்து விட்டார்.

தனது மகன்கள், மகள், தங்கை, தங்கை மருமகன் ஆகியோருக்கு ரூ. 500 கோடி மதிப்புள்ள நிலங்களை அடிமாட்டு விலைக்கு கொடுத்ததாக பெரும் சர்ச்சையில் சிக்கினார் எதியூரப்பா. இந்த ஊழலை மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி வெளிக் கொணர்ந்ததைத் தொடர்ந்து வாங்கிய நிலங்களை எதியூரப்பா குடும்பத்தினர் திரும்பக் கொடுத்து விட்டனர்.

ஆனால் இந்த ஊழலால் பாஜகவின் பெயர் பெருமளவில் நாறிப் போய் விட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்துக் கொண்டிருக்கும்போது, எதியூரப்பாவின் ஊழல் வந்து பாஜகவை பெரும் நெருக்கடிக்குள்ளாக்கி விட்டது.

இதையடுத்து எதியூரப்பாவை பதவியிலிருந்து நீக்க பாஜக மேலிடம் முடிவு செய்தது. இதற்காக நேற்று மாலை பாஜக உயர் மட்டத் தலைவர்கள் கூட்டம் நடந்தது. இதில் அத்வானி, கத்காரி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு எதியூரப்பாவும் அழைக்கப்பட்டிருந்தார்.

கூட்டத்தில் தான் கலந்துகொள்வேன் என்று எதியூரப்பா முதலில் தெரிவித்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் போகவில்லை. மாறாக தனது சார்பில் 2 பேரை அனுப்பி வைத்தார். இதனால் கட்சி மேலிடம் கடும் அதிருப்தி அடைந்தது.

கூட்டத்தில் எதியூரப்பா பதவியை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொள்வது என முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவு உடனடியாக எதியூரப்பாவுக்கும் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய எதியூரப்பா தனக்கு 120 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக தெரிவித்தார். நான்தான் முதல்வர். என்னை நீக்கி விட்டு வேறு ஒருவரை போடுவதாக இருந்தால் அவர் எதியூரப்பாவாக மட்டுமே இருக்க முடியும் என்றும் கூறியிருந்தார்.

ஆனால் எதியூரப்பா கூறியது போல அவருக்கு 120 பேரின் ஆதரவு இல்லை என்றும், அவர் சார்ந்த லிங்காயத் சமுதாய எம்.எல்.ஏக்கள் கூட எதியூரப்பாவுக்கு ஆதரவு தர முன்வரவில்லை என்பதும் பாஜகமேலிடத்திற்குத் தெரிய வந்தது. இதையடுத்தே அவரை பதவி விலகுமாறு கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் பதவி விலகுவதற்கு தற்போது கட்சி மேலிடத்திற்கு சில நிபந்தனைகளைப் போட்டுள்ளார் எதியூரப்பா. ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமந்து நிற்கும் ரெட்டி சகோதரர்கள் உள்ளிட்டோர் மீதும் இதேபோன்ற நடவடிக்கை பாயட்டும், நான் பதவி விலகுகிறேன் என்று அவர் கட்சித் தலைவர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தனக்கு எதிராக அதிருப்தியாளர்களை உருவாக்கி, திருப்பி விட்ட மாநில பாஜக தலைவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் நான் விலகுவேன் என்றும் எதியூரப்பா கூறியுள்ளார். இந்த நிபந்தனைகளை தன்னை வந்து சந்தித்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஜெயதேவ், பாஜக எம்.பி. குமார் ஆகியோரிடம் தெரிவித்தார் எதியூரப்பா.

எதியூரப்பா இப்படி நிபந்தனைகள் போட்டாலும் கூட அவர் விரைவில் விலகி விடுவார் என்று பாஜக மேலிடம் நம்புகிறது. இதைத் தொடர்ந்து இன்று எதியூரப்பாவுக்குப் பதில் யாரை முதல்வராக்குவது என்பது குறித்து பாஜக மேலிடம் ஆலோசனை நடத்தவுள்ளது.

ஒக்கலிகா சமுதாயத்தைச் சேர்ந்த சதானந்த கெளடா, லிங்காயத்துத் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், மூத்த அமைச்சரான வி.எஸ். ஆச்சார்யா ஆகியோரது பெயர்கள் அடுத்த முதல்வர் பதவிக்கு அடிபடுகின்றன.

அதேபோல கட்சியின் பொதுச் செயலாளரான அனந்தகுமார், ஊழல் கறை ஏதும் படியாத சுரேஷ்குமார், ஒக்கலிகா பிரிவைச் சேர்ந்தவரும், அமைச்சருமான அசோக் ஆகியோரும் கூட பட்டியலில் உள்ளனர். இவர்களில் சுரேஷ்குமாரும், அனந்தகுமாரும் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். கர்நாடக அரசியலில் ஒக்கலிகா, லிங்காயத்து ஆகிய இரு பிரிவுகள்தான் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் இவர்களுக்கு வாய்ப்பு இருக்காது என்று கருதப்படுகிறது.

இன்று மாலைக்குள் அடுத்த முதல்வர் யார் என்பது தெரிந்து விடும்.

ஒரே மாதத்தில் ஊழல் காரணமாக பதவியை இழக்கும் 2வது முதல்வர் எதியூரப்பா என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மகாராஷ்டிர முதல்வராக இருந்த அசோக் சவான், ஊழல் புகார் காரணமாக பதவி விலகினார் என்பது நினைவிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக