புதன், 24 நவம்பர், 2010

ஜெமினியின் ஐந்து புதல்வியரும் தங்களின் தந்தைக்கு வியத்தகு விழாவாக



எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகியோரை மக்களும், ரசிகர்களும் இதய தெய்வங்களாகவே கொண்டாடிக் கொண்டிருந்த அதே காலத்தில்... அவர்களின் சாயலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நடிப்பில், தனக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்தி... தனக்கெனவும் ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்தவர் ஜெமினி கணேசன்.
1947 ல் மிஸ்.மாலினி படத்தில் சிறு வேடம் ஒன்றின் மூலமாகத் துவங்கியது ஜெமினியின் திரை வாழ்க்கைப் பயணம். 1952 ல் தாயுள்ளம் படத்தில் ‘அழகான’ வில்லனாக, 1953 ல் ஏ.வி.எம்.இன் ‘பெண்’ படத்தில் கதாநாயகனாக பரிணாம வளர்ச்சிப் பெற்று... தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி மற்றும் ஒரே ஒரு இலங்கைப் படம் என பல மொழிகளிலும் பலவிதமான நடிப்பை வெளிப்படுத்தி 200 க்கும் மேற்பட்ட படங்களில், மூன்று தலைமுறைகள் கடந்து கடைசி வரை காதல் மன்னனாகவே வாழ்ந்தவர் ‘பத்மஸ்ரீ’ நடிப்புச் செம்மல் ஜெமினி கணேசன்.

நவம்பர் 17ஆம் தேதி அன்று ‘காதல் மன்னன்’ என அனைவராலும் கொண்டாடப்பட்ட ஜெமினியின் 90 வது பிறந்த நாள். இதனையொட்டி நவம்பர் 21ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் மிகச்சிறந்த விழாவாக கொண்டாடினர் அவரது குமாரத்தியர்கள்.
ஜெமினியின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம், மற்றும் ஜெமினியின் ‘வாழ்க்கைப் படகு’ என்னும் புத்தகம் ஆகியவற்றை தமிழக முதல்வர் கலைஞர் வெளியிட, முறையே கே.பாலசந்தர், வாலி, வைரமுத்து ஆகியோர் பெற்று கொள்ளும் விதத்தில்... ரேவதி சுவாமி நாதன், மருத்துவர் கமலா செல்வராஜ், நாராயணி கணேஷ், மருத்துவர் ஜெயா ஸ்ரீதர் மற்றும் விஜயா சாமுண்டீஸ்வரி ஆகிய ஜெமினியின் ஐந்து புதல்வியரும் தங்களின் தந்தைக்கு வியத்தகு விழாவாக எடுத்திருந்தனர்.
தமிழக முதல்வர் கலைஞர் , பாலசந்தர் , வாலி, வைரமுத்து ஆகியோர் ஜெமினியை வாழ்த்திப் பேசினர். அனைவரின் வாழ்த்துகளையும் சேர்த்து அவர்கள் பேசிய வாழ்த்து மொழி நம் நந்தவனத்தில் எழுத்து மொழியாக...

முதல்வர் கலைஞர் :
ஜெமினி எல்லோராலும் நேசிக்கப்படுபவர்.மறைந்தும் மறையாத மாணிக்கம் அவர். வைரமுத்து கூறியதுபோல், ஆண்கள் கூடி, ஏன் மகன்கள் இருந்து நடத்தினால் கூட, இவ்வளவு சிறப்பாக இந்த விழாவை நடத்தியிருக்க முடியுமா என்று எண்ணுகின்ற வகையில் இந்த விழாவை கமலா செல்வராஜ் நடத்தியிருப்பது பாராட்டுக்குறியது. அவருக்கு ஜெமினி சார்பில் என் வாழ்த்துகள்.

ஜெமினி கணேசன், 17.11.1920 ல் புதுக்கோட்டையில் பிறந்தவர். அவருடைய தாயார் கங்கம்மா. தந்தையார் ராமு. ஜெமினியின் சின்ன தாத்தா நாராயணசாமி. அவருக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டன. எனவே அவர் குழந்தைக்காக இரண்டாம் தாரமாக எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த "சந்திரம்மா'' என்ற பெண்ணை மணந்தார். அந்த மணம் கலப்பு திருமணம். இதை ஜெமினி கணேசன் பிறந்த பிராமண சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரைச் சாதியிலிருந்தே தள்ளி வைத்தது. ஆகவே, ஜெமினி பிறந்தபோதே ஒரு புரட்சி முழக்கத்தோடு பிறந்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
இந்தக் கலப்பு திருமணத்திற்கு பிறகு, சந்திரம்மா மூலம் நான்கு குழந்தைகள் பிறந்தன. அவற்றுள் மூத்த குழந்தைதான் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி.
ஆக முத்துலெட்சுமி ரெட்டி இசை வேளாளர் சமுதாயத்தை சார்ந்தவர். சென்னை மருத்துவக் கல்லூரியில் முதன்முதலாக மருத்துவம் படித்த பெண்மணியான முத்து லெட்சுமி ரெட்டி புதுக்கோட்டை மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்த சுந்தர ரெட்டி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தக் கலப்பு திருமணத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் சமுதாய சீர்திருத்த பணிகளில் ஈடுபட்டனர்.
இது காமராஜர் அரங்கம் என்பதால், காமராஜரின் குருநாதர் சத்திய மூர்த்தி பற்றி நினைவூட்டுவதில் தவறில்லை. முத்துலெட்சுமி சென்னை மாகாண சட்டசபையில் 1929ல் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக சட்டசபையில் தேவதாசி முறை ஒழிப்பு என்னும் சட்டத்தை கொண்டு வந்தப்போது... ஒருவர் எழுந்து, “அந்த வழக்கம் இருப்பது நல்லது. தேவதாசி முறை தொடர வேண்டும். ஏனென்றால், காளைகள் வெறித்தால் சாந்தப்படுத்தும் சமுதாயம் அந்தப் பெண்கள் சமுதாயம். எனவே பொட்டுக்கட்டும் வழக்கம் தொடர்ந்து அனுமதிக்கப்படவேண்டும்” என்று சொன்னார். அவர்தான் தீரர் சத்திய மூர்த்தி.
அதை எதிர்த்து ஒரு பெண் குரல் கிளம்பியது. “பெண்கள் சமுதாயம் காளைகள் வெறித்தால் சாந்தப்படுத்தும் சமுதாயம் என்றால், அப்படிப்பட்ட பெண்களை உங்கள் வீட்டிலிருந்து அனுப்புங்கள் பார்க்கலாம்,” என்று அந்தப் பெண்குரல் முழங்கியது. அந்தப் பெண்குரல்தான் முத்துலெட்சுமி ரெட்டி.
மன்னிக்க வேண்டும் ஒரு வரலாற்று உண்மையை எடுத்து சொல்லும் போது அதிலே குறை வரக்கூடாது. அதனாலேதான் அந்த உண்மையை அப்படியே சொல்கிறேன். இந்திய பூபாளகத்தில், அன்று புரட்சிகரமாக முழங்கி, தேவதாசி முறையை ஒழித்த முத்துலெட்சுமி ரெட்டியாரின் திருவுருவப் படத்தை, எங்கள் இயக்க ஆட்சி நடைபெறும் போது, சட்டமன்ற மேலவையிலும், பேரவையிலும் வைத்து கௌரவபடுத்தியுள்ளோம்.


இதை இந்த விழாவில் சொல்வதற்கு சம்பந்தம் இருக்கிறது. ஜெமினி கணேசனுடைய அத்தைதான் முத்துலெட்சுமி ரெட்டி. அவருடைய படத்தை வைத்திருப்பது மட்டுமல்லாமல், அந்த அம்மையாரின் பெயரால் கர்பிணி பெண்களின் நலத்தை பாதுக்கும் திட்டத்திற்கு, “டாக்டர் முத்து லெட்சுமி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம்” என்று பெயர் சூட்டி இருக்கிறோம்.
இத்திட்டத்தின் கீழ் 2006 ஆண்டுக்கு பிறகு, கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து உட்கொள்ள, 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. குழந்தைகள் பிறப்பதற்கு முன் 3000, குழந்தை பிறந்ததற்கு பின் 3000 என 6000 ரூபாய் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்கிறோம் .இந்தத் திட்டத்திற்கும் “டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதி உதவி திட்டம்” என்றுதான் பெயர் வைத்துள்ளோம்.


அந்த முத்து லெட்சுமி ரெட்டி அம்மையாரின் குடும்பத்து பிள்ளை ஜெமினி கணேசனும் பள்ளிப்பருவத்திலேயே புரட்சிகரமாகவே விளங்கினார். ஜெமினி அவர்களே எழுதியிருக்கும் புத்தகத்தில், அவரது சமஸ்கிருத ஆசிரியர் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
அதில், “ ராஜா முத்தையா செட்டியார் உயர் நிலைப்பள்ளியில் நான் 7 ஆம் வகுப்பு படித்த போது, இருபது மாணவர்கள் மத்தில் பிராமணர் அல்லாத ஒரே மாணவன் கோவிந்தராஜுலு. ஆனால் அவனுடைய சமஸ்கிருத உச்சரிப்புதான் மிக நன்றாக இருக்கும். அப்படியும் ஆசிரியர், “பிராமணர் அல்லாத சூத்திரன் ஏன் சமஸ்கிருதம் படிக்க வேண்டும்? “ என கேட்பார். ஆசிரியரே அப்படி கேட்டவுடன், கோபத்தால் கொதித்தேன். இனம், குலம், மதம் என்ற சின்ன வட்டத்திற்குள் சிக்கிவாழ்வது தவறு . பரந்து விரிந்த இந்த உலகத்தில் பரத்த மனமுடையவனாக, இந்தியன் என்ற உணர்வோடு வாழ வேண்டும் என்பது அப்போதிலிருந்து எனக்குள் ஊறிப்போனது.” என்று ஜெமினி கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
ஜெமினி கணேசன் அவருடைய வாழ்க்கையில் சீர்திருத்தவாதியாக, சாதி, மதம் இவைகளையெல்லாம் மறுப்பவராக, ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கருத்து கொண்டவராக, எல்லோரையும் நண்பர்களாகப் பெறுகிற அந்த பரந்த மனப்பான்மை உள்ளவராக வாழ்ந்து காட்டினார்.
அவருடைய வாழ்க்கைப் பாதை, நடந்து பார்த்து, உணர்ந்து பார்த்து, அவர் வழியிலே நாமும் புகழொளியைப் பரப்ப வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழின்பால் அவருக்குள்ள ஆர்வத்தை நான் பல நேரங்களில் பார்த்திருக்கிறேன். ஒருமுறை நான் கோலாலம்பூரில் தமிழ் மாநாட்டிற்குச் சென்றிருக்கிறேன். அந்த மாநாட்டிலே திரும்பிப் பார்த்தால், வணக்கம் என்ற ஒலி கேட்கிறது. யாரென்று பார்த்தால், ஜெமினி கணேசன்.


அந்த மாநாட்டிற்கு வந்து எங்களோடு இரண்டொரு நாட்கள் தங்கி பொழுதைப் போக்காமல், தமிழைப் பருகி, கருத்துக்களை ஏற்றுச் சென்றவர் அருமை நண்பர் மறைந்த ஜெமினி கணேசன். அதனால்தான் எடுத்த எடுப்பிலேயே, மறைந்தும் மறையாத மாணிக்கம் என்று நான் அவரை சொன்னேன். அவர் மறையவில்லை. மறைந்தவர்களை நாம் மறைந்தவர்கள் என்று சொல்லாமல், மறையாதவர்கள் என்று சொன்னால் தான் அவர்களுடைய புகழும், பெருமையும் நம்முடைய நெஞ்சிலே என்றென்றும் பதிந்து நிற்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக