புதன், 3 நவம்பர், 2010

அதிசயமே அசந்து போகும் ஐஸுக்கு 37!



              ரும்பிலும் ஒரு இதயம் முளைக்கும், இவரின் அழகைப் பார்த்தால் ரோபோவிற்கும் காதலிக்கிற ஆசை வரும். அப்படி ஒரு அழகு ஐஸ்வர்யா ராய். உலக ரசிகர்களை தன்பக்கம் திருப்பிய இந்திய பிரபலங்களில் இவரும் ஒருவர். இன்று (01.11.2010) தனது 37 வது பிறந்த நாளை காண்கிறது அதியசமே அசந்து போகும் இந்த அதிசய தேவதை.


பொதுவாகவே நடிகைகள் தன் 30 வது வயதில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அதையும் மீறி நடிக்க வந்தால் டூயட் பாடிய அதே நடிகர்களுக்கு அம்மாவாகத்தான் நடிக்க முடியும். 'என்ன கொடுமை சார்' இது என்று சொல்லும் அளவிற்கு பல நடிகைகளுக்கு இந்த கொடுமை நடந்திருக்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் ஐஸ் ஒரு அதிசயம். ராவணன், எந்திரன் என பரபரப்புக்குப் பின்னர் இப்போது இந்தியாவே எதிர்பார்க்கும் குசாரிஷ்,  ஆக்‌ஷன் ரீப்ளே என ஐஸ்வர்யா ராய் நடிப்பில் இரண்டு படங்கள் விரைவில் வெளிவர இருக்கிறது.  

ஐஸ்வர்யா 1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றார். ஐஸ்வர்யாவிற்கு ஆர்கிடெக்ட் ஆகவேண்டும் என்பதே ஆசை. அந்த நேரத்தில் ஐஸ் நடித்த விளம்பர படம் செம ஹிட். இந்த அழகு தேவதையின் முதல் திரைப்படம் தமிழில் தான். மணிரத்னம் இயக்கத்தில் 'இருவர்'.

இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் ஐஸ். 'இருவர்' படத்தில் ஹலோ சொன்னவர் இன்று 'எந்திரன்' வரை அசத்திவருகிறார். இந்த அசத்தல் இன்னும் தொடர இருக்கிறது. அன்று தொடங்கி இன்று வரை ஐஸின் அழகுக் கடலில் மூழ்கியபடி உள்ளனர் ரசிகர்கள். அழகையும் தாண்டி ஐஸிடம் ஒரு தனித் துவம் இருக்கிறது என்பதே அவர் ரசிகர்களின் கருத்து.



ஒரு மேடையில் ஐஸுக்கு இப்படி ஐஸ் வைத்தார் பார்த்திபன்... மைசூர் பாக்கை நாக்கில் வைத்தால் கரைந்துவிடும், ஆனால் அதற்கு பதிலாக நாக்கே கரைந்தால் எப்படி இருக்கும்! அப்படி ஒரு அழகு ஐஸ்! ஷங்கர் தயாரிப்பில் உருவான 'ரெட்டைசுழி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் ஐஸ்வர்யா ராய். விழாவில் இயக்குனர் பாலசந்தர் பேசும்போது, இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த ஷங்கருக்கு நான் நன்றியை சொல்லிக் கொள்கிறேன். ஐஸ்வர்யா பக்கத்தில் அமரும் வாய்ப்பு எனக்கு இனி எப்போது கிடைக்கப் போகிறது... என்று சொன்னதும் கைதட்டலில் அரங்கம் அதிர்ந்தது. ஐஸ்வர்யா பக்கத்தில் அமர்ந்ததும் இந்தக் கிழவனுக்கே இவ்வளவு சிலிர்ப்பு ஏற்படுகிறதே, இளவட்டத்துக்கு எப்படி இருக்கும் என்று சொன்னதும் சிரிப்பொலியில் அரங்கம் மீண்டும் சிதறியது. 

அதே மேடையில் இயக்குனர் பாரதிராஜா பேசினார். ஐஸ்வர்யாவைப் பார்த்ததும் பாலசந்தருக்கே தலை, கால் புரியவில்லை என்றால் நான் எந்த நிலையில் இருப்பேன் என்பது உங்களுக்கே தெரியும். இன்று முதல் ஐஸுக்கு நான் ரசிகன் ஆகிவிட்டேன். அழகையும் தாண்டி ஏதோ ஒரு விஷயம் அவரிடம் இருக்கிறது. அவர் பார்வையின் கூர்மை, எதார்த்தமான சிரிப்பு என அடுக்கிக் கொண்டே போனார் பாரதிராஜா. மேலும் அவர், இந்த விழா தொடங்கி பல நேரங்கள் ஆகிவிட்டது. பலரும் பேசிக் கொண்டிருகிறார்கள். ஆனால் மேடைக்கு வரும்போது எவ்வளவு உற்சாகமாய் ஐஸ் இருந்தாரோ அதே உற்சாகம் இப்போதும் அவரிடம் இருக்கிறது என்று சொல்லி எல்லோரையும் வியப்புக்குள் ஆழ்த்தி வியந்து போனார் பாரதிராஜா.
 

ஐஸ்வர்யா தன் வேலையில் காட்டும் மரியாதையை பல மேடைகளில் சொல்லி பாராட்டி இருக்கிறார் ஷங்கர். இவ்வளவு ஏன் இந்த ஐம்பது கிலோ தங்கம் நம் சூப்பர் ஸ்டாரை எத்தனை நாட்கள் ஏங்க வைத்தது. சினிமாவில் ரஜினியின் உச்சகட்ட லட்சியமே தான் ஐஸ்வர்யாவுடன் டூயட் பாட வேண்டும் என்பது தானே! அதை ஷங்கரின் எந்திரன் நிறைவேற்றி வைத்திருப்பது ஒரு சுவாரஸ்யம். 

இப்போது ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் குசாரிஷ் படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் சமீபமாக ஐஸ்வர்யாவைப் பற்றி பேசும் போது நடிப்பையும் தாண்டி அவரிடம் கூர்மையான அறிவுத்திறன் இருக்கிறது. இப்படி ஒரு நடிகை நம் இந்திய சினிமாவிற்கு கிடைத்திருப்பது நமக்கு பெருமையான விஷயம் என்று சொல்லி இருக்கிறார்.


பாலிவுட் மட்டும் இல்லாது ஹாலிவுட்டிலும் முக்கிய நடிகைகளின் பட்டியலில் ஐஸும் ஒருவர். 2003ல் கேன்ஸ் திரைப்பட விழாவின் ஜுரிக்களில் பங்கேற்ற முதல் இந்திய நடிகை ஐஸ். ஐஸ்வர்யா ராய்க்கு 'ஐஸ்' என்று செல்லப் பெயர் வைத்தவர்கள் தமிழ் ரசிகர்கள்தான். சென்னைக்கு வரும்போதெல்லாம் இந்த செல்லப் பெயர் வைத்ததற்கான நன்றியை தெரிவித்துக் கொள்வார் ஐஸ்.

இப்படி பல புகழுக்கு சொந்தக்காரராக இருப்பதுபோலவே தன் சொந்த வாழ்வில் சந்தோஷத்துக்கு குறைவின்றி வாழ்கிறார் ஐஸ்வர்யா ராய் பச்சன். இந்த அதிசய தேவதையின் சாகசங்கள் இன்னும் தொடர வாழ்த்துவோம்.

பிறந்தநாள் வாழ்த்துகள் ஐஸ்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக